Published : 23 Feb 2014 12:00 AM
Last Updated : 23 Feb 2014 12:00 AM
நமது நாட்டில் உள்ள எண்ணெய் வளங்களைக் கண்டறிந்தாலே, கச்சா எண்ணெய்க்கு வெளிநாட்டில் கையேந்த வேண்டிய நிலை இருக்காது என்கிறார் கெய்ர்ன் இந்தியா நிறுவனத்தின் தலைவர் பி. இளங்கோ.
ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அடுத்தபடியாக இந்தியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் உள்ளது கெய்ர்ன் இந்தியா. சமீபத்தில் சென்னை வந்திருந்த அவர் ‘தி இந்து’வுக்கு அளித்த பிரத்யேக பேட்டி:
உங்களது ஆரம்பகாலம் குறித்து...
தமிழகத்தில் திருத்துறைப்பூண்டியில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து முதன் முதலில் அரசு வேலைக்குச் சென்றவன். எஸ்எஸ்எல்சி வரை தமிழ் வழிக் கல்வி. சென்னை வந்து விடுதியில் தங்கி கிறிஸ்தவக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம். பின்னர் எம்பிஏ-வில் ஈடுபாடு ஏற்பட்டு படித்ததில் தங்கப் பதக்கம் வசமானது. ஒஎன்ஜிசியில் 10 ஆண்டு காலம் வேலை. அதன்பிறகு வெளிநாட்டு நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தது வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது.
எண்ணெய் அகழ்வுத்துறையில் ஈடுபாடு வந்தது எப்படி?
ஒஎன்ஜிசி நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த பிறகு 2 ஆண்டுகள் டெல்லியில் பணி. பிறகு சென்னைக்கு மாற்றலானது. சென்னையில் எரிவாயு விநியோகப் பிரிவு மேலாளராக பணியாற்றியது மேலும் ஆர்வத்தைத் தூண்டியது.
ஒஎன்ஜிசி நிறுவனம் தமிழகத்தில் நரிமணத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வில் ஈடுபட்டுவந்தது.அப்போது அங்கு கிடைக்கும் எரிவாயுவை விற்பனை செய்யும் பணியை மேற்கொண்டிருந்தேன் இதனால் சென்னையில் இயங்கி வந்த ஆலைகளை நரிமணம் பகுதிக்கு மாற்றினால் எரிபொருள் பிரச்சினை ஏற்படாது என்று கூறினேன். எனது பேச்சில் நம்பிக்கை ஏற்பட்டு பொன்வண்டு சோப் தயாரிக்கும் நிறுவனம் முதலில் தங்களது ஆலையை சென்னையிலிருந்து நாகப்பட்டினத்துக்கு மாற்றியது. இந்த மாற்றம் அந்த நிறுவனத்துக்கு இரட்டை லாபமாக அமைந்தது.
அது எப்படி லாபமாக அமைந்தது?
குழாய் மூலம் எரிபொருள் கிடைத்தது. அங்குள்ள கடற்கரை மணலில் சிலிகேட் தாது கிடைத்தது. இது சோப் மற்றும் பெயின்ட் தயாரிப்புக்குத் தேவைப்படும் முக்கியமான பொருள். இதுவும் அங்கு கிடைத்ததால் மேலும் பல பெயின்ட் தயாரிப்பு நிறுவனங்கள் அங்கு மாறின. இது தவிர, சிறிய அளவிலான ரோலிங் மில்லும் அங்கு ஆலையை அமைத்தது. இந்நிறுவனங்களுக்குத் தேவையான எரிபொருள் நரிமணத்திலிருந்து குழாய் மூலம் விநியோகிக்கப்பட்டது.
ஒஎன்ஜிசி-யிலிருந்து கெய்ர்ன் நிறுவனத்துக்கு மாறியது எப்படி?
1990-ம் ஆண்டுக்கு பிறகு கொள்கைகள் மாறியபோதிலும், எண்ணெய், எரிவாயு கண்டறியும் பணியில் தனியார் குறிப்பாக வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிப்பதற்கு பல ஆண்டுகளானது.
முதல்கட்டமாக வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் தனியாரை அனுமதிப்பதற்கான கொள்கைகளை வகுப்பதற்கான குழுவை மத்திய அரசு அமைத்தது. வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேரம் பேசுவதற்கான ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில் அரசு பிரதிநிதியாக ஒஎன்ஜிசி-யிலிருந்து தேர்வு செய்யப்பட்டு கலந்து கொண்டேன்.
அன்னிய நிறுவனங்களை ஈர்ப்பதற்கு எத்தகைய கொள்கை வகுப்பது என்பதில் இந்தியாவுக்கு முன் அனுபவம் கிடையாது. மேலும் எண்ணெய், எரிவாயு அகழாய்வுப் பணிக்கு முதலீடு அதிகம் தேவைப்படும். லாபம் நிச்சயம் என்று கூற முடியாது. இதில் லாப, நஷ்டம் ஸ்திரமற்றது. எனவேதான் இந்தோனேசியாவில் பின்பற்றும் முறையை இங்கு பின்பற்றலாம் என்று கூறினேன். அதை அரசும் ஏற்றுக் கொண்டது.
இந்தோனேசியாவில் எத்தகைய முறையைப் பின்பற்றுகிறார்கள்?
இத்தொழிலுக்கு அதிக முதலீடு தேவைப்படுவதால், மூன்று அல்லது நான்கு நிறுவனங்கள் இணைந்து எண்ணெய் அகழ்வில் ஈடுபட அனுமதிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.
இது தொடர்பாக வடிவமைக்கப்பட்ட வரைவு அறிக்கையை விடிய விடிய தேர்வுக்குப் படிப்பதைப் போல படித்தேன். அதுவே எனக்கு திருப்பு முனையாக அமைந்தது.
அது எப்படி?
எண்ணெய் அகழ்வு தொடர்பாக அரசு வகுத்த விதிமுறைகள் எனக்கு அத்துபடியாக இருந்தன. இதனால் எண்ணெய் நிறுவனங்கள் டெண்டர் விண்ணப்பித்து அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தின. அப்போது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிறுவனம் எண்ணெய் அகழ்வுக்கு விண்ணப்பித்தது. அரசு தரப்பில் எனது பங்களிப்பைப் பார்த்து அவர்கள் தங்கள் நிறுவனத்தில் பணியில் சேருமாறு அழைப்பு விடுத்தனர். ஓஎன்ஜிசி-யில் நான் பெற்று வந்த சம்பளத்தைவிட 10 மடங்கு அதிகமாக தர அவர்கள் முன்வந்தனர். இதையடுத்து அந்நிறுவனத்தில் பணியில் சேர முடிவெடுத்தேன்.
அரசு நிறுவனத்திலிருந்து தனியாருக்கு மாறும் முடிவை உங்கள் வீட்டில் அனைவரும் ஏற்றுக் கொண்டனரா? இதை எப்படி சமாளித்தீர்கள்?
விவசாயக் குடும்பத்திலிருந்து முதலில் அரசு வேலைக்குச் சென்றதால் சந்தோஷப்பட்ட எங்கள் குடும்பத்தினர் பிறகு தனியாருக்கு வேலைக்குச் செல்லும் முடிவை ஏற்கவேயில்லை. அவர்களை சமாதானப்படுத்தியதோடு எனது முடிவில் உறுதியாக இருந்தேன்.
நான் பணிக்குச் சேர்ந்த ஆஸ்திரேலிய நிறுவனத்தை பிறகு கெய்ர்ன் நிறுவனம் வாங்கி, ரவா பகுதியில் எண்ணெய் அகழ்வு பணியை மேற்கொண்டது. அந்நிறுவனமும் என்னையே பணியில் தொடரச் சொன்னது. ராஜஸ்தான் மாநிலம் ரவா பகுதியில் நிச்சயம் எண்ணெய் கிடைக்கும் என எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது.
ராஜஸ்தானில் முதல் கிணற்றிலேயே எண்ணெய், எரிவாயு கிடைத்ததா?
ஆரம்பத்திலேயே சொன்னதுபோல இத்துறைக்கு முதலீடும், பொறுமையும் மிக அவசியம்.
ராஜஸ்தானில் ரவா பகுதியில் அகழ்ந்த முதல் 13 எண்ணெய்க்கிணறுகளில் ஒன்றுமே கிடைக்கவில்லை. ஏறக்குறைய வெறுமை மட்டுமே மிஞ்சிய நிலையில் ரூ. 500 கோடி முதலீடு செய்தாகிவிட்டது. அடுத்ததாக 14-வது எண்ணெய்க் கிணறு தோண்டியபோதுதான் எண்ணெய் கிடைத்தது.
1994-ம் ஆண்டு தினசரி 3,000 பீப்பாய் எண்ணெய் கிடைத்தது. இப்போது நாளொன்றுக்கு 20 ஆயிரம் முதல் 22 ஆயிரம் பீப்பாய் எண்ணெய் கிடைக்கிறது.
பொறுமை அவசியம் என்று சொன்னதற்குக் காரணம், பிரிட்டனின் ஷெல் நிறுவனம் இதுபோல பொறுமை இல்லாததால்தான், பாதியிலேயே அகழ்வுப் பணியிலிருந்து வெளியேறியது.
உள்நாட்டில் எண்ணெய், எரிவாயு கிடைப்பதால் நாட்டின் பொருளாதாரம் எவ்விதம் மேம்படும்?
எண்ணெய், எரிவாயு இறக்குமதி கணிசமாகக் குறைவதால் நாட்டின் அன்னியச் செலாவணி கணிசமாக மிச்சமாகும். மொத்த உற்பத்தி வருவாயில் 80 சதவீதம் அரசுக்குச் செல்கிறது. இதில் 30 சதவீதம் ஓஎன்ஜிசி-க்குச் செல்லும்.
ராஜஸ்தான் மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 5,000 கோடி வருமானம் கெய்ர்ன் மூலம் கிடைக்கிறது. மேலும் ரவா பகுதியைச் சுற்றி பல சமுதாய மேம்பாட்டுப் பணிகளை கெய்ர்ன் செய்துள்ளது. மத்திய அரசுக்கு ரூ. 12 ஆயிரம் கோடி வரி வருமானமாகச் செல்கிறது.
ஒரு காலத்தில் மாநிலத்தில் உள்ள ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுக்கக் கூட வருமானம் இல்லாத மாநிலமாக இருந்த ராஜஸ்தான் இப்போது கெய்ர்ன் வரவால் வளம் கொழிக்கும் மாநிலமாக மேம்பட்டு முன்னேறியுள்ளது.
கடல் மற்றும் ஆற்றுப் படுகையில் எண்ணெய் அகழ்வு செய்வதற்கும், சம தரை பரப்பில் அகழ்வு செய்வதற்கும் ஒரே அளவிலான முதலீடுதான் தேவைப்படுமா?
நிச்சயமாகக் கிடையாது. சமதளத்தில் ஒரு கிணறு அகழ்வு செய்வதற்கு ரூ. 25 கோடி தேவைப்படும். கடற்பரப்பில் ஒரு கிணற்றுக்கு ரூ. 100 கோடி தேவைப்படும். ஆழ்கடல் பகுதியானால், அதாவது 400 மீட்டருக்கும் கீழ் பகுதியில் அகழ்வுக்கு ரூ. 400 கோடி தேவைப்படும்.
எண்ணெய் அகழ்வில் எந்த அளவுக்கு வாய்ப்புகள் உள்ளன?
சர்வதேச அளவில் 10 கிணறு தோண்டினால் அதில் 6 கிணற்றில் எண்ணெய் கிடைக்கும். 4 கிணற்றுக்கான முதலீடு நஷ்டம்தான். ஆனால் எண்ணெய் கிடைக்கத் தொடங்கினால் அதன் மூலம் இந்த நஷ்டம் ஈடுகட்டப்பட்டுவிடும்.
எண்ணெய் அகழ்வில் வேறென்ன பிரச்சினைகள் ஏற்படும்?
