Last Updated : 23 Dec, 2013 03:24 PM

 

Published : 23 Dec 2013 03:24 PM
Last Updated : 23 Dec 2013 03:24 PM

கலப்பட மணலைக் கண்டுபிடிப்பது எப்படி?

கடந்த வாரம் சிமெண்ட் தரத்தைச் சோதிப்பது குறித்துப் பார்த்தோம். இந்த வாரம் முக்கியக் கட்டுமானப் பொருட்களான மணல், இரும்புக் கம்பிகள் பற்றியும், அவற்றின் தரத்தை எப்படி அறிவது பற்றியும் பார்ப்போம்.

மணல்:

#தெளிந்த நீரோடை எப்படி இருக்கிறதோ அதுபோலவே ஆற்று மணலும் இருக்கும். வாங்கிய மணலில் அதிகத் தூசு துரும்புகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. இல்லையென்றால் நன்றாகச் சலித்து மணலைப் பயன்படுத்த வேண்டும்.

#ஆற்று மணலில் வண்டல் மண் கலப்பது தவிர்க்க முடியாததுதான். ஆனாலும், மணலின் மொத்த எடையில் 8 சதவீதம் வண்டல் இருந்தால் பிரச்சினையில்லை. அதற்கு மேல் இருந்தால் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. அதிகளவு வண்டல் கலந்திருந்தால் அதன் நிறமே காட்டிக் கொடுத்துவிடும்.

#இப்போது மணலுக்குத் தட்டுப்பாடு இருப்பதால் கலப்படங்கள் அதிகம் நடக்கின்றன. குறிப்பாக ஆற்று மணலுடன் கடல் மணலைக் கலந்து விற்பனை செய்யும் ஏமாற்று வேலைகளும் நடக்கின்றன. எனவே வீடு கட்டுவோர் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். மணலைச் சிறிது நாவில் வைத்துச் சோதிக்கலாம். மணல் கரித்தால் அதில் நிச்சயம் கடல் மணல் கலந்துள்ளது என்று அர்த்தம். இந்த மணலைப் பயன்படுத்திக் கட்டப்படும் சுவர்கள் பெரும்பாலும் ஈரமாகவே இருக்கும். சுவர் விரைவிலேயே உதிர்ந்துவிடும். குறிப்பாக மழை பெய்தால் சீக்கிரம் சுவர்கள் அரித்து விடும்.

#மணலில் தவிடுபோல் நொறுங்கிப் போகக்கூடிய சிலிக்கா அதிகம் கலந்திருந்தாலும் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. ஏனென்றால், இது சிமென்ட்டுடன் கலந்து கட்டும் போது பிணைப்பு உறுதியாக இருக்காது.

இரும்புக் கம்பிகள்:

#கான்கிரீட்டுக்கு வலு சேர்ப்பவை இரும்புக் கம்பிகளே. அதனால் இரும்புக் கம்பிகள் வாங்குபோதும் கவனம் தேவை.

#உற்பத்தி ஆலையில் இருந்து தயாரிக்கப்பட்டு வரும் கம்பிகள், பட்டைகள், சட்டங்கள், சுருள்கள் போன்றவற்றில் சிறு பிசிறுகள் இருக்கலாம். வீடு கட்டும்போது இவற்றை அகற்றிய பின்னரே பயன்படுத்த வேண்டும்.

#இரும்பு கம்பிகளில் துரு இருக்கின்றனவா என்பதைக் கவனிக்க வேண்டும். இரும்பு கம்பியில் எந்த இடத்தில் பெயிண்ட் பூசப்பட்டிருந்தாலும் அவற்றை ஒதுக்கி விட வேண்டும். எண்ணெய், அழுக்கு, பிசுக்கு, சேறு போன்ற எந்த வித அசுத்தமும் கம்பிகள் மீது இருக்கக் கூடாது. அப்படியே வைத்துக் கட்டுமானத்தை எழுப்பினால் பிணைப்பு வலுவில்லாமல் போய்விடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x