Published : 16 May 2017 10:36 AM
Last Updated : 16 May 2017 10:36 AM

தொழில் முன்னோடிகள்: ஜாக் வெல்ஷ் (1935)

ஊழியர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது மட்டுமே என் வேலை. பிறகு, தங்களையும், நிறுவனத்தையும் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

- ஜாக் வெல்ஷ்

உங்களுக்குத் திக்குவாயா? பிறர் முன்னால் வாயைத் திறக்கும்போது வார்த்தைக்குப் பதில் காற்றுத்தான் வருகிறதா? எல்லோரும் கேலி செய்கிறார்கள்? தாழ்வு மனப்பான்மையால், எல்லோரிடமுமிருந்து விலகித் தனிமரமாக வாழ்கிறீர்களா? வருங்காலத்தில் நம் வாழ்க்கை என்ன ஆகுமோ என்று பயப்படுகிறீர்களா? அச்சமே வேண்டாம். இதோ, உங்களில் ஒருவர், திக்குவாய்க் குறை கொண்டவர் சொல்கிறார், ``நீங்கள் பிரபல நிறுவனத்தின் சி.இ.ஓ. ஆகலாம். 20 ஆண்டுகள் அதைத் திறமையாக நிர்வகித்து, உலக மகா கம்பெனியாக்கலாம்.’’ இவர், ஜான் ஃபிரான்சிஸ் வெல்ஷ், சுருக்கமாக ஜாக் வெல்ஷ்.

சொல்வதைச் செய்து காட்டியிருப்பவர். ஜெனரல் எலெக்ட்ரிக் கம்பெனியை இருபது ஆண்டுகள் வழி நடத்தி, ஓய்வு பெற்ற பின்பு, தன் 82 வயதிலும், மேனேஜ்மென்ட் ஆலோசகர், எழுத்தாளர், ஜாக் வெல்ஷ் இன்ஸ்டிடியூட் என்னும் இணைய எம்.பி.ஏ. கல்லூரி நிறுவனர் ஆகிய பல தளங்களில் சுறுசுறுப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருப்பவர்.

அப்பா ரெயில்வேயில் நடத்துநராக வேலை பார்த்தார். வருமானம் குறைவு. ஆகவே, தினமும் ஓவர்டைம், 14 மணிநேர உழைப்பு. அப்பாவைப் பார்த்துப் பார்த்து, வாழ்க்கையில் உயர கடுமையாக உழைக்கவேண்டும் என்னும் எண்ணம் மனதில் ஆழமாகப் பதிந்தது.

சிறு வயது முதலே திக்குவாய். உடன் விளையாடும் குழந்தைகள் கேலி செய்வார்கள். பள்ளிக்கூடம் போகத் தொடங்கினான். கேலி இன்னும் அதிகமானது. பிறரிடமிருந்து ஒதுங்கித் தனிமையில் இனிமை காணத் தொடங்கினான். மகன் வாழ்வே சிதறிப்போகும் என்று அம்மா உணர்ந்தார். அவன் மனதில் உற்சாக டானிக் ஊற்றினார். எப்படித் தெரியுமா? அவனிடம் அடிக்கடி சொல்லுவார், “மூளையும், நாக்கும் சம வேகத்தில் வேலை செய்யும்போது வார்த்தைகள் தங்குதடையில்லாமல் வரும். உனக்கு எல்லோரையும்விட மூளை அதிகம், நாக்கைவிட அதிவேகமாக வேலை செய்கிறது. அதனால்தான், திக்குகிறது.” ஜாக் அம்மா சொன்னதை அப்படியே நம்பினான். இதற்குப் பிறகு, தாழ்வு மனப்பான்மை அவனுக்கு வரவேயில்லை.

அம்மா அவனுக்குக் கற்றுக்கொடுத்த முக்கிய பாடம், ஆரோக்கியமான போட்டி மனப்பான்மை. பள்ளிக்கூடத்தில் ஜாக், ஹாக்கி டீமின் பிளேயர். அவர்கள் டீம் தொடர்ந்து ஏழாவது முறையாகத் தோல்வி கண்டது. ஜாக் மனதில் எரிச்சல், கோபம். ஹாக்கி ஸ்டிக்கை வீசி எறிந்தான். ஒரு அறைக்குள் போய்த் தனியாக உட்கார்ந்தான். கேள்விப்பட்ட அம்மா அங்கே ஓடி வந்தார். “தோல்வியை ஏற்கத் தெரிந்தவன் மட்டுமே ஜெயிக்க முடியும். உனக்கு அந்த மனோபாவம் இல்லையென்றால், இனிமேல் நீ விளையாடவே வேண்டாம்.” விளையாட்டுக்கு மட்டுமல்ல, ஜாக் வாழ்க்கைக்கே இது பாடமானது.

ஜாக்கிடம் இருந்த குணம், எப்போதும் எதையாவது செய்துகொண்டேயிருக்க வேண்டும். கோடை விடுமுறையில் வீடு வீடாக நியூஸ்பேப்பர் போட்டான், ஷூ விற்றான், கால்ஃப் மைதானங்களில் பந்து பொறுக்கும் உதவியாளனாக இருந்தான். பணத்தின் மதிப்பு தெரிந்தது.

படிப்பிலும் ஜொலித்தார். 25 ஆம் வயதில், கெமிக்கல் இன்ஜினீயரிங்கில் டாக்டர் பட்டம் வாங்கினார். அமெரிக்காவின் பிரபல ஜெனரல் எலெக்ட்ரிக் கம்பெனியின் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஜுனியர் இன்ஜினீயராகச் சேர்ந்தார். சில மாதங்களிலேயே தயாரிப்பு நுணுக்கங்கள் அத்தனையையும் கற்றுக்கொண் டார். ஒரு வருடம் முடிந்தது. சம்பள உயர்வை அறிவித்தார்கள். அபாரத் திறமை காட்டிய அவருக்கும், சும்மா பொழுதை ஓட்டியவர்களுக் கும் ஒரே உயர்வு. ஜாக் ஏமாற்றமடைந்தார். வேறு வேலை தேடினார். கிடைத்தது. தன் முடிவை மேனேஜரிடம் சொன்னார். ‘‘பொறுமை யாக இரு. உன் நாட்கள் வரும்” என்ற மேனேஜரின் ஆலோசனையைக் கேட்டு வேலையில் தொடர்ந்தார். தன் கையில் அதிகாரம் வரும் போது, திறமைக்கு முதலிடம் தர வேண்டும் என்று முடிவெடுத்தார்.

ஓடின மூன்று வருடங்கள். வேலையைவிட நினைத்தவருக்கு, வேலையை இழந்துவிடு வோமோ என்று பயம் உண்டாக்கும் நிகழ்ச்சி. தன் அலுவலகத்தில் ஜாக் உட்கார்ந்திருந்தார். வெடிகுண்டுகள் தாக்கியது போல் கட்டடம் அதிர்ந்தது. அவர் கட்டுப்பாட்டில் இருந்த தொழிற்சாலைப் பிரிவில் ஏதோ தவறு நடந்து, இயந்திரங்களும், கட்டடமும் பணால். ஏகப்பட்ட நஷ்டம். தலையில் இடி விழுந்ததுபோல் உணர்ந்தார்.

விபத்தை விசாரிக்க அவரை நியூயார்க் நகரத் தலைமைச் செயலகத்துக்கு அழைத் தார்கள். விசாரணை என்னும் பெயரில் ஏதேதோ கேட்பார்கள், சீட்டைக் கிழிப்பார்கள், வருங்காலம் இனி இருண்ட காலம் என்னும் முடிவோடு ஜாக் நியூயார்க் போனார். அங்கே, சார்லி ரீட் என்னும் தலைமை அதிகாரியைச் சந்தித்தார். காத்திருந்தது ஆச்சரியம்.

ரீட், ஜாக்கைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவில்லை. சக அதிகாரியாக மதிப்புத் தந்தார். இத்தகைய விபத்துக்கள் வராமல் எப்படித் தடுக்கலாம் என்று ஆலோசனைகள் கேட்டார். தவறுகள் நடக்கும்போது, அதற்குக் காரணமானவர்களைத் தண்டிப்பது சுலப வழி, எல்லோரும் கடைப்பிடிக்கும் வழி. ஊக்கம் தந்து, தன்னம்பிக்கையை வளர்ப்பது ரீட் காட்டிய வழி. இதுவே ஜாக் பாதையாயிற்று.

ஜாக் பல புதுமைகளை அரங்கேற்றினார். அப்போது பிளாஸ்டிக்ஸ் தொழிற்சாலைகளில் மட்டுமே பயன்படும் மூலப்பொருளாக இருந்தது. இன்று பார்க்கும் இடமெல்லாம், பிளாஸ்டிக்ஸ் இருக்கிறதே, இதற்கு முக்கிய காரணம், ஜாக் கடைபிடித்த விளம்பர, மார்க்கெட்டிங் யுக்திகள். இதனால், கொசுறு பிசினஸாக இருந்த பிளாஸ்டிக்ஸ், கம்பெனியின் முக்கிய பிசினஸாயிற்று. எட்டே வருடங்களில் ஜாக் பிளாஸ்டிக்ஸ் பிரிவின் தலைவரானார்.

