Published : 04 Dec 2013 12:00 AM
Last Updated : 04 Dec 2013 12:00 AM

மனித உழைப்பில் முதலீடு செய்யுங்கள்

“வெண்ணெய்யை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவானேன்?” என்ற பழமொழி நம் இந்திய தொழில் துறையை விட எதற்கும் அத்தனை சிறப்பாக பொருந்தாது.

இரண்டாம் தலைமுறை தொழில் முனைவோர் சுமார் முப்பது பேருக்கு பயிற்சி அளிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சிலர் மூன்றாம் அல்லது நான்காம் தலைமுறை முதலாளிகள். பலர் மிகப்பெரிய தொழிற்சாலைகளை வெற்றிகரமாக நிர்வாகம் செய்து வருகின்றனர். அனைவரும் 35 வயதிற்கு குறைவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அனைவருக்கும் பொதுவான பிரச்சினை ஒன்று தான் இந்த பயிற்சி/ ஆலோசனை அமர்விற்கு ஏற்பாடு செய்ய வைத்திருந்தது.

வேலை செய்ய ஆட்கள் பற்றாக்குறை என்பது தான் அது!

அயல் நாட்டுப் படிப்பு, நவீன சிந்தனை, ஆலோசனையை ஏற்கும் மனோபாவம், முடிவுகள் எடுக்கும் அதிகாரம், தொழிலை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் தீவிரம் என அந்த குழுவின் பலங்கள் பயிற்சியை மிகச் சரியான திசைக்கு எடுத்துச் சென்றது.

ஆனால் வேலைக்கு ஆட்கள் கிடைக்காத பிரச்சினையை ஏதோ ஒரு ஹெச். ஆர் துறை விஷயம் போல மட்டுமே ( பெரும்பான்மையான முதலாளிகள் போல) அவர்கள் யோசிப்பதை சுட்டிக் காட்டினேன். மெக்கின்ஸி அறிக்கையின் வாயிலாக நிதர்சனத்தை விளக்கினேன்.

சராசரி வயது இன்று இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. ஜப்பான், ஜெர்மனி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகள் வளர்ந்திருந்தாலும் வேலை செய்ய ஆட்களே இல்லாததால் மிகப் பெரிய நெருக்கடியை சந்தித்து வருகின்றன. சீனாவை விடவும் அதிக இளைஞர்கள் குறைந்த சம்பளத்தில் இந்தியாவில் கிடைப்பதுதான் நிஜம்.

சுமார் 40% மக்கள் 1.25 டாலர் தினசரி வருமானத்தில் வாழும் நாட்டில் வேலை செய்ய ஆட்கள் இல்லை என்றால் நாம் அடிப்படையில் எங்கோ பெரிய தவறு செய்துள்ளோம் என்பது தானே பொருள்?

மெக்கின்ஸி அறிக்கை 2030 பற்றி உலகத்திற்கு கூறுவது இன்றே இந்தியாவிற்கு பொருந்துகிறது: “திறன்கள் குறைந்த தொழிலாளிகள் வேலை கிடைக்காமல் பெரும் அளவிற்கு தேங்கிப் போவார்கள். அதே நேரத்தில் திறன்கள் தேவைப்படும் பல வேலைகள் பல ஆட்கள் இல்லாமல் அவதிப்படும். அந்த வேலைகள் வேறு நாடுகளுக்கு நகர்ந்து செல்லும். இந்த பொருளாதார/ சமூக ஏற்றத்தாழ்வுகள் தீவிரவாத்தையும் நெருக்கடி நிலைகளையும் ஏற்படுத்தும். கல்வித்திட்டத்தையும் திறன் வளர்ப்பையும் இணைக்காத தேசங்கள் பின் தங்கிப் போகும்!”

ஒரு துரித உணவுத் தேடல் போல வேலைக்கு ஆட்கள் வேண்டும் என்று நினைக்கும் மனோபாவம் ஆபத்தானது என்று விளக்கினேன். கல்வி, திறன் வளர்ப்புப் பயிற்சி, தொழில்துறை அனுபவம் இவற்றை இணைக்க இது வரை என்ன செய்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். இது வியாபார வியூகம் சார்ந்த விஷயம். வெறும் ஹெச். ஆர் சமாச்சாரமல்ல என்பதை உணர்த்தினேன்.

பசித்தவனுக்கு மீன் கொடுத்தால் இன்று பசியாறும். அதை விட மீன் பிடிக்கக் கற்றுத் தந்தால் அது அவன் வாழ்க்கை முழுவதும் பசியாற்றும் என்ற பொன்மொழியை படித்திருக்கிறோம். மீன் பிடிக்கவும் கற்றுத் தராமல் பசிக்கு (அரசு) மீன் கொடுத்ததால் தான் வேலைக்கு வர மறுக்கிறான் என்பது எத்தனை பிற்போக்கான வாதம்?

நமக்குத் தேவையான தொழிலாளிகளை இனம் கண்டு, திறன் வளர்த்து, தக்க வைத்துக் கொள்வது ஒவ்வொரு தொழில்துறையின் ஆதாரத் தேவை. இதற்கான தொலை நோக்கு சிந்தனையும் முதலீடுகளும் அவசியம். நாளைய தேவைகளை கணக்கிட்டு இன்றே செயல்படுதல் தான் நம்மை பிழைக்கச்செய்யும்.

