Published : 05 Mar 2014 11:02 AM
Last Updated : 05 Mar 2014 11:02 AM

வங்கி - என்றால் என்ன?

வங்கி என்பது ஒரு பிரதானமான நிதி நிறுவனம் என்றாலும், அதனை முழுவதும் புரிந்துகொள்வது கடினம், ஆனால் அவசியம். எப்போது கேட்டாலும் திரும்பக் கொடுக்கக்கூடிய வைப்பு நிதி வாங்கி அதன் மீது வட்டி கொடுத்து, அப்பணத்தைக் கொண்டு கடன் கொடுத்து வட்டி வருமானம் பெறுவது வங்கி.

‘எப்போது கேட்டாலும் திரும்பக் கொடுக்கக் கூடிய’ என்பது நமது சேமிப்பு அல்லது நடப்புக் கணக்கிற்கு பொருந்தும். இவ்வாறான வைப்புக் கணக்கில் நாம் போடும் பணத்தை முன்னறிவிப்பின்றி எப்போது வேண்டுமானாலும் காசோலை (cheque) மூலமாக எடுக்கமுடியும். அதே நேரத்தில் சேமிப்பு கணக்கில் உள்ள பணத்திற்கு ஓரளவிற்கு வட்டியும் கொடுக்கப்படும்.

வேறு எந்த நிதி நிறுவன அமைப்பிலும் இவ்வாறான நிதி வைப்பு முறை இல்லை. இது தான் வங்கியின் சிறப்பு அம்சம். எப்போது வேண்டுமானாலும் வாடிக்கையாளர் பணத்தை திருப்பிக் கேட்பார் என்று தெரிந்தும் அதனை சாதுரியமாக வட்டிக்குக் கடன் கொடுத்து வட்டி வருமானம் பெறுவதும் வங்கியின் சிறப்பு அம்சம்தான். வங்கியின் பிரதான நடவடிக்கை இது என்றாலும், தற்கால வங்கிகள் வேறு பல சேவைகளையும் செய்கின்றன, உதாரணமாக காப்பீடு சேவைகள் கூடசெய்கின்றன.

ஆக மேலே சொன்னது போல் சேமிப்பு அல்லாது நடப்பு வைப்பு கணக்குகள் வைக்கக்கூடிய வசதியுடைய வங்கிகள் வேறு எந்த நிதி சேவைகள் செய்தாலும் அவை அடிப்படையில் வங்கிகள்தான்.

வங்கிக் கடன் (bank credit)

வங்கிக் கடன் கொடுப்பது பல வகைகளில் நடைபெறும். ஒரு வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் தன் கணக்கில் உள்ளதைவிட அதிக பணத்தொகையை எடுப்பது overdraft என்று பெயர். Overdraft கொடுப்பது ஒருவகையில் கடன் கொடுப்பதற்கு சமம். வங்கிகள் புதிதாக கடன் கேட்டு வருபவருக்கு கடன் கொடுப்பதும் உண்டு. Bills of Exchange க்குக் கழிவு கொடுப்பதும் கடன் கொடுப்பது போலதான். வங்கிகள் கொடுக்கும் கடன், அதனின் சொத்து (asset).

வைப்பு (deposit)

வங்கி பல விதமான வைப்பு கணக்குகளை ஏற்றுக்கொள்கின்றன. சேமிப்பு/நடப்பு கணக்குகளில் உள்ள பணத்தை எப்போது வேண்டுமானாலும் காசோலை மூலமாக எடுக்கலாம். கால வைப்பு (term deposit) என்பது 30 நாட்கள் முதல் 5 வருடம் வரையான காலத்தில் பணத்தை வங்கியில் வைப்பது ஆகும்.

கால வைப்பில் உள்ள பணத்தை காசோலை மூலமாக எடுக்க முடியாது. ஆனால் முன்னறிவிப்பு மூலமாக கால வைப்பு தொகையை எடுத்து சேமிப்பு கணக்கில் மாற்றலாம், அவ்வாறு மாற்றும் போது வட்டித்தொகை முழுவதும் கிடைக்காது. வங்கி பெறுகின்ற வைப்புத் தொகைகள் எல்லாம் அதனின் கடன் (liability).

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x