அபாரத் திறமை, கடும் உழைப்பு. நிறுவன ஏணியில் கிடுகிடுவென்று மேலே ஏறினார். 1980 ல், சி.இ.ஓ- ஆக நியமிக்கப்பட்டார். இந்தக் காலகட்டம் அமெரிக்க பிசினஸ்களின் சோதனைக் காலம். நாட்டில் பொருளாதார மந்தநிலை. இது போதாதென்று, சோதனைமேல் சோதனையாக, ஜப்பான் தரமான பொருட்களை, அமெரிக்கர்கள் நினைத்துப் பார்க்காத விலையில் உலகச் சந்தைகளுக்கு சப்ளை செய்துகொண்டிருந்தது. ஜெனரல் எலெக்ட்ரிக் பாதிக்கப்படவில்லை. விற்பனையும், லாபமும் வழக்கம்போல். ஆனால், ஜாக் மூளை சொன்னது, விரைவில் நமக்கும் சரிவு வரலாம். முன்னேற்பாடாக நடவடிக்கைகள் எடுக்கத் தொடங்கினார். அவர் எடுத்துவைத்த ஒவ்வொரு அடியும், அதிரடி, தவுசன்ட்வாலா சரவெடி. ஊழியர்களுக்கு மதிப்புத் தரும், அன்போடு பழகும் ஜாக்கின் வெல்வெட் கையுறைக்குள் இரும்புக் கரம் இருக்கிறது என்பதை உலகம் புரிந்துகொண்டது.

ஜாக் தலைவரானபோது ஜெனரல் எலெக்ட்ரிக் சாம்ராஜ்ஜியத்தில் 370 பிசினஸ்கள் இருந்தன. சந்தை நிலவரப்படி, ஒவ்வொரு நிறுவனமும், என்ன இடம் பிடித்திருக்கிறது என்று ஜாக் கணக்கிட்டார். நம்பர் 1, நம்பர் 2 இடங்களில் எந்த பிசினஸ்கள் இல்லையோ, அவற்றை விற்க முடிவெடுத்தார். அடுத்த ஆறு வருடங்களில் 71 பிசினஸ்களை விற்றார். தொழிற்சாலைகளில் உற்பத்தித் திறனைப் பெருக்கவும், செலவைக் குறைக்கவும், நவீனத் தொழில்நுட்ப இயந்திரங்களை வாங்கினார். இந்த மாற்றங்களால், சுமார் 1,20,000 பேர், அதாவது நான்கில் ஒருவர் வேலை இழந்தார்.

ஜெனரல் எலெக்ட்ரிக் திறமைசாலிகளின் உறைவிடமாக இருக்கவேண்டும் என்று ஜாக் நினைத்தார். இதற்காகப் புரட்சிகரமான மனிதவளக் கொள்கையை அறிமுகம் செய்தார். இதன்படி, ஒவ்வொரு மேனேஜரும் தன் கீழ் பணியாற்றுபவர்களை மூன்று வகையினராகப் பிரிக்கவேண்டும்.

70 சதவீதம் எதிர்பார்ப்புகளை மிஞ்சும் சாதனையாளர்கள்

20 சதவீதம் எதிர்பார்த்த அளவுக்குப் பணியாற்றுபவர்கள்

10 சதவீதம் இலக்குகளை எட்டாதவர்கள்.

டாப் 70 சதவீதத்தினருக்குப் பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும் ; இரண்டாம் வரிசை 20 சதவீதத்தினருக்கு வேலை நீடிக்கும். உயர்வுகள் கிடையாது; இறுதி 10 சதவீதத்தின ருக்கு எச்சரிக்கை. ஒரு வருடத்தில் செயல்பாட் டில் முன்னேற்றம் காட்டாவிட்டால் வேலை போகும்.

ஜாக் செயல்பாடு மனிதநேயமற்றது என்று குறை சொல்வோர் பலர். ஆனால், மேனேஜ்மென்ட் ஆலோசகர் இந்தர் ஜோஷி இதை வித்தியாசமாகப் பார்க்கிறார். ``ஜாக் டாக்டர் மாதிரி. ஜப்பானியப் போட்டியை எதிர்கொள்ள ஜெனரல் எலெக்ட்ரிக் கம்பெனிக்கு இத்தகைய அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. அன்று அவர் அதைச் செய்திருக்காவிட்டால், ஜெனரல் எலெக்ட்ரிக் கால வெள்ளத்தில் காணாமல் போயிருக்கும்.”

உலகமும் இந்தர் ஜோஷியோடு ஒத்துக்கொள்கிறது. ``அமெரிக்காவின் கண்டிப்பான சி.இ.ஒ.” என்று ஊடகங்கள் பட்டம் சூட்டின. அதே சமயம், ஜாக் தலைமை வகித்த இருபது ஆண்டுகளில் (1981 2001) ஜெனரல் எலெக்ட்ரிக் 40 மடங்கு வளர்ச்சி கண்டது. ``இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சி.இ.ஓ.” என்று பிரபல ஃபார்ச்சூன் பத்திரிகை கிரீடம் வைத்தது. மகத்தான மரியாதை!

தொடர்புக்கு: slvmoorthy@gmail.com



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x