Published : 21 Oct 2014 12:03 PM
Last Updated : 21 Oct 2014 12:03 PM
இந்தியாவின் அதிக எண்ணிக்கையில் இரு சக்கர வாகனங்களைத் தயாரிக்கும் ஹீரோமோட்டோ கார்ப் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க 5,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல் கொலம்பியா, வங்கதேசம் ஆகிய நாடுகளில் தொழிற்சாலையை அமைக்கவிருக்கிறது.
இந்தியாவில் குஜராத் மற்றும் ஆந்திர பிரதேசத்தில் தொழிற்சாலை அமைக்கவும், 2020-ம் ஆண்டுக்குள் 1.2 கோடி வாகனங்களை உற்பத்தி செய்யவும் இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது. அடுத்த ஆண்டு இறுதியில் ஐரோப்பிய சந்தையில் தடம் பதிக்கவும் திட்டமிட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் நீம்ரானாவில் புதிய தொழிற்சாலை தொடக்கவிழாவில், ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பவன் முன்ஜால் இத்தகவல்களைத் தெரிவித்தார். புதிய தொழிற்சாலையில் 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் கொலம்பியா தொழிற்சாலையின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. வங்கதேசத்தில் தொழிற்சாலைக்கான வேலைகள் கூடிய விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
வரும் நவம்பர் மாதம் குஜராத் (ஹலோல்) தொழிற்சாலைக்கான பணிகள் தொடங்கும். அதைத் தொடர்ந்து ஆந்திர ப் பிரதேசத்தில் அமையவிருக்கும் திட்டத்துக்கான வேலை ஆரம்பிக்கும். குஜராத் தொழிற்சாலை ஆண்டுக்கு 18 லட்சம் மோட்டார் சைக்கிள்களை உற்பத்தி செய்யும் திறனுடையது. கொலம்பியா மற்றும் வங்கதேசத்தில் அமையவிருக்கும் தொழிற்சாலைகள் ஆண்டுக்கு 1.5 லட்சம் வாகனங்களைத் தயாரிக்கும் திறனுடையவை.
ஆந்திரபிரதேசத்தில் அமையவிருக்கும் தொழிற்சாலை ஆண்டுக்கு 18 முதல் 20 லட்சம் வாகனங்களைத் தயாரிக்கும் திறனுடையது என்று பவன் முன்ஜால் தெரிவித்தார். குஜாராத் மற்றும் ஆந்திரத்தில் அமையவிருக்கும் திட்டத்துக்கு 1,600 கோடி ரூபாய் முதலீடும், கொலம்பியாவில் அமையவிருக்கும் திட்டத்துக்கு 200 கோடி ரூபாயும், வங்கதேசத்தில் அமையவிருக்கும் திட்டத்துக்கு 100 கோடி ரூபாய் முதலீடும் செய்யப்படும் என்றார்.
அடுத்த ஆண்டு இறுதியில் ஐரோப்பிய சந்தையில் நுழையவிருக்கிறோம். இதேபோல 2016-ம் ஆண்டில் அமெரிக்க சந்தையில் நுழைவோம் என்றும் தெரிவித்தார். உள்நாட்டு சந்தை குறித்து பேசிய பவன் முன்ஜால், 50 சதவீத சந்தையை பிடிப்பதுதான் எங்கள் இலக்கு என்றார். எங்களது ஸ்கூட்டர் தயாரிப்புக்கு சந்தையில் தேவை இருக்கிறது. ஆனால் உற்பத்தி பிரச்சினை காரணமாக இலக்குகளை எட்ட முடியவில்லை. இந்த புதிய தொழிற்சாலைகள் மூலம் தேவையை பூர்த்தி செய்யமுடியும் என்றார்.
2015-ம் ஆண்டின் முதல் அரையாண்டுக்குள் அதிக சிசி திறன் உள்ள அதாவது 250 சிசி-க்கும் மேலான திறன் உள்ள மோட்டார் சைக்கிள்களை வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.சர்வதேச அளவில் பிரபலமாகவேண்டும் என்றால் விளையாட்டு மற்றும் அது சார்ந்த துறையில் ஸ்பான்சர் செய்வது முக்கியம் என்றார்.
தற்போது தொடங்கப்பட்டிருக்கும் நீம்ரானா தொழிற்சாலையில் ஆண்டுக்கு 7.5 லட்சம் வாகனங்கள் தயாரிக்க முடியும். வருங்காலங்களில் அதிநவீன இரு சக்கர வாகனங்களை இந்த தொழிற்சாலையில் தயாரிக்க முடியும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT