Published : 08 Oct 2014 06:13 PM
Last Updated : 08 Oct 2014 06:13 PM
நவம்பர் முதல் நோக்கியா தனது சென்னை - ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் உற்பத்தியை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ள நிலையில், இனி இதுபோன்று நடக்காதவாறு பார்த்துக் கொள்ளப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
அதாவது, சென்னை - நோக்கியா ஆலை மூடல் விவகாரத்தை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ளும் என்கிற தொனியில் மத்திய அரசு கருத்து தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நிச்சயமாக இது போன்று இனி நடக்காமல் பார்த்துக் கொள்வோம், 'மேக் இன் இந்தியா' திட்டத்தை ஊக்கப்படுத்துவோம்.
இது குறிப்பிட்ட நிறுவனம் சார்ந்த விவகாரமாகும். நாங்கள் இதன் மீது கவனம் செலுத்தி வருகிறோம்” என்று உறுதியளித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையின்போது 'மேக் இன் இந்தியா' என்ற திட்டத்தை அறிவித்து அயல்நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று பேசியிருந்தார்.
இந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களின்படி நவம்பர் 1ஆம் தேதி முதல் ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்தது.
நோக்கியா ஆலையை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு மாற்றும் முன்பாக ரூ.3,500 கோடியைக் காப்பீட்டுத் தொகையாகச் செலுத்த வேண்டும் என்று வரி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் 14ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்த நெருக்கடி காரணமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்காக செல்போன்களை தயாரிக்கும் சேவை ஒப்பந்தத்தை ஸ்ரீபெரும்புதூர் ஆலை செய்தது. இதன் காரணமாக தொடர்ந்து செயல்பட்டு வந்தது.
இந்த நிலையில்தான் ஒப்பந்தத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் ரத்து செய்துள்ளது. இதன் காரணமாக உற்பத்தியை நிறுத்த முடிவெடுக்கப்பட்டது.
நோக்கியா இந்தியா நிறுவனத்தின் தொழிலாளர் சங்க தகவல்களின்படி சுமார் 1000 ஊழியர்கள் இன்னமும் தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT