Published : 08 Jan 2014 09:44 AM
Last Updated : 08 Jan 2014 09:44 AM

அதிக விளைச்சலை தரும் புதிய ரக பாசுமதி அரிசி

அதிக விளைச்சலைக் கொடுக்கும் புதிய ரக பாசுமதி அரிசியை இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் (ஐஏஆர்ஐ) உருவாக்கியுள்ளது. இந்த ரகத்துக்கு பூசா-1509 என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த பாசுமதி ரகம் குறுவை சாகுபடி பருவத்தில் 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. அதிக லாபம் தரும் ரகமாக இருக்கும்பட்சத்தில் எதிர்வரும் ராபி பருவத்தில் 10 லட்சம் ஹெக்டேரில் இது பயிரிடப்படலாம் என்று ஐஏஆர்ஐ மையத்தைச் சேர்ந்த இப்புதிய ரகத்தைக் கண்டுபிடித்த பிரிவின் தலைவர் அசோக் கே. சிங் தெரிவித்தார்.

இதுவரை பூசா-1121 ரகமே மிகவும் பிரபலமாக விவசாயிகளால் பயிரிடப்படும் பாசுமதி ரகமாகும். புதிய ரகமான பூசா 1509 பாசுமரி நெல் 115 முதல் 120 நாளில் அறுவடைக்குத் தயாராகிவிடும். விவசாயிகள் பயன்படுத்தும் பூசா 1121 மற்றும் பாசுமதி ரகங்கள் 140 முதல் 145 நாள்களில்தான் அறுவடைக்குத் தயாராகும்.

புதிய ரகம் பயிரிடுவதன் மூலம் 30 நாள்களை விவசாயிகள் சேமிக்க முடியும். இதன் மூலம் ஜூன் மாதத்தில் பயிர் நடுவதற்குப் பதிலாக ஜூலை மாதத்தில் நாற்று நடலாம். தொடர்ந்து மழை ஆரம்பமாவதால் விளைச்சலும் அதிகரிக்கும். மேலும் ஆண்டுக்கு 60 நாள்கள் கிடைப்பதால் குறுகிய கால பயிர்களான பச்சைப் பயறு போன்ற பயறு வகைகளைப் பயிரிட முடியும்.

பூசா 1509 ரகம் ஒரு ஏக்கருக்கு 25 குவிண்டால் வரை விளைச்சல் தரும். இப்போது பயிரிடப்படும் பூசா 1121 ரகம் ஒரு ஏக்கருக்கு 20 குவிண்டால் வரை விளைச்சல் தருகிறது. மேலும் இதன் உயரம் 80 செ.மீ வரையாகும். பூசா 1121 120 செ.மீ. வரை வளரும். புதிய வகை செடி குறைந்த உயரம் உள்ளதால் இதற்கு உரமிடுவது குறையும். பயிர்க்காலம் முழுமைக்கும் 2 மூட்டை முதல் 3 மூட்டை யூரியா பூசா 1509 ரகத்துக்குப் போதுமானது.

30 நாள்களுக்கும் குறைவான காலத்தில் பயிர் சாகுபடி அத்துடன் 25 சதவீத கூடுதல் விளைச்சல் ஆகியன பூசா 1509 ரகத்தின் சாதக அம்சம் என்று ஹரியாணா மாநிலத்தில் பானிபட் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி பிரீத்தம் சிங் கூறுகிறார். இந்த முறை 28 ஏக்கரில் பூசா 1509 ரகம் பயிரிட்டுள்ளேன், 11 ஏக்கரில் பூசா 1121 பயிரிட்டுள்ளேன். அடுத்த முறையிலிருந்து முழுவதுமாக பூசா 1509 ரகத்தை பயிரிடத் திட்டமிட்டுள்ளேன் என்கிறார் பிரீத்தம் சிங்.

பாசுமதி அரிசி வாசனையில் பூசா 1121-ஐக் காட்டிலும் மிகச் சிறந்த மணம் வீசக் கூடியதாக பூசா 1509 ரகம் உள்ளது என்றும் அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x