Published : 19 Mar 2014 08:43 AM
Last Updated : 19 Mar 2014 08:43 AM
கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் இந்திய பங்குச்சந்தைகள் உயரும் என்று கணித்திருக்கிறது. நடப்பு கணக்கு பற்றாக்குறை, விரைவில் வர இருக்கும் தேர்தல் ஆகியவற்றை வைத்து இந்திய பங்குச்சந்தைகள் உயரும் என்றும், நிஃப்டி 7600 புள்ளிகள் வரை உயரும் என்றும் கருத்து தெரிவித்திருக்கிறது.
இந்தியப் பொருளாதாரம் வேகமாக மீண்டு வருவதாகவும், மோசமான சூழ்நிலை முடிந்து விட்டதாகவும் கோல்ட்மேன் சாக்ஸ் தெரிவித்திருக்கிறது. மேலும் சில பங்குகளை முதலீட்டாளர்கள் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரை செய்திருக்கிறது.
தேர்தல் காரணமாக கோல் இந்தியா, என்.டி.பி.சி., பாரத் பெட்ரோலியம், உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்கள் லாபமடையும் என்றும் தெரிவித்திருக்கிறது. அதேபோல தனியார் துறையில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, எல் அண்ட் டி, அல்ட்ரா டெக், ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல், இண்டஸ்இந்த் வங்கி, வோல்டாஸ் ஆகியவற்றின் பங்குகள் ஏற்றம் பெறும் என்று தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து மும்பையில் இருக்கும் அனலிஸ்ட் ஒருவரிடம் கருத்து கேட்டபோது, ‘கோல்ட்மேன் சாக்ஸ் இதுவரை தவறாகவே கணித்திருக்கிறது. அந்த நிறுவனம் வாங்கு என்று சொல்லும்போது விற்பது சரியாக இருக்கும். விற்கவேண்டும் என்று சொல்லும் போது வாங்குவதுதான் சரியாக இருக்கும்’ என தெரிவித்த அவர் இதற்கு ஒரு உதாரணத்தை தெரிவித்தார்.
கச்சா எண்ணெய் விலை 140 டாலருக்கு மேல் செல்லும்போது 200 டாலர் செல்ல வாய்ப்பு இருக்கிறது என்று இந்த நிறுவனம் கருத்து கூறியது. ஆனால் அதன் பிறகு கச்சா எண்ணெய் விலை குறைந்தது என்று தெரிவித்தார். இதுபோல மாற்றுக்கருத்துகளும் சந்தையில் நிலவுகின்றன.
சென்செக்ஸ் 22040
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் 22040 என்ற உச்சபட்ச புள்ளியை தொட்டது. அதன்பிறகு லாபத்தை பதிவு செய்யும் நோக்கத்தில் வர்த்தகர்கள் செயல்பட்டதால் சென்செக்ஸ் சரிந்தது. வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 22 புள்ளிகள் உயர்ந்து 21,832 புள்ளியில் முடிவடைந்தது. நிஃப்டி 12 புள்ளி கள் உயர்ந்து 6516 புள்ளியில் முடிவடைந்தது.
எஃப்.எம்.சி.ஜி. மின்சாரம், ஆயில் அண்ட் கேஸ், கன்ஸ்யூமர் டியூரபிள், மெட்டல், வங்கி ஆகியத் துறை பங்குகள் ஏற்றத்துடன் முடிவடைந்ததன. ஐ.டி. ஆட்டோ மற்றும் டெக்னாலஜி பங்கு செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் சரிவுடன் முடிந்தன.
எஸ்.பி.ஐ., கோல் இந்தியா, ஐ.டி.சி., பஜாஜ் ஆட்டோ மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றின் பங்குகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன. அதேபோல டாடா மோட்டர்ஸ், எம். அண்ட் எம், விப்ரோ, இன்ஃபோ ஸிஸ், எல் அண்ட் டி, ஐ.சி.ஐ.சி.ஐ. ஆகிய பங்குகள் சரிந்து முடிந்தன.
மாருதி 7.6 சதவீதம் உயர்வு
முக்கிய ஆட்டோ துறை பங்குகள் சரிந்து முடிவடைந்தாலும் மாருதி சுசூகி பங்கு 7.46 சதவீதம் உயர்ந்து 1,868 ரூபாயில் முடிவடைந்தது. அதே சமயத்தில் வர்த்தகத்தின் இடையே தன்னுடைய 52 வார உச்சபட்ச விலையான 1,909 ரூபாயையும் தொட்டது. இந்த ஏற்றத்துக்கு குஜராத்தில் அமையவிருக்கும் ஆலைக்கு சிறுமுதலீட்டாளர்களின் ஒப்புதலை பெற இயக்குநர் குழு ஒப்புதல் அளித்ததுதான் காரணம்.
சர்வதேச சந்தையிலும் ஏற்றம்
கடந்த வாரத்தில் கடுமையாக சரிந்த ஜப்பான் சந்தையான நிக்கி செவ்வாய்க்கிழமை உயர்வு கண்டது. ஜப்பான் யென் சரிந்ததுதான் இதற்கு காரணம். இது தவிர ஹாங்காங் சந்தை யான ஹெங்செங், ஆஸ்திரேலியாவின் ஏ.எஸ்.எக்ஸ், ஷாங்காய் சந்தைகளும் உயர்ந்தன. இதற்கிடையில் அமெரிக்க ஃபெடரல் வங்கியின் கடன் கொள்கை கூட்டம் செவ்வாய்க் கிழமை நடக்க இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT