Published : 17 Feb 2017 10:38 AM
Last Updated : 17 Feb 2017 10:38 AM

வணிக நூலகம்: ஊக்கம் என்னும் ஊட்டச்சத்து!

சரியான ஊக்கங்களின் உதவியோடு செயல்படுத்தப்படும் ஒரு செயல், திடமான வெற்றியைப் பெற்றுத் தரும் என்பதை நாம் அறிவோம். உடல் என்னும் செயல்பாட்டிற்கு கொடுக்கப் படும் வைட்டமின்களே ஊக்கங்கள். நாம் நம்மை சரிவர ஊக்கப்படுத்திக்கொள்ள நிறையவே மெனக்கெடுகிறோம். அதுபோலவே, நமது பணியாளர்கள், குடும்ப உறுப்பினர்கள், நிறுவன வாடிக்கையாளர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என மற்றவர் களை ஊக்கப்படுத்துவதற்கும், அவர் களிடமிருந்து நமக்கான ஊக்கங்களைப் பெறுவதற்கும் நிறைய நேரங்களையும் செலவழிக்கிறோம். ஆக, ஊக்கங்கள் என்பவை நமது ஒவ்வொரு செயல்பாட்டிலும் பிரதிபலிக்கக்கூடிய விஷயமாகவே இருந்து வருகின்றது.

நமது செயல்பாடுகளின் முக்கிய காரணியாகப் பார்க்கப்படும் ஊக்கத் தின் மீதான நமது பார்வை மற்றும் புரிதலை விடவும் உண்மையில் கொஞ்சம் சிக்கலான வழிகளில் அவை செயல்படுவதாகவே இருப்பதாக தெரிவிக்கிறார் பேஆஃப் (Payoff) என்னும் இந்தப் புத்தகத்தின் ஆசிரிய ரான, புகழ்பெற்ற உளவியல் பேராசிரி யர் டேன் எரிலி (Dan Ariely). ஊக்கப் படுத்துதல் எவ்வாறு செயல்படுகின்றது மற்றும் இந்த பண்பினை நாம் எவ்வாறு நமது வாழ்க்கையை வடிவமைக்கப் பயன்படுத்திக்கொள்வது போன்ற விஷயங்களைப் பற்றியதே இந்தப் புத்தகம்.

புரிதல் வேண்டும்!

ஒரு மருத்துவமனையில், மருத் துவக் கழிவுகளை அகற்றுதல் மற்றும் அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் உபகரணங்களை சுத்தப்படுத்துதல் போன்ற பணிகளுக் காக இளைஞன் ஒருவன் நியமிக்கப் படுகிறான். சில மாதங்களுக்குப் பிறகு அந்த வேலை தனக்கு பிடிக்க வில்லை என்றும் அதிலிருந்து வெளி யேற விரும்புவதாகவும் தன் தாயாரிடம் சொல்கிறான் அந்த இளைஞன். அதற்கு அவனது தாயார், அந்த பணியின் முக்கியத் துவத்தை அவனுக்குப் புரியவைக் கிறார். குப்பைகளையும் நோய்கிருமி களையும் சுத்தப்படுத்தும் பணி மிக வும் மேன்மையானது என்றும் பெருமை வாய்ந்த இந்த பணியினால் தினமும் பல மக்கள் நன்மையடைவதாகவும் சொல்கிறார் அவனின் தாயார். இதன் பிறகு இன்னும் அதிக ஆற்றலுடனும் விருப்பத்துடனும் தனது தூய்மைப் பணியை தொடர்கிறான் அவ்விளை ஞன்.

இம்மாதிரியான காலகட்டங்களில், நம்மால் மேற்கொள்ளப்படும் ஒரு செயல்பாடு மற்றவர்களுக்கு எவ்வகை யில் பயன்படுகிறது என்ற கேள்வியை நமக்குள் கேட்டுக்கொள்ள வேண்டியது அவசியம். மேலும், அதனால் நமக்கு ஏற்படும் புரிதலானது நம்மை நல்ல மாற்றங்களில் கொண்டுசேர்க்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

பார்வை மாற்றம்!

திரும்ப திரும்ப செய்யப்படும் தொடர்ச்சியான உற்சாகமற்ற தினசரி வேலைகளால் நாம் அவ்வப்போது சலிப்படைவதை உணர்ந்திருப்போம் அல்லவா!. நம்முடைய வீட்டிலோ அல்லது பணியிலோ இவ்வாறு ஏற்படும் இந்த நிலைமையை மாற்ற நம்மால் என்ன செய்ய முடியும்?. சூழ்நிலைகளை மாற்றியமைத்துக்கொள்ள சாத்திய மற்ற இம்மாதிரியான சந்தர்ப்பங் களில், நமது பார்வையை மாற்றிக் கொள்வதே இதற்கான ஒரே தீர்வு என்கிறார் ஆசிரியர்.

தினமும் தொடர்ந்து ஒரே மாதிரி யான மேடை நாடகத்தில் நடித்து வரும் நடிகரிடம், மாதக்கணக்கில் வருடக் கணக்கில் இவ்வாறு நடித்துவரும் உங்க ளுக்கு இப்பணி சலிப்பைத் தரவில் லையா? என்ற கேள்வி ஆசிரியரால் கேட் கப்படுகிறது. அதற்கு, தன் ஒவ்வொரு நாள் நடிப்பிலும், தான் வித்தியாசமாக எதையாவது செய்வதாக பதிலளிக் கிறார். தனது சைகைகள், அணுகுமுறை, உரையாடல்களின் நேர இடைவெளி, மாடுலேஷன் போன்றவற்றில் மாறுதல்களை புகுத்தி பரிசோதனைகளை செய்வதாகவும் தெரிவிக்கிறார் அந்த நடிகர். இந்த சின்ன சின்ன மாற்றங்கள் எவ்வாறு பார்வையாளர்களை சென்றடைகிறது என்பதையும் மனதில் குறிப்பெடுத்துக்கொள்கிறார். இதன்மூலம் இவரது பணியானது தொடர்ந்து அதிக சுவாரஸ்யத்துடன் தொடர்கிறது. ஆக, நமது அன்றாட பணி ஒரே மாதிரியானதாக இருந்தாலும்கூட, அதன் சுவாரஸ்யத்தை நமது மாறுபட்ட பார்வையினால் மேம்படுத்த முடியும் என்பதே ஆசிரியரின் வாதமாக இருக்கின்றது.

தேடலில் கவனம் தேவை!

தனிப்பட்ட அல்லது வேலை தொடர் பான அல்லது தொழில் சார்ந்த உங்களின் ஒரு செயல்பாட்டிற்கு சரியான ஊக்கம் தேவைப்படுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். வெறு மனே நாலாபுறமும் கிடைக்கும் ஊக்க காரணிகளையெல்லாம் பயன் படுத்திக்கொள்வீர்களா அல்லது சரி யான மற்றும் குறிப்பிட்ட செயலுக்கான தனிப்பட்ட ஊக்கத்தை மட்டும் பயன் படுத்திக்கொள்வீர்களா?. ஊக்கத்திற் கான தேடலின்போது உங்களது அணுகுமுறைகளின் விளைவுகளைப் பற்றி ஆழமாக சிந்தித்தே செயல்பட வேண்டும். அப்போது மட்டுமே மிகச்சரியான ஊக்கம் உங்களிடம் வந்துசேரும். அதுமட்டுமல்லாமல் எதிர்மறையான விளைவுகளின் தாக்கத்திலிருந்து உங்களது செயல்பாட்டினை சரியான முறையில் காப்பற்றவும் முடியும். தேடலில் நாம் வைக்கும் கவனமே இறுதியில் நமக்கு கிடைக்கும் வெற்றியை தீர்மானிகின்றது.

முயற்சியின் வலிமை!

இன்றைய நாகரிக பெண்களைப் போல் அல்லாமல், 1940களில் பெண்கள் வீட்டில் மட்டுமே தங்களின் பணிகளை செய்துகொண்டிருந்த காலம். அன்றைய காலகட்டத்தில் டஃப் அண்ட் சன்ஸ் என்னும் நிறுவனம் பெட்டி கேக் கலவைகளை அறிமுகம் செய்தது. தொண்ணூறு சதவீதம் ரெடிமேட் கலவையான இதை இல்லத்தரசிகள் தண்ணீரை மட்டும் கலந்து வெகு சுலபமாக பயன்படுத்தி வந்தனர். இதன் விற்பனை நன்றாக சென்றுக்கொண்டிருந்தாலும் காலப்போக்கில் பெருமளவில் குறைய ஆரம்பித்தது. அதற்கான காரணம், ஒரே மாதிரியான அதன் சுவை.

இதற்காக அந்நிறுவனம் திட்டம் ஒன்றை தயாரித்தது. அதன்படி, அந்த ரெடிமேட் கலவையிலிருந்து முட்டை மற்றும் பால் பவுடரை நீக்கிவிட்டு, புதிய கலவையை விற்பனை செய்யத்தொடங்கியது. இம்முறை, பெண்கள் அதனுடன் வீட்டிலிருந்தே முட்டை, எண்ணெய் மற்றும் புதிய பால் ஆகியவற்றை சேர்த்து தங்கள் கைப்பட கேக்குகளை தயார் செய்து பயன்படுத்தினர். இதனால் அவர்களுக்கு புதிய சுவை மட்டுமல்லாது அந்த தயாரிப்பில் தங்களது பங்களிப்பும் உண்டு என்ற மகிழ்ச்சியும் கிடைத்தது. நிறுவனத்தின் விற்பனையும் பல மடங்கு பெருகியது.

இது ஒரு சிறிய முயற்சிக்கு கிடைத்த சிறந்த பலனாகவும், அதேசமயம் ஊக்கப்படுத்துதலுக்கான சிறந்த உதாரணமாகவும் இருப்பதாக தெரிவிக்கிறார் ஆசிரியர். நமது கடினமான செயல்பாட்டு பணிகளுடன், சூழ்நிலைக்குத் தேவையான சிறிது முயற்சியையும் அதற்கான நேரத்தையும் ஒன்றிணைக்கும்போது வெற்றி நம் வசமாகிறது.

நன்றி மற்றும் பாராட்டு!

பணம் மற்றும் வெகுமதிகளே பணியாளர்களை பெருமளவில் ஊக்கப் படுத்தும் காரணிகள் என்பதே பெரும் பாலான நிறுவன மேலாளர்களின் நம்பிக்கையாக இருப்பதாக சொல் கிறார் ஆசிரியர். ஆனால், இதை தனது ஆய்வின் மூலமாக மறுத்துள்ளார். ஒரு செமி கன்டக்டர் தொழிற்சாலையில் நடத்தப்பட்ட இவரது ஆய்வானது, பணம் மற்றும் வெகுமதிகள் தொழிற்கூடத்தின் உற்பத்தியை உடனடியாக பெருக்கினாலும், தொடர்ந்து அந்த உற்பத்திப்பெருக்கம் நீடிப்பதில்லை என்கிறது. மேலும், வெகுமதிகளுக்கு முந்தைய நிலையை விட குறைவான உற்பத்தியையே நிறுவனங்களுக்கு கொடுக்கின்றன என்கிறது அந்த ஆய்வு முடிவு. மாறாக, சிறந்த செயல்பாடுகளுக்கான நன்றி மற்றும் பாராட்டுகளே மிகச்சிறந்த ஊக்கமூட்டும் விஷயங்களாக இருக்கின்றது என்கிறார் ஆசிரியர்.

மற்றவர்களிடமிருந்து நமக்கான ஊக்கமோ அல்லது நம்மால் மற்றவர் களுக்கான ஊக்கமோ எதுவாயினும் உற்சாகமான, சுவாரஸ்யமான, முக்கியமான, சிறந்த மற்றும் பயனுள்ள வழியில் அதனை பயன்படுத்தும்போது மட்டுமே அதன் முழுமையான பலனை ருசிக்க முடியும் என்பதையும் கவனத்தில் கொள்வோம்.

தொடர்புக்கு: p.krishnakumar@jsb.ac.in





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x