இதை முடிவு எடுக்கும் அதிகாரத்தில் உள்ளவர்கள் (அரசாங்கம், தொழில்துறை மற்றும் கல்வித்துறை) மனது வைத்து துரிதமாக செயல்படாவிட்டால் சரித்திரம் நம்மை மன்னிக்காது.

இயற்கை வளம், மனித வளம், தொழில் நுட்பம், ஜன நாயக அரசியல் அமைப்பு அனைத்தும் நிரம்ப இருந்தும் இதைச் செய்யத் தவறினால் அதை என்னவென்று சொல்வது?

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய நெருக்கடி நிலையை உணர்ந்து எல்லா நாடுகளும் வரிந்து கட்டிக் கொண்டு வேலையை ஆரம்பித்து விட்டன. நாமும் என்.எஸ்.டி.சி போன்ற அமைப்புகளை ஏற்படுத்தினாலும் 50 கோடி மக்களை இன்னும் 10 ஆண்டுகளில் திறன் பட வைக்கும் புரட்சி பற்றி இங்கு பலருக்கு ஓன்றுமே கிடையாது.

இதை எந்த அரசியல் கட்சியும் தேசப்பிரச்சினையாக எடுத்துச் செல்லாதது சோகம். மிகப்பெரிய வணிக வாய்ப்புகள் உள்ள இந்த Skilling Industry யிலும் பெரிய நிறுவனங்கள் முதலீடுகள் செய்யவில்லை. Modular Employability Scheme போன்ற அரசாங்கத் திட்டங்களில் ஒதுக்கிட்ட பெரும் அளவு நிதி செலவிடப் படாமலேயே உள்ளது.

என்ன செய்யலாம்?

அரசாங்கம் இதற்கு முன்னுரிமை கொடுத்து தனி அமைச்சரகம்- குறைந்த பட்சம் வாரியம்- அமைக்க வேண்டும். விஜயகாந்த் வியக்கும் வண்ணம் எல்லா புள்ளி விவரங்களும் நம்மிடம் உள்ளன. எந்தத் துறைக்கு எத்தனை பேர் தேவை என்று. அடுத்த ஐந்து ஆண்டு தேவைக்கு இப்போதே திட்டமிடல் அவசியம். மின் பிரச்சினைக்கு அரசாங்கத்தை நாடும் தொழில் அதிபர்கள் இதற்காக எத்தனை படி வேண்டுமானாலும் ஏறி இறங்கலாம். தவறில்லை.

பள்ளிக் கல்வியில் தொழில் கல்வியைக் கட்டாயமாக்க வேண்டும். 8,9,10 வகுப்புகளில் தொழில் பயிற்சி கொடுக்கலாம். பிளஸ் 2 விற்கு பின் அவரவர் தேர்வு- IIT சேர்வதும் ITI சேர்வதும்! இதனால் கடை நிலை திறன்கள் மேம்படும். பின்னர், ITI செல்வோருக்கு உதவித்தொகை/ கடன் தொகை அளித்து படிக்க வைக்கலாம். இன்னும் குறைந்த பட்சம் 1000 ITI க்கள் துவங்க வேண்டும்.

தொழில் நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் CSR முதலீடுகளை அடிப்படைக் கல்வி, திறன் வளர்ச்சிக்கு மட்டும் அடுத்த ஐந்து ஆண்டுகள் செய்தாலே போதும். அது தொழில் துறை தற்காப்பு நடவடிக்கையாக உருமாறும். ஒவ்வொரு துறைக்கும் இன்று பிரத்தியேகமாக ஒரு Skill University (திறன் பல்கலைகழகம்) தேவைப்படுகிறது. ஆஸ்திரேலியா, கொரியா, ஜெர்மனி போன்ற நாடுகளின் அனுபவங்களை நாம் படித்தல் அவசியம்.

மாணவர்களும் பெற்றோர்களும் தொழில் கல்வியை கீழ்த்தரமாகப் பார்க்கும் மனோபாவத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.

தச்சு வேலை செய்து விட்டு வரும் வருமானத்தில் உளவியல் படித்து பேராசிரியர் ஆவதோ, மென்பொருள் எழுதாத நேரத்தில் பகுதி நேர சமையல் கலைஞர் ஆவதோ மேலை நாடுகளில் சாத்தியமாகிறது. இன்று நாம் நம் மதிப்பீடுகளால் ஏன் நம் வாழ்க்கையை சிக்கல் படுத்திக் கொண்டிருக்கிறோம்.

நம் வீட்டுப் பணிப்பெண் செய்யும் வேலைக்கு மேலை நாட்டில் எவ்வளவு சம்பளம் என்று விசாரித்தால் நம் பார்வைகள் விரிவடையும். இன்று குழந்தைகளை, முதியவர்களை பராமரிக்கும் பணியாளர்களுக்கு அயல் நாடுகளில் உள்ள ஊதியம் ஒரு பொறியாளருக்கு இணையானது.

விலை மதிக்க முடியாதது மனித உழைப்பு. அதற்கு விலையிடும் போதுதான் அதன் மதிப்பை உணர்கிறோம் என்பது தான் உண்மை.

gemba.karthikeyan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x