Published : 26 Jul 2016 10:54 AM
Last Updated : 26 Jul 2016 10:54 AM

தொழில் முன்னோடிகள்: ஆன்ட்ரூ கர்னெகி (1835 - 1919)

சராசரி மனிதன் தன் திறமை, உழைப்பு ஆகியவற்றில் வெறும் 25 சதவீதத்தையே பயன்படுத்துகிறான். 50 சதவீதம் பயன்படுத்துபவனுக்கு உலகம் சல்யூட் அடிக்கிறது. நூறு சதவீதம் பயன்படுத்தும் ஒரு சிலரைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறது.

-ஆன்ட்ரூ கர்னெகி

பில் கேட்ஸ், வாரன் பஃபெட் உலகத் தின் நம்பர் 1, நம்பர் 2 பணக்காரர்கள் மட்டுமல்ல, நம்பர் 1, நம்பர் 2 கொடை வள்ளல்களும் இவர்கள்தாம். பில் கேட்ஸ் தன் 67 பில்லியன் டாலர்கள் (சுமார் நான்கரை லட்சம் கோடி ரூபாய்) சொத்தில் 28 பில்லியன் டாலர்களை (சுமார் 2 லட்சம் கோடி ரூபாய்) அதாவது 42 சதவீதத்தை அறக்கட்டளைக்கு வழங்கியிருக்கிறார். இதேபோல், வாரன் பஃபெட் மொத்தச் சொத்தில் 30 சதவீதத்தைத் தந்திருக்கிறார். இருவருமே மனிதநேயம் கொண்ட மாமனிதர்கள். ஆனால், சுமார் நூறு வருடங்களுக்கு முன்னாலேயே, இவர்களைத் தூக்கிச் சாப்பிடும்படி, தன் முழுச்சொத்தையும் ஒருவர் மக்களுக்கு எழுதிவைத்திருக்கிறார். அவர் ஆன்ட்ரூ கர்னெகி.

கர்னெகி 1835 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து நாட்டில் டன்ஃபெர்ம்லின் நகரத்தில் பிறந்தார். அப்பா கைத்தறி நெசவாளி. கர்னெகிக்கு இரண்டு வயது. ஜேம்ஸ் வாட் கண்டுபிடித்த நீராவி இயந்திரத்தைப் பயன்படுத்திப் பெரிய நெசவாலைகள் தோன்றின. இவை விசைத்தறிகளைப் பயன்படுத்தின. கர்னெகியின் அப்பா போன்ற கைத்தறி நெசவாளிகளின் வாழ்வாதாரம் மறைந்தது. அப்பா பார்ப்பவர்களிட மெல்லாம் வேலை கேட்டுக் கெஞ்சு வதைத் தன் ஏழாம் வயதில், கர்னெகி பார்த்தான். ``என் நெஞ்சு பற்றி எரிந்தது. ஏழ்மை என்னவென்று புரிந்தது. நான் பெரியவன் ஆனவுடன் வறுமைக்குத் தீர்வுகாண முடிவெடுத்தேன்.” இது வெறும் முடிவல்ல, வெறி, வெறி, பணம் குவிக்கும் வெறி.

ஏழைக் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் சேர்க்கப்பட்டான். வீட்டில் தண்ணீர்க் குழாய் கிடையாது. தெருவில் இருந்த பொதுக்குழாயில் தண்ணீர் பிடித்துக்கொண்டு வருவது அவனுக்கு அம்மா கொடுத்த தினசரி வேலை. ஊர்ப் பெண்கள் முந்தைய நாளே வரிசையாகப் பாத்திரங்களைக் குழாயடியில் வைத்துவிடுவார்கள். வரி சையில் நின்றால் அவனுக்குப் பள்ளிக் கூடம் போகத் தாமதமாகிவிடும். ஆகவே, வரிசையைக் கண்டுகொள்ளாமல், எல்லோருக்கும் முன்னால் போய்த் தன் பாத்திரத்தை வைப்பான். அவர்கள் திட்டுவார்கள். அவன் தன் பாத்திரத்தை நகர்த்தவே மாட்டான். துணிச்சல் இருந்தால், விதிகளை வளைக்கலாம், யாரையும் ஜெயிக்கலாம் என்று நினைக்கத் தொடங்கினான்.

வேலை கிடைக்காத அப்பா அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத் துக்குக் குடும்பத்தோடு குடி பெயர்ந்தார். அங்கே ஒரு நெசவாலையில் வேலை கிடைத்தது. அவர் சம்பளம் மட்டும் போதவில்லை. மகனின் படிப்பை நிறுத்தினார். தன் பதின்மூன்றாம் வயதில், கர்னெகி தொழிலாளிகளுக்கு நூல்கண்டுகளை எடுத்துத்தரும் எடுபிடி பையனாக வேலைக்குச் சேர்ந்தான். தினமும், 10, 11 மணிநேரம் இடுப்பை ஒடிக்கும் வேலை. பள்ளிக்குப் போய்ப் படிக்கவில்லையே என்று அவனுக்கு ஏகப்பட்ட குறை. நூலகத்துக்குப் போகத் தொடங்கினான். அசுரப் பசியோடு படித்தான். புத்தகங்கள் அவன் வாழ்க்கையின் முக்கிய அம்சமாயின.

1844 இல் தந்தி மூலமாகச் செய்திகள் அனுப்பும் முறை புழக்கத்தில் வந்து கொண்டிருந்தது. அதன் வருங் காலம் எப்படி இருக்குமென்று தெரியாத தால், பலர் அத்துறையில் பணி புரியத் தயங்கினார்கள். கர்னெகி துணிச்சலோடு அங்கு வேலைக்குச் சேர்ந்தான். ஓய்வு நேரத்தில் தந்திக்கான மார்ஸ் கோட் என்னும் சங்கேத மொழியில் தேர்ச்சி பெற் றான். விரைவில் தந்தி அனுப்புவராகப் பதவி உயர்வு கிடைத்தது.

அப்போது ரெயில் துறை வேகமாக வளர்ந்துகொண்டிருந்தது. ரெயில் கம் பெனியில் அதிகாரியாக இருந்த தாமஸ் ஸ்காட் அடிக்கடி தந்திகள் அனுப்ப வருவார். சூட்டிகையான கர்னெகியை அவருக்கு மிகவும் பிடித்தது. தனக்கு உதவியாளராக நியமித்துக்கொண்டார். ரெயில்வேயில் பல பெரிய கான்ட் ராக்ட்கள் வந்தன. அவற்றை யாருக்குக் கொடுப்பது என்னும் முடிவெடுக்கும் அதிகாரம் ஸ்காட்டிடம். கான்ட்ராக்ட் பெறும் கம்பெனிப் பங்குகளின் விலை சந்தையில் உயரும். ஸ்காட் தில்லாலங்கடி வேலை பண்ணினார். இந்தக் கம்பெனிப் பங்குகளைச் சந்தையில் வாங்குவார். கான்ட்ராக்ட் கொடுத்து விலை உயர்ந்ததும், விற்று லாபம் அடிப்பார்.

ஸ்காட்டின் பரிவர்த்தனைகள் தந்தி மூலமாக நடந்தன. எனவே, கர் னெகிக்குத் தெரியாமல் செய்யமுடி யாது. கர்னெகியை பங்காளியாக்கினார். கர்னெகிக்கு 500 டாலர் கடன் தந்தார். சில பங்குகள் வாங்கச் சொன்னார். ஒன்றிரண்டு மாதங்களிலேயே கர்னெ கிக்கு டிவிடெண்ட் வந்தது. ஆனந்த அதிர்ச்சி. உடல் உழைப்பு இல்லாமலே, புத்திசாலித்தனமாக முதலீடு செய்தால், பணத்தைப் பல மடங்கு குட்டிபோடச் செய்யலாம் என்று புரிந்துகொண்டான். அவன் இதற்குப் பின் திறந்த எல்லாச் சொர்க்கபுரிகளின் மந்திரச் சாவியும் வாய்ப்புகளை அடையாளம் கண்டு செய்த முதலீடுகள்தாம்.

முதல் வெற்றி உத்வேகம் தந்தது. விரைவில் குருவை மிஞ்சிய சிஷ்யன் ஆனார். பங்குச் சந்தையில் புகுந்து விளையாடினார். டாலர்கள் கொட்டின. தொழில் முனைவோர்களுக்குப் பணம் பண்ணுவதில் திருப்தியே வரக்கூடாது. கர்னெகிக்கு வரவில்லை. தொழில் தொடங்க முடிவெடுத்தார். ரயில்கள் பல பாலங்களைக் கடந்து பயணம் செய்தன. பல வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட இந்த மரப்பாலங்கள் ரயில்களின் வேகத்தைத் தாக்குப் பிடிக்கமுடியாமல் பலவீனமாயின. இவற்றை மாற்றிவிட்டு இரும்புப் பாலங்கள் அமைக்க ரெயில்வே நிர்வாகம் முடிவெடுத்தது. பொது அறிவிப்பு வரும் முன், இந்த ரகசியத்தைக் கர்னெகியுடன் ஸ்காட் பகிர்ந்துகொண்டார்.

1864. கர்னெகி வயது 29. கீஸ்டோன் பிரிட்ஜ் கம்பெனி என்னும் இரும்புப் பாலங்கள் கட்டும் தொழிற்சாலை தொடங்கினார். ஏராளமான இரும்பை வெளியாரிடம் வாங்கினார். நாமே தயாரித்தால் இன்னும் லாபம் கிடைக்குமே என்று கர்னெகி மூளையில் பொறி. யூனியன் அயர்ன் ஒர்க்ஸ் பிறந்தது. அப்போது, அமெரிக்காவில் ஏராளமான கம்பெனிகள் இரும்பு தயாரித்தன. கடும் போட்டி.

நம் தலைவருக்குப் பிடிக்காத வார்த்தை ``ஆட்டு மந்தை புத்தி.” வித்தியாசமாக என்ன செய்யலாம் என்று யோசித்தார். 1856 இல், உருக்குத் தயாரிப்புக்கான புதிய தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. விரைவில் இரும்பின் இடத்தை உருக்கு பிடிக்கும் என்று கர்னெகி கணித்தார். உருக்குத் தயாரிப்புக்கு கர்னெகி போன்ற சிறு தொழில் அதிபர்கள் நினைத்துப்பார்க்கவே முடியாத முதலீடு தேவை. கர்னெகி ரிஸ்க் எடுத்தார். கையிருப்புப் பணம் முழுக்க முதலீடு செய்தார். இரும்பு, கரி ஆகிய மூலப்பொருட்களின் சுரங்கங்களை வாங்கினார். தயாரிப்பு செலவைக் குறைக்க தொழிலாளர்களைத் தினமும் 12 மணி நேரம் வேலை வாங்கினார். போட்டியாளர்கள் எல்லோரும் ஜூட். உலக உருக்கு சாம்ராஜ்ஜியத்தின் ராஜாதி ராஜா ஆனார்.

தன் 45 ஆம் வயது முதல், வாரத்தின் மூன்று நாட்கள் மட்டுமே பிசினஸூக்கு, மீதி நேரம் சமூக சேவைக்கு என்று ஒதுக்கினார். நேரம் மட்டுமல்ல, பணமும். குடும்பத்துக்கென வருடம் 50,000 டாலர்கள் மட்டுமே வைத்துக்கொண்டு மீதிச் செல்வத்தில் 2,800 இலவச நூலகங்கள், கர்னெகி மெலன் பல்கலைக் கழகம் ஆகிய வற்றைத் தொடங்கினார்.

பகுதி நேரத்தையே தொழிலுக்கு செலவிட்டாலும், கர்னெகியின் உருக்கு சாம்ராஜ்ஜியம் பிரம்மாண்டமாக வளர்ந்துகொண்டேயிருந்தது. தன் 66 ஆம் வயதில், மொத்த தொழிலையும் 200 மில்லியன் டாலர்களுக்கு விற்றார். 84 ஆம் வயது மரணம்வரை, தன் நேரத்தையும், பணத்தையும் நூலக வளர்ச்சி, உலக அமைதி ஆகியவற் றுக்காகச் செலவிட்டார். பணத்தைச் சேர்ப்பதற்கு மட்டுமல்ல, செலவிடுவ தற்கும் கர்னெகி நல்ல வழிகாட்டி.

slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x