Published : 14 Dec 2013 11:42 AM
Last Updated : 14 Dec 2013 11:42 AM
நிதி நெருக்கடியில் சிக்கி, முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பித் தராமல் உள்ள நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் நிறுவன (என்எஸ்இஎல்) விவகாரத்தை அரசு உன்னிப்பாகக் கவனித்து வருவதோடு தீவிர நடவடிக்கையும் எடுத்து வருவதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் நமோ நாராயண் மீனா கூறினார்.
மக்களவையில் வெள்ளிக்கிழமை எழுத்து மூலமாக அளித்த பதிலில் அவர் மேலும் கூறியதாவது:
இந்த நிறுவனம் மீது எத்தகைய நடவடிக்கை எடுப்பது என்பது குறித்த அறிக்கையை சிறப்புக் குழு அளித்துள்ளது. அந்த அறிக்கை சம்பந்தப்பட்ட 7 அலுவலகங்கள் மற்றும் துறைகளுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கைகள் எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளன. எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதை அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
என்எஸ்இஎல்-லில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தும்படி நிதி அமைச்சகத்துக்கு கோரிக்கை வந்துள்ளாகவும் அவர் தெரிவித்தார்.
அரசு அமைத்த சிறப்புக் குழுவில் பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் செயலர் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு எந்தெந்த வகையில் என்எஸ்இஎல் விதிகளை மீறியுள்ளது என ஆராயப்பட்டது. இந்த மோசடியில் என்எஸ்இஎல் நிறுவனமும் அதன் சார்பு, துணை நிறுவனங்களுக்கு எந்த வகையில் தொடர்புள்ளது என்பது குறித்தும் ஆராயப்பட்டது.
என்எஸ்இஎல் மீது சில பரிந்துரைகளை நிபுணர் குழு அளித்துள்ளது. இதனடிப்படையில் அந்தந்த துறை மற்றும் அலுவலகங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
என்எஸ்இஎல் நிறுவனம் கடந்த ஜூலை மாதம் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு செபி தடை விதித்தது. இந்நிறுவனம் ரூ. 5,600 கோடி நிதி நெருக்கடியில் சிக்கியதோடு, முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி தரமுடியாத நிலையைச் சந்தித்தது. இதையடுத்து அரசு மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக முதல் கட்டமாக ரூ. 172.72 கோடி முதலீட்டாளர்களுக்கு தர ஒப்புக் கொண்டது. 30 வாரங்களில் நிலுவைத் தொகையைத் திருப்பித் தர நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. ஆகஸ்ட் 20-ம் தேதி முதலீட்டாளர்களுக்கு ரூ. 92 கோடி தரப்பட்டதாக நமோ நாராயண் மீனா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT