Published : 14 Mar 2014 11:56 AM
Last Updated : 14 Mar 2014 11:56 AM
சந்தை சரிவில் இருக்கும்போது மற்றும் மந்த நிலையில் இருக்கும்போது ஐ.டி. மற்றும் பார்மா ஆகிய டிபென்ஸிவ்(பாதுகாப்பான) துறை பங்குகளில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வார்கள். ஆனால் இப்போது இந்த இரண்டு துறைகளிலிருந்தும் முதலீட்டாளர்கள் வெளியேறி அடுத்த வளரும் வாய்ப்பு உள்ள துறை பங்குகளில் கவனம் செலுத்த ஆரம்பித்திருப்பது போல தெரிகிறது.
ஒரு பக்கம் ரூபாய் மதிப்பு உயர்ந்து ஸ்திரமடைந்து வருகிறது. இரண்டாவது, கூடிய விரைவில் மத்தியில் பலமான ஆட்சி அமையும் என்று அரசியல் ஆலோசகர்களின் கணிப்பு. இந்த இரண்டு காரணங்களால் ஐ.டி. மற்றும் பார்மா துறை பங்குகளை தவிர்த்து மற்ற துறை பங்குகளில் இருக்கும் வாய்ப்புகளை ஆராய்வது போல தெரிகிறது.
மத்தியில் நிலையான ஆட்சி அமையும் போது, முதலீட்டு நடவடிக்கைகள் வேகம் எடுக்கும் இதனால் வங்கி, ஆட்டோ மற்றும் கேபிடல் குட்ஸ் பங்குகளில் முதலீடு செய்கிறார்கள்.
இதற்கு ஏற்றது போல பார்மா துறையில் இருக்கும் முக்கிய சன் பார்மா மீது அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின்(US FDA) பிடியில் இந்த நிறுவனம் சிக்கி இருக்கிறது. இதன் காரணமாக இந்த பங்கு சரிந்து வருகிறது. வியாழக்கிழமை வர்த்தகத்தின் முடிவில் 5 சதவீதத்துக்கு மேல் இந்த பங்கு சரிந்தது.
மேலும் ஐ.டி. துறையின் முக்கிய நிறுவனமான இன்போஸிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எஸ்.டி. சிபுலால் 2014-ம் ஆண்டின் வளர்ச்சி ஏற்கெனவே கணிக்கப்பட்டதைவிட குறைவா கவே இருக்கும் என்று தெரிவித் ததால் இன்ஃபோஸிஸ் பங்கு வியாழக்கிழமை 8 சதவீதத்துக்கு மேல் சரிந்தது. ஆனாலும், மற்ற ஐ.டி. பங்குகளில் இவ்வளவு பெரிய பாதிப்பு இல்லை.
டி.சி.எஸ். ஹெச்.சி.எல்., விப்ரோ உள்ளிட்ட ஐ.டி. பங்குகளில் சிறிய சரிவு மட்டுமே இருந்தது.
நிஃப்டியில் இருக்கும் பங்கு களின் ஐ.டி. மற்றும் பார்மா பங்குகள்தான் சரிவிலும், வங்கி, ஆட்டோ, எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய பங்குகள் ஏற்றத்திலும் இருக்கின்றன.
எண்ணெய் எரிவாயு பிரிவில் இருக்கும் பிபிசிஎல் பங்கு தன்னுடைய வியாழன் வர்த்தகத்தில் 52 வார உச்சபட்ச விலையைத் தொட்டது.
இதேபோல ஹெச்.டி.எஃப்.சி. வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. பங்குகள் தங்களுடைய 52 வார உச்சபட்ச விலையை தொட்டன. ஆட்டொமொபைல் துறையில் இருக்கும் பங்குகளும் ஏற்றம் பெற்றன.
சந்தை நிலவரம்
இன்ஃபோஸிஸ் மற்றும் சன்பார்மா ஆகிய பங்குகள் சரிவின் காரணமாக தேசிய பங்குச்சந்தை குறியீட்டான நிஃப்டி 6500 புள்ளிகளுக்கு கீழே சரிந்தது. நிஃப்டியில் 8 சதவீத பங்கு வகிக்கும் இன்ஃபோஸிஸ் 8 சதவீதத்துக்கு மேல் சரிந்தது. வர்த்தகத்தின் முடிவில் 23.80 புள்ளிகள் சரிந்து 6493 புள்ளிகளில் நிஃப்டி முடிவடைந்தது. சென் செக்ஸ் 81.61 புள்ளிகள் சரிந்து 21774 புள்ளிகளில் முடிவடைந்தது. ஆசியாவின் முக்கியமான சந்தை களும் சரிவுடனே முடிவடைந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT