Published : 08 Jan 2014 09:48 AM
Last Updated : 08 Jan 2014 09:48 AM
சில சந்தைகளில் ஒரு சில நிறுவனங்களே முழு ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும். உதாரணமாக அழகு சாதனப் பொருட்கள் சந்தையில் ஒரு சில நிறுவனங்களே எல்லா விதமான பொருட்களையும் விற்றுக்கொண்டிருப்பதை அறியலாம்.
இதில் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் இருப்பார்கள். அவர்கள் அந்நிறுவனத்தின் பொருட்களைத் தவிர வேறு எதையும் வாங்கமாட்டார்கள். இதற்கு அந்நிறுவனத்தின் பொருட்களின் தரம் மற்றும் விலையும் காரணமாக இருக்கும். அந்நிறுவனத்தின் பொருளுக்கு ஒரு குறிப்பிட்ட விலையை விட அதிகமாக இருக்குமேயானால் அதன் வாடிக்கையாளர்கள் வேறு நிறுவன பொருளை வாங்க ஆரம்பிப்பார்கள். இது போன்ற ஒரு சூழலில் தான் limit pricing பயன்படுத்தப்படும்.
ஒரு நிறுவனம் தன்னுடைய பொருளுக்கு அதிகபட்சமாக ஒரு விலையை நிர்ணயித்து அதனால் சந்தையின் பெரும்பகுதி தேவையை பூர்த்தி செய்துவிட்டால் அதற்கு limit price என்று பெயர். அவ்வாறு limit price மூலம் சந்தையின் பெரும்பகுதி தேவையை அந்நிறுவனமே பூர்த்தி செய்து விடுவதால், புதிய நிறுவனங்கள் எதுவும் சந்தைக்குள் நுழைய முடியாத சூழல் ஏற்படும். புதிய நிறுவனங்கள் நுழைய முடியாத சூழலை ஏற்படுத்தும் விலைக்கு limit price என்று கூறுகிறோம். பொதுவாக ஒரு சில நிறுவனங்களே உள்ள சந்தையில் (oligopoly) இவ்வாறான நிலை ஏற்படும். ஒருவேளை இந்நிறுவனம் தன்னுடைய உற்பத்தியை குறைத்துகொண்டால் அல்லது விலையை மாற்றி அமைத்தால் புதிய நிறுவனங்கள் சந்தைக்குள் நுழையும்.
சில நேரங்களில் limit price அந்நிறுவனத்தின் இறுதிநிலை உற்பத்தி செலவைவிட அதிகமாக இருக்கும் பட்சத்தில், புதிய நிறுவனங்களின் இறுதிநிலை உற்பத்தி செலவும் குறைவாக இருந்தால் அவர்கள் குறைந்த விலையில் பொருட்களை விற்க சந்தைக்குள் நுழைவர். எனவே limit price என்பது இறுதிநிலை உற்பத்தி செலவைவிட மிக அதிகமாக இல்லாமல் இருப்பதும் அவசியம். ஏற்கனவே சந்தையில் உள்ள நிறுவனங்களுக்கு சில தொழில்நுட்ப அனுகூலங்கள் அல்லது உள்ளீட்டு பொருட்கள் எளிதாக கிடைப்பது என பல காரணங்களினால் இறுதிநிலை உற்பத்தி செலவு குறைவாக இருக்கும். அந்நிறுவனங்கள் தங்கள் குறைந்த இறுதிநிலை உற்பத்தி செலவுக்கு சமமாக limit priceயை வைக்கமுடியும்.
ஆனால் இன்று உள்ள சந்தைகளில் limit pricing எளிதில் பயன்படுத்த முடிவதில்லை. பல நிறுவனங்களில் புதிய தொழில்நுட்பங்கள் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு வருவதால், புதிய நிறுவனங்கள் சந்தைக்குள் எளிதில் வருவதும் பழைய நிறுவனங்கள் போட்டி காரணமாக முடிந்த வரை குறைந்த விலை வைப்பது வாடிக்கையாகிவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT