Last Updated : 17 Dec, 2013 12:00 AM

 

Published : 17 Dec 2013 12:00 AM
Last Updated : 17 Dec 2013 12:00 AM

தொழில் முனைவு - என்றால் என்ன?

தொழில் முனைவு (Entrepreneurship)

தொழில் முனைவு என்ற சொல், வியாபாரத்திற்கான புதிய வாய்ப்பைக் கண்டுபிடித்து, அந்த வாய்ப்பைப் பயன்படுத்த வளங்களைத் தேடி, ஒன்று சேர்த்து, வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்திசெய்து, லாபம் தேடுவது என்ற நீண்ட விளக்கம் கொண்டது. சந்தை பொருளாதாரங்களில் தொழில் முனைவு ஏற்படுவது இயற்கை, ஏனெனில் அங்குதான் அதனை வளர்த்தெடுப்பதற்கான சூழல் நிலவுகிறது.

தொழில் முனைவு ரிஸ்க் நிறைந்தது, புதிய தொழில்கள் தோல்வியடைவதற்கான வாய்ப்பு அதிகம். எனவே ரிஸ்கை தாங்குவது தொழில் முனைவோர்களின் முக்கிய திறன்.

புதிய கண்டுபிடிப்புகளை சந்தைப்படுத்துவது, தன்னம்பிக்கை, ஊக்கத்துடன் உழைத்தல், லட்சியத்தை அடையும் தீவிரம், இவை எல்லாம் தொழில் முனைவோருக்குத் தேவை.

சிறந்த தொழில் முனைவுக்கு சரியான வியாபார திட்டமிடல் அவசியம். நுகர்வோரின் தேவையைக் கண்டறிவதும், அதைப் பூர்த்தி செய்ய புதிய வியாபார அணுகு முறையை வடிவமைத்து செயல்பட திட்டமிடல் அவசியம். எனவே, ஒரு புதிய வியாபாரத்திற்கான ஆதி முதல் அந்தம் வரையான வியாபாரத் திட்டம் தேவை.

ஒவ்வொரு வியாபாரத் திட்டத்திலும் தொழில் முனைவோரின், புதிய வியாபாரத்தின் சிறப்புகள் இருந்தாலும், எல்லா வியாபாரத் திட்டத்திலும் சில பொது அம்சங்கள் இருக்கின்றன. அவை: திட்டத்தின் சுருக்கம், வியாபாரப் பொருள் அல்லது சேவையின் விபரம், தொழில் திட்டம், எதிர்கால நிதி நிலை மற்றும், தேவைப்படும் கடன் அல்லது முதலீட்டு அளவு.

திட்டத்தின் சுருக்கத்தில் வியாபாரத்தின் அனைத்து அம்சங்களும் சுருக்கமாக சொல்லப்படவேண்டும். வியாபாரப் பொருள் அல்லது சேவை பற்றிய எல்லா விபரங்களும் திட்டத்தில் தெளிவாக சொல்லப்பட வேண்டும்.

வியாபாரம் வெவ்வேறு நிலைகளில் எவ்வாறு வளர்ச்சி அடையும் என்பதையும் திட்ட அறிக்கை கூறவேண்டும். பொருள் பற்றிய தொழில் நுட்பக் குறிப்புகள், உற்பத்தி தொழில் நுட்பம், தேவைப்படும் உள்ளீட்டுப் பொருட்கள், தொழிலாளிகளின் தேவை என எல்லா குறிப்புகளும் திட்ட அறிக்கையில் இருக்கவேண்டும்.

பொருள்/சேவை சந்தைப்படுதுவது பற்றிய குறிப்புகள் அவசியம். நிதி திட்டத்தில் அடுத்த சில ஆண்டுகளில், ஒவ்வொரு மாதமும் வரவு செலவு எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்க்கப்பட்ட கணக்கு வேண்டும். இதில் வியாபார வரவு, முதலீடு செலவு, அதற்கு எவ்வாறு பணம் சேர்ப்பது என்ற விபரங்கள் நிதி திட்டத்தில் இருக்கவேண்டும்.

கடன் அல்லது வெளியிலிருந்து முதலீடு வேண்டும் என்றால் அதற்கான அறிக்கை தெளிவாக இருக்கவேண்டும். கடனுக்கான வட்டியை எந்த காலத்தில் எவ்வளவு செலுத்த முடியும், வெளி முதலீட்டிற்கு எந்த காலத்திலிருந்து ஈவுத் தொகை கொடுக்கப்படும் என்ற விபரங்களும் தேவை.

பொருளாதாரங்கள் வளர தொழில் முனைவு அவசியம், குறிப்பாக சிறு தொழில் முனைவு தான் அதிக வேலைவாய்ப்பையும், உற்பத்தியையும் கொடுக்கின்றன. பலருக்கு தொழில் முனைவு திறன் இருப்பதும், அதனை கண்டறிந்து வளர்ப்பதும், அதற்கான சூழலை ஏற்படுத்துவதும் சமூக பொருளாதாரத முன்னேற்றத்திற்கு முக்கியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x