Published : 05 Mar 2014 10:20 AM
Last Updated : 05 Mar 2014 10:20 AM
மாருதி சுஸுகி மற்றும் ஜப்பானின் சுஸுகி நிறுவனம் இடையே நடக்கும் பனிப் போராட்டத்துக்குத் தீர்வு காணவும், தங்களது முதலீடுகளைக் காப்பாற்றவும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பங்கு பரிவர்த்தனை வாரியத்தை (செபி) நாட முடிவு செய்துள்ளன.
குஜராத்தில் ஒரு கார் உற்பத்தி ஆலையை ஜப்பானின் சுஸுகி நிறுவனம் உருவாக்கி வருகிறது. இதனால் மாருதி சுஸுகி நிறுவனத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
தாய் நிறுவனமான ஜப்பான் நிறுவனம் தனியாக கார் ஆலையைத் தொடங்கினால் மாருதி சுஸுகி தயாரிப்புகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்ற அச்சம் பலரது மனதில் ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக மாருதி சுஸுகி பங்குகளில் முதலீடு செய்துள்ள மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் இந்த விவகாரத்துக்குத் தீர்வு காண வேண்டும் என்பதில் முனைப்பாக உள்ளன. ஐசிஐசிஐ புரூடென்ஷியல் எம்எஃப், ரிலையன்ஸ் எம்எப், யுடிஐ எம்எப் உள்ளிட்ட 7 நிறுவனங்கள் மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட் நிறுவனம் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஜப்பானின் சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனத்தையும் அணுக முடிவு செய்துள்ளன. குஜராத் ஆலை குறித்து விவரம் கேட்க முடிவு செய்துள்ளன.
மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தில் உள்ள பங்குகளை குஜராத்தில் அமைய உள்ள தாய் நிறுவனமான ஜப்பானின் சுஸுகி நிறுவனத்துக்கு மாற்றுவது தொடர்பாக தங்களின் சந்தேகங்களை செபி-யிடம் கேட்பது என முடிவு செய்துள்ளன.
குஜராத்தில் அமைய உள்ள ஆலையை முழுவதும் தங்களது முதலீட்டில் தொடங்க ஜப்பான் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கடந்த மாதம் அறிவித்தது. அத்துடன் இங்கு மாருதி சுஸுகி நிறுவனத்துக்கு பிரத்யேகமாக கார்களைத் தயாரித்து அளிக்க முடிவு செய்திருப்பதாகத் தெரிவித்தது.
ஆனால் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த 7 பரஸ்பர நிதி நிறுவனங்களும் மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் 3.93 சதவீத பங்குகளை வைத்துள்ளன. அத்துடன் பொதுத்துறை நிறுவன மான எல்ஐசி 6.93 சதவீத பங்குகளை வைத்துள்ளது. குஜராத் ஆலை செயல்படத் தொடங்கினால் இப்போது கார்களை உற்பத்தி செய்யும் மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம் வெறுமனே கார்களை விற்பனை செய்யும் அமைப்பாக மாறும் என்று அவை அச்சம் தெரிவித்துள்ளன.
பொதுவாக நிறுவன விவகா ரங்கள் விதிப்படி இதுபோன்ற விவகாரங்கள் மற்றும் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பங்குதாரர்களின் ஒப்புதலைப் பெற்றாக வேண்டும். ஆனால் புதிய விதிமுறைகள் இன்னமும் அமலுக்கு வரவில்லை. புதிய விதிமுறைகள் அக்டோபர் 1 முதல்தான் அமலுக்கு வர உள்ளன.
கடந்த மாதம் மியூச்சுவல் ஃபண்ட் நிர்வகிக்கும் நிறுவனங்கள் மாருதி சுஸுகி நிறுவன தலைவர் ஆர்.சி. பார்கவாவுக்கு கடிதம் எழுதின. அதில் முதலீட்டாளர்களின் கவலை சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. இந்த முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தை அவை கேட்டுக் கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தமானது முறையானதல்ல மற்றும் இது நேர்மையானதல்ல. அதேபோல இது பங்குதாரர்கள் நலனுக்கு ஏற்றதல்ல என்றும் கடிதத்தில் சுட்டிக் காட்டியிருந்தன.
அதிக லாபம் ஈட்டும் மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட் நிறுவனம் இனி சுஸுகி நிறுவனத்தின் விற்பனை நிறுவனமாக மாறுவது சரியான நடவடிக்கையாக இருக்காது என்று முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.
மேலும் இந்த ஒப்பந்தமானது மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்கும் சரியானதாக அமையாது. அதேபோல இந்நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கும் இது சரியானதாக இருக்காது. இதனால் நிறுவனத்தின் மீதான அபிப்ராயம் காலப்போக்கில் சீரழிந்துவிடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கார்களை தயாரித்து அளிப்ப தற்காக சுஸுகி நிறுவனத்துக்கு மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம் அளிக்கும் ராயல்டி தொகை தொடர்பாகவும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் சந்தேகம் எழுப்பியுள்ளன.
மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதலீடு மீதான வருமானம் குறைந்து வருகிறது. அதனால் குஜராத் ஆலையில் முதலீடு செய்வது லாபகரமானதாக இருக்கும் என்று நிதி மேலாளர்கள் கருதுகிறார்கள்.
சுஸுகி நிறுவனத்துக்கு ரூ. 7 ஆயிரம் கோடி ராயல்டியாக வழங்கப்பட்டுள்ளது. அதாவது விற்பனையில் 5.7 சதவீதமாகும் இது. அடுத்த நான்கு ஆண்டுகளில் ராயல்டி தொகை ரூ. 8,500 கோடியாக அளிக்க வேண்டியிருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT