Published : 16 Apr 2014 12:35 PM
Last Updated : 16 Apr 2014 12:35 PM

என்ன செய்ய வேண்டும் கல்லூரிகள்?

தெற்கே போயிருந்தேன். பத்திரிகையாள நண்பரின் அன்பின் நிமித்தமாக அவர் சொந்த மண்ணில் ஒரு வேலை வாய்ப்பு முகாமில் பேச ஒப்புக்கொண்டிருந்தேன். தென்காசி அருகே தோரணமலை அடிவாரத்தில் ஒரு திருமண மண்டபத்தில் இந்த இலவச முகாமும் அன்னதானமும் ஒரு டாக்டர் குடும்பம் ஏற்பாடு செய்திருந்தது.

பல்துறை பெரியவர்கள் உரையாற்றினார்கள். கடைசியாக நானும்.

உணவு ஆறுவதற்குள் உரையை ஆற்ற நினைத்து சுருக்கமாக என்று ஆரம்பித்தது மாணவர்களின் கேள்விகளால் மதியம் இரண்டரை வரை சென்றது. மதிய உணவிற்குப் பின்னும் காத்திருந்து மனதில் இருப்பதை பகிர்ந்து கொண்டார்கள். கேள்வி கேட்டார்கள். நிறைவாக இருந்தது.

பேசும்போது “தாழ்வு மனப்பான்மைதான் தமிழ் மாணவர்களின் பெரிய குறை” என்று பேசியது தன் உள்ளத்தில் உள்ளதை அப்படியே பிரதிபலிப்பதாகச் சொன்னார்கள் பலர்.

“எங்க பசங்க எந்த வேலையா இருந்தாலும் நல்லா செய்வாங்க. ஆனா கூச்சமும் தயக்கமும்தான் பெரிய குறை” என்றனர் நிகழ்ச்சி அமைப்பாளர்கள். அடுத்த முறை பல கல்லூரிகளை அழைத்துப் பெரிதாகச் செய்யலாம் என்றார்கள். கேம்பஸுக்கு ஹெச்.ஆரை அழைத்து வர முடியுமா என்று சிலர் விசாரித்ததாகச் சொன்னார்கள்.

எனக்கு நெல்லை என்றும் நல்ல நினைவு. சென்றது சில முறைதான் என்ற போதிலும் கார் கம்பெனிக்காக ஐ.டி.ஐ மற்றும் பாலிடெக்னிக்குகளுக்கு ஆள் எடுக்கச் சென்றபோது, தகுதியானவர்கள் அதிகம் கிடைத்தது நெல்லை வட்டாரத்தில்தான். (அடுத்து கிடைத்தது கொங்கு மண்டலத்தில்!).

கடின உழைப்பாளிகள், கற்றுக் கொள்ளத் தயாரானவர்கள், எளிமையானவர்கள், மனித நேயம் கொண்டவர்கள் என பல தகுதிகள் இருந்தும் தென் தமிழ் நாட்டில் அதிக அளவு கேம்பஸ் ரெக்ரூட்மெண்ட் நடப்பதில்லை. சில பெரிய கல்லூரிகளை தவிர்த்து பல கல்லூரிகளின் நிலை பரிதாபத்திற்குரியது. இத்தனைக்கும் நகைப்பெட்டி போல அலங்காரமாக கட்டடம் கட்டி வைத்திருக்கிறார்கள். ஆனால் கார்பரேட் தொடர்புகளோ பெரிய பிராண்டிங் முயற்சிகளோ நடக்கவில்லை.

ஆங்கில அறிவு குறைவு என்பது வாஸ்தவம்தான். ஆனால் அது கற்றுக்கொடுக்க முடியாத ராக்கெட் அறிவியல் அல்ல. தவிர இது மாணவர்களுக்கு மட்டுமல்ல...ஆசிரியர்களுக்கும் உள்ள சிக்கல்தான். இதற்கு முறையான முயற்சிகள் எடுத்ததாகத் தெரியவில்லை. கோர்ஸ் முடியும் தருவாயில் மென் திறன்கள் அல்லது ஆங்கிலம் என்று ஆரம்பிக்காமல் துவக்கத்திலேயே செய்தல் நலம். அதுவும் தொழில் துறை அனுபவம் மிக்க பயிற்சி நிறுவனங்களை நாடுதல் நலம்.

திறன் கற்றுக் கொள்ளக் கூடியது. மாற்றக்கூடியது. மனோபாவம் கற்றுக் கொடுக்க, மாற்ற மிகவும் சவாலான ஒன்று. அதனால் தான் “ Hire for Attitude and train for Skills” என்ற கூற்று ஹெச். ஆரில் பிரபலம். அப்படிப் பார்த்தால் தென் தமிழ் நாட்டு மாணவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்திருக்க வேண்டும். ஏன் இல்லை?

சென்னையும் பெங்களூருமாய் வளர்ந்துள்ள கார்பரேட் நிறுவனங்களிடம் தென் தமிழ் நாட்டை பிராண்ட் செய்ய முயற்சிக்கவில்லை இந்த கல்வி நிலையங்கள். ஆரவாரத்தை விரும்பாத தென் மாவட்டத்து மக்கள் கிடைத்த வேலையை சிறப்பாகச் செய்வதிலேயே அதிக கவனம் செலுத்திவிட்டார்கள். இன்று மருத்துவமனைகளும் மாநிலங்களும் நாடுகளுமே “எங்களிடம் வா வா” என்று விளம்பரம் செய்கையில் மாவட்டங்களும் இது பற்றி யோசிக்கலாம்.

ஒரு செயல் திட்டம் பரிந்துரைக்கிறேன்:

மாவட்டத்தில் உள்ள எல்லா கல்லூரிகளும் இணைந்து ஒரு அமைப்பு ஏற்படுத்தலாம். மாவட்ட ஆணையர்கள், சம்பந்தப்பட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மண்ணின் மைந்தர்கள் போன்றவர்கள் எல்லாம் சேர்ந்து இதற்கு உதவலாம்.

பிறகு ஹெச். ஆர் மற்றும் பயிற்சி நிறுவனங்களுடன் சேர்ந்து நீண்ட கால வேலைத் தகுதிக்கான பயிற்சியை மாணவர்களுக்கு வழங்கலாம். ஆசிரியர்களுக்கு தொழில் துறைகளை அழைத்துச் சென்று காட்ட வேண்டும். அங்கு உள்ள தேவைகளையும் நிதர்சனங்களையும் உணர்த்த வேண்டும்.

அதன் பிறகு, இந்தக் கூட்டமைப்பு பெரிய கருத்தரங்கங்கள் நடத்த தொழில்துறைத் தலைவர்களை அழைக்க வேண்டும். அங்கு மண்ணின் மைந்தர்களான மாணவர்கள் தங்கள் திறமைகளை பல விதங்களில் காட்ட வேண்டும். இதுதான் நிறுவனங்களை உங்கள் கல்வி நிலையத்திற்கு அழைத்து வரும் வழி.

முகவர்களைக் கொண்டு செய்யும் முயற்சிகள் பெரிய பலன்கள் தராது. எதையாவது செய்து சில மாணவர்களுக்கு வேலை வாங்க வேண்டும் என்கிற குறுகிய கால சிந்தனையிலிருந்து விடுபட்டு ஒரு 3 ஆண்டு செயல் திட்டம் தீட்டி கல்வி நிறுவனத்தின் தரத்தை உலகறிய செய்தல் உத்தமம்.

இவற்றையெல்லாம் அழைத்துச் சென்ற நண்பரிடம் விளக்கினேன்.

மாணவர்களின் குறைகளையெல்லாம் கூறி இதெல்லாம் போக ஒரு நாள் பயிற்சி வேண்டும் என்று சில நேரம் கேட்பார்கள். எனக்கு வாலி படத்தில் வரும் விவேக் & பாலாஜி வசனம்தான் நினைவுக்கு வரும். “இந்த வியாதிகளெல்லாம் போக ஒரே ஒரு மாத்திரையா?” என்று அலறுவார் விவேக். பயிற்சி பற்றிய எதிர்பார்ப்புகள் இப்படித்தான் பல இடங்களில் உள்ளது. முறிந்த காலை ஒட்ட வைக்கும் சிகிச்சை முயற்சி வேறு. கால்கள் சரியாகி ஒலிம்பிக்கில் ஓடச் செய்யும் பயிற்சி முயற்சி வேறு.

இதைக் கல்லூரிகள் புரிந்து கொள்ள வேண்டும்!

gemba.karthikeyan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x