எண்ணெய் வயலுக்கென்று ஒதுக்கப்பட்டு பின்னர் அது ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்டால் அப்பகுதியில் எண்ணெய் அகழ்வுப் பணியை மேற்கொள்ள முடியாது. சமீபத்தில் இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டபோது அதுகுறித்து விரிவாக பேச்சு நடத்தி நிலைமையை விளக்கிய பிறகே அந்த இடத்தில் 60 சதவீத பகுதியில் அகழ்வுப் பணி மேற்கொள்ள ஒப்புக் கொண்டனர். இதுபோன்ற நிலைமைகள் மாற வேண்டும்.
முதலில் மக்களுக்கும் அடுத்து அரசியல்வாதிகளுக்கும் எண்ணெய் அகழ்வு குறித்த விழிப்புணர்வு அவசியம்.
எண்ணெய் அகழ்வில் இந்தியாவின் நிலை எந்த அளவுக்கு உள்ளது?
இந்த விஷயத்தில் நாம் பின்தங்கியுள்ளோம் என்று சொல்ல வேண்டியதில்லை. பிற நாடுகளில் ஆண்டுக்கு 25 ஆயிரம் எண்ணெய்க் கிணறுகள் தோண்டப்படுகின்றன. ஆனால் இந்தியாவி்ல் இந்த எண்ணிக்கை ஆயிரத்துக்கும் குறைவாகவே உள்ளது.
எரிவாயு எந்தெந்தப் பகுதியில் கிடைக்கிறது?
எண்ணெய் வயலில் சில இடங்களில் கிடைக்கும் எரிவாயுவை எரிக்க வேண்டியிருக்கும். இதை குழாய்ப் பாதையில் திருப்பி விட முடியும். குஜராத் மாநிலத்திலும் எரிவாயு கிடைக்கிறது. இங்கு அதிக அளவில் எரிவாயு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
கச்சா எண்ணெய் இறக்குமதிக்குப் பதில் திரவ எரிவாயு (எல்என்ஜி) இறக்குமதி செய்வது சிறந்ததா?
இதற்கு கட்டமைப்பு வசதிகள் மற்றும் குழாய்ப்பாதை அமைக்க வேண்டும். எல்என்ஜி முனையங்கள் அமைத்துவிட்டால் பிறகு அதன் மூலம் விநியோகிக்கலாம். கச்சா எண்ணெய் விலையை விட இது மலிவானது. இதன் மூலம் இறக்குமதி செலவைக் குறைக்க முடியும். அனைத்துக்கும் மேலாக சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காதது.
முதல் கட்டமாக அரசு பேருந்துகளை எல்என்ஜி-யில் இயங்கும்படி செய்வதன் மூலம் மாசடையாமல் காக்கலாம்.
இத்துறையில் அரசு எந்த வகையில் உதவ முடியும்?
எண்ணெய் அகழ்வுக்காக எண்ணெய் வயல்களை ஏலம் விடுவதோடு அரசு நின்றுவிடக் கூடாது. நாட்டில் 30 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் எண்ணெய், எரிவாயு வளம் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் முதல் கட்டமாக செசிமிக் ஆய்வு நடத்தும் பணியை அரசு மேற்கொள்ளலாம்.
இதற்கு ரூ. 5 ஆயிரம் கோடிதான் செலவாகும். இதை அரசு செய்தால், அதில் கிடைக்கும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிட்ட பகுதியில் எண்ணெய் கிணறுகளைத் தோண்டபல உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் முன்வரும்.
நார்வேயில் இந்த முறையைத்தான் பின்பற்றுகிறார்கள். செசிமிக் புள்ளி விவரத்தை இணையதளத்தில் வெளியிட்டால் அது வெளிநாட்டு நிறுவனங்களையும் ஈர்ப்பதாக இருக்கும்.
மேலும் எண்ணெய் கிணறுகளை ஒருங்கிணைக்கும் குழாய்ப்பாதை அமைக்க வேண்டும். இதன் மூலம் எரிவாயு உற்பத்தியையும் நாம் உபயோகமானதாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ramesh.m@kslmedia.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT