Published : 09 May 2017 10:24 AM
Last Updated : 09 May 2017 10:24 AM
எங்கள் தயாரிப்பு முறைகளில் ஒவ்வொரு நாளும் முன்னேற்றம் செய்து வருகிறோம். திருடர்கள் (போட்டியாளர்கள்) எங்களைக் காப்பியடித்துத் தயாரிக்கும்போது, நாங்கள் பல அடிகள் முன்னால் போயிருப்போம். - கிச்சிரோ டொயோடா
புலிக்குப் பிறந்தது பூனையாகாது. தொழில் துறையில் எட்டடி பாய்ந்த ஸாகிச்சி டொயோடாவின் மகன் கிச்சிரோ டொயோடா, அறுபத்தி நான்கு அடி பாய்ந்தார். குடும்ப வறுமையால், ஸாகிச்சி ஆரம்பக் கல்விக்கு மேல் படிக்க முடியவில்லை.ஆகவே, மகனைப் பிரபல டோக்கியோ பல்கலைக் கழகத்தில் இன்ஜினீயரிங் படிக்கவைத்தார். ஐரோப்பிய, அமெரிக்கத் தொழில் நுட்பங்களில் ஸாகிச் சிக்கு மிகுந்த மதிப்பு. ஆகவே, மகனை, இங்கிலாந்துக்கும், அமெரிக்காவுக்கும் பயிற்சிக்கு அனுப்பினார். வெற்றிகரமாக முடித்த கிச்சிரோ விசைத்தறிகள் தயாரித்துக்கொண் டிருந்த குடும்ப நிறுவனத்தில் சேர்ந்தார்.
அப்பாவின் நிறுவனத்தில் தொடர்ந்தாலும், என் வழி தனி வழி எனப் புதிய பாதை போட விரும்பினார். அப்போது ஜப்பானில் கார்கள் அத்தியாவசியப் பொருட்களல்ல, அதிசயப் பொருட்கள். இள ரத்தம், கார்கள்தாம் தன் எதிர்காலம் என முடிவெடுத்தது. ஸாகிச்சியும், மகனின் ஆர்வத்துக்கு உற்சாக டானிக் தந்தார். 1930 இல் அவர் மரணமடையும்போது, கார் தயாரிப்பில் உலகளாவிய முத்திரை பதிக்கவேண்டும் என்று மகனிடம் வாக்குறுதி வாங்கிக்கொண்டார்.
ஜப்பானிய சமுதாயம் பாரம்பரிய சமுதாயம். பெற்றோர் சொல் மிக்க மந்திரமில்லை என்று நம்புபவர்கள், கடைபிடிப்பவர்கள். ஸாகிச்சி இறந்த அதே வருடம்,1930 இல் டொயோடா லூம் ஒர்க்ஸ்,கார் தயாரிப்பில் முதல் அடிகள் எடுத்துவைத்தது. பல வெளிநாட்டுக் கார்களை வாங்கினார்கள், பாகம் பாகமாகக் கழற்றினர் கள், தொழில் நுட்பங்களை உள்வாங்கிக் கொண்டார்கள். நான்கே வருடங்களில், 1930-ல் முதல் டொயோடா கார் ரெடி. அந்தக் காரைக் கிச்சிரோ ஸாகிச்சியின் கல்லறைக்கு ஓட்டிக்கொண்டுபோனார். அப்பாவின் அமோக ஆசீர்வாதம்.
முதல் ஆண்டில் 20 கார்கள் மட்டுமே தயாரித்த டொயோடா கார்ப்பரேஷன் 2016 இல், 99,40,000 கார்கள் ஒரு கோடிக்கு 60,000 மட்டுமே குறைவு தயாரித்து, ஜெர்மனியின் ஃபோக்ஸ்வேகன் கம்பெனிக்கு அடுத்தபடியாக, உலகின் நம்பர் 2 கார் தயாரிப்பாளராக இருக்கிறது. கிச்சிரோ போட்ட பலமான அடித்தளம் இந்தப் பிரம்மாண்ட வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். கிச்சிரோ அப்படி என்ன செய்திருக்கிறார்?
கிச்சிரோ ஒரு லட்சியவாதி. தன் கார் கம்பெனி தொடங்கும்போதே, அவர் என்ன சொன்னார் தெரியுமா? ``நாங்கள் உலகின் மிகப் பெரிய கம்பெனியாக ஆசைப்படவில்லை: மிகச் சிறந்த கம்பெனியாக ஆசைப்படுகிறோம்.” (We don’t want to be the biggest, just the best.)
கம்பெனி நடத்துவதின் முக்கிய குறிக்கோள் வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சி என்னும் எண்ணம் கிச்சிரோ ரத்தத்தில் ஊறியிருந்தது. டொயோடா என்னும் பெயரை உச்சரிக்க ஜப்பானியர்கள் சிரமப்படுவதை உணர்ந்தார். கம்பெனியின் பெயரை வாடிக்கையாளர்கள்தாம் தீர்மானிக்க வேண்டுமென்று முடிவெடுத்தார். கம்பெனிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று ஆலோசனை கேட்டுப் பொதுமக்களிடம் போட்டி வைத்தார். 27,000 க்கும் அதிகமான பெயர்கள் வந்து குவிந்தன. இவற்றிலிருந்து, டொயோட்டா (Toyota) என்னும் பெயரைக் கிச்சிரோ தேர்ந்தெடுத்தார். அதாவது, Toyoda என்னும் குடும்பப் பெயரில் d என்னும் எழுத்து t - யாக மாற்றப்பட்டது. மூன்று காரணங்கள்:
ஜப்பானிய மொழியில் Toyoda என்னும் வார்த்தையைவிட Toyota வார்த்தையை எழுதுவது எளிது.Toyota என்னும் வார்த்தையை ஜப்பானிய மொழியில் எழுத எட்டு வீச்சுக் கோடுகள் (Strokes) தேவைப்படும். ஜப்பானில் 8 ராசியான எண். கடைசியாக, ஆனால் மிக முக்கியமாக, ஏராளம் மக்கள் விரும்பிய பெயர் Toyota. மக்கள் குரல்தானே மகேசன் குரல்! ஆமாம், கிச்சிரோ தொடங்கிய நிறுவனம், நம் எல்லோருக்கும் பரிச்சயமான டொயோடா கார் கம்பெனி.
இரண்டாம் உலகப் போர் 1945 இல் முடிந்தது. அதுவரை கார் தயாரிப்பு ஆமை வேகம்தான். யுத்தம் முடிந்தபின் பொருளாதாரம் தலை தூக்கத் தொடங்கியது. மக்களிடம் பண நடமாட்டம் அதிகரித்தது. ஜப்பானியர்கள் பல பொருட்கள் வாங்க ஆசைப்படுவார்கள், அவற்றுள் கார்கள் நிச்சயமாக இருக்கும் என்று கிச்சிரோ கணித்தார். அவர்கள் எப்படிப்பட்ட கார்கள் வாங்குவார்கள் என்று சிந்தித்தார். ``குடும்பத்தின் தேவைக்குப் போதுமான சைஸில் இருந்தால்போதும், அதற்குமேல் பெரியதாக இருக்கக் கூடாது. வசதிகள் வேண்டும், ஆடம்பரம் கூடாது. விலை குறைவாக இருக்கவேண்டும்.”
1947 இல் SA என்னும் சின்ன காரை டொயோடா அறிமுகம் செய்தது. அவரே எதிர்பாராத அளவுக்கு ஆரவார வரவேற்பு. இந்த ஊக்கத்தால், 1950 - இல் டொயோடா அமெரிக்க மார்க்கெட்டில் நுழைந்தது. அமெரிக்கர்கள், ஜப்பானியர்கள் ஆகிய இருவரும் இரு மாறுபட்ட வாடிக்கையாளர்கள்,. அவர்களின் தேவைகள் மாறுபட்டவை என்பதை உணர்ந்து அமெரிக்க மார்க்கெட்டுக்காகவே, கொரோனா (Corona) என்னும் மாடலை வடிவமைத்தார்கள். தொடர் வெற்றி. 1980 களில் அமெரிக்காவில் உற்பத்தித் தொழிற்சாலை தொடங்குமளவுக்கு விற்பனையில் ஏற்றம்.
டொயோடா கம்பெனியின் வெற்றிக்கு மிக மிக முக்கிய காரணம், டொயோடா தயாரிப்பு முறை (Toyota Production System சுருக்கமாக TPS)
இது உலகத்திலேயே தலை சிறந்த உற்பத்தி முறையாகக் கருதப்படுகிறது. போட்டித் தயாரிப்பாளரான பிரம்மாண்ட ஜெனரல் மோட்டார் கம்பெனியே இந்த முறையின் முக்கிய அம்சங்களைக் கடைப்பிடிக்கிறது. அப்படி என்ன ஸ்பெஷல் இந்தத் திட்டத்தில்?
TPS இன் அடிப்படைக் கொள்கைகள் இரண்டு. அவை;
கைஜென் (Kaizen)
பிறரை மதித்தல்.
கைஜென் என்றால் என்ன? ஜப்பானிய மொழியில் கை என்றால் “மாற்றம்’’ என்று அர்த்தம். ஜென் என்றால் “நல்லது’’. இந்த இரண்டு வார்த்தைகளையும் இணைக்கிறபோது “தொடர்ச்சியான மாற்றம்’’ அல்லது “தொடர்ச்சியான முன்னேற்றம்’’ என்று அர்த்தம்.
கைஜென் என்கிற இந்தத் தொடர்ச்சியான முன்னேற்றத்தின் இலக்கு என்ன? மூரி, மூரா, மூடா ஆகிய மூன்றையும் இல்லாமல் செய்தல்.
மூரி - வேலையில் ஏற்படும் சோர்வு, அயர்வு. தொழிலாளர்கள் தங்கள் முழுத் திறமையுடன் செயல்படுவதை மூரி தடுக்கிறது. மூரி ஏற்பட முக்கிய காரணங்கள் - வேலையைத் தொழிலாளர்களிடையே சரியாகப் பகிர்ந்து கொடுக்காமை, பணி புரியும் இடத்தில் போதிய வெளிச்சமும் வசதிகளும் இல்லாமை.
மூரா - நிர்ணயிக்கப்பட்ட தரத்தைவிடக் குறைவான பொருட்களைத் தயாரித்தல். உற்பத்தி முறைகளில் குறை, தொழிலாளர்கள் பயிற்சிக் குறைவு ஆகியவை காரணங்களாக இருக்கலாம்.
மூடா - சரக்குகள், நேரம், உழைப்பு, பணம் ஆகியவற்றில் ஏற்படும் விரயம்.
கைஜென் செயல்பட வேண்டுமென்றால், தொழிலாளிகளை வெறும் எந்திரங்களாக நடத் தக்கூடாது. சமமானவர்களாக நடத்தவேண்டும். அவர்களின் உணர்ச்சிகளை மதிக்கவேண்டும்.
ஊழியர்களை டொயோடா TPS இன் அங்கமாக்குகிறது. எப்படித் தெரியுமா? அவர்கள் தொழிற்சாலையில் தங்கள் சுற்றுப்புறத்தைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். தங்களைச் சுற்றி நடப்பவை அனைத்தையும் பற்றி கேள்விகள் கேட்க வேண்டும். 5 W - க்கள் என்ப்படும் 5 வகைக் கேள்விகள் இவைதாம்:
What? - என்ன தவறு நடந்தது?
- தவறு எந்தெந்த வாடிக்கையாளர்களைப் பாதிக்கும்?
- என்ன முறை இந்தத் தவறைத் தவிர்க்கும் நல்ல முறை?
Where? - எங்கே பிரச்சினை உள்ளது?
Who? - யார் தவறு செய்தார்கள்?
- யார் தவறைத் திருத்த உதவி செய்வார்கள்?
When? - எப்போது தவறு நடந்தது?
Why? - ஏன் தவறு நடந்தது?
- என்னென்ன காரணங்கள்?
இந்த இந்த 5 W - க்களுக்கான பதில்களின் அடிப்படையில் வருவது How? - எப்படி முன்னேற்றம் செய்யலாம்?
எந்தக் கேள்வியும் சிறுபிள்ளைத்தனமானது அல்ல, மாபெரும் முன்னேற்றங்களின் ஆரம்பமே இத்தகைய கேள்விகள்தாம் என்று கிச்சிரோ அணுகியதால்தான், டொயோடா உலகப் பெரும் கார் தயாரிப்பாளராக இருக்கிறது. முன்னேற்றம் அடைய விரும்புபவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாலபாடம்.
தொடர்புக்கு: slvmoorthy@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT