Published : 31 Mar 2014 12:00 AM
Last Updated : 31 Mar 2014 12:00 AM

`செபி’-யின் கரம் வலுவடைந்துள்ளது

பங்கு பரிவர்த்தனை வாரியத்துக்கு (செபி) கூடுதல் அதிகாரம் அளிக்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் மறு ஒப்புதல் அளித்துள்ளார். இது செபி-யின் கரத்தை வலுவாக்கியுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முதலீட்டாளர்களை ஏமாற்றும் நிதி நிறுவனங்கள் மீது நேரடியாக நடவடிக்கை எடுப்பதற்கு செபி தலைவருக்கு அதிகாரம் அளிக்க இந்த அவசர சட்டம் வகை செய்கிறது.

ஏற்கெனவே முதலீட்டாளர் களுக்கு எதிராக செயல்படும் நிறுவனங்கள் மீது செபி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதிகாரத்தை மேலும் வலு வாக்க இப்புதிய சட்டம் வகை செய்துள்ளது. கடந்த 27-ம் தேதி இந்த அவசர சட்டத்தை மீண்டும் அமல்படுத்த மத்திய அமைச்சரவை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்தது. இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் அவசர சட்டத்தை மீண்டும் பிறப்பிக்க ஒப்புதல் அளித்தார். இதன் மூலம் முதலீட்டாளர்களிடமிருந்து உரிய அனுமதி பெறாமல் முதலீடுகளை திரட்டும் நிதி நிறுவனங்ளைக் கண்காணிக்கவும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கவும் வழி ஏற்பட்டுள்ளது. இந்த அவசர சட்டத்தின்படி மோசடி பேர்வழிகள் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறையின் உதவியை செபி நேரடியாக நாட முடியும். மேலும் சோதனை நடத்தவும், சொத்து களை பறிமுதல் செய்யவும் காவல்துறை உதவியை நாடவும் வழியேற்பட்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை அவசர சட்டம் 2014 இதற்கு முன்பு ஜூலை 18, 2013-ல் பிறப்பிக்கப்பட்டது. இந்த அவசர சட்டம் கடந்த ஜனவரி மாதம் காலாவதியானது. நாடாளுமன்றத்தில் இதை சட்டமாக இயற்ற முடியாததால் இதை மீண்டும் கொண்டு வர மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x