Published : 24 Mar 2018 07:52 AM
Last Updated : 24 Mar 2018 07:52 AM

பொதுத் துறை வங்கிகள் வழிக்கு வருமா...? வழுக்கி விழுமா..?

தோ... மற்றும் ஒரு வங்கி மோசடி. இம்முறை, நமக்கு மிக அருகே சென்னையில் அரங் கேறி இருக்கிறது. பிரபல நகைக் கடை ஒன்றுக்கு, ரூபாய் 824 கோடி, ‘புனையப்பட்ட’ ஆவணங்கள் / தகவல்களை ஆதாரமாகக் கொண்டு வங்கிக் கடன் தரப்பட்டு உள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு பாரத் ஸ்டேட் வங்கி அனுப்பிய புகார் கடிதத்தின் மீது மத்திய புலனாய்வுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இது ஏதோ, ‘வாராக் கடன்’ வகையைச் சேர்ந்தது அல்ல. ‘வாராக் கடன்’ விவகாரத்தில் சிறிது ‘நேர்மை’ இருக்க சாத்தியம் உண்டு. திருப்பிச் செலுத்துகிற எண்ணத்துடனேயேகூட, கடன் பெற்று இருக்கலாம். பின்னர் ஏற்பட்ட எதிர்பாரா நிகழ்வுகளால் கடனை செலுத்த முடியாமற் போய் இருக்கலாம்.

ஆனால்? ‘வாராக் கடன்’ என்பதையும் தாண்டி, முன்பே திட்டமிட்டு, திரிக்கப்பட்ட தகவல்கள் / ஆவணங்களை சமர்ப்பித்து, பல நூறு கோடி ரூபாய்க்கு தனியார் வணிக நிறுவனம், பொதுத் துறை வங்கிகளிடம் கடன் பெற்று உள்ளது. பொதுத் துறை வங்கிகளில், ‘கண்காணிப்பு நடைமுறை’என்று ஏதும் இருக்கிறதா இல்லையா என்கிற கேள்வி, ஆளுயரத்துக்கு எழுந்து நிற்கிறது.

மற்ற பிற கடன்களில் இருந்து, தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள நகைக்கடை மோசடி, முற்றிலும் மாறுபட்டது. உற்பத்தி நிறுவனங்கள், அதாவது தொழிற்சாலைகள் பெறுகிற கடன்கள் போன்றது அல்ல இது. விலை உயர்ந்த இயந்திரங்கள், நவீன தொழில் நுட்ப சாதனங்கள் தேவைப்படுகிற தொழிற்சாலைகள், அவற்றை கொள்முதல் செய்ய வங்கிக் கடனுக்காக அணுகுவது உண்டு.

நகை வியாபாரத்தில் என்ன வகைக் கடன் தேவைப்படும்? கட்டுமானம், இயந்திரங்கள், உற்பத்தி ஆகியன அநேகமாக இல்லை. மிதமிஞ்சிப் போனால் தங்கக் கட்டிகளை ஆபரணமாக மாற்றுகிற ‘தயாரிப்பு’ பணிகள் இருக்கலாம். இதிலே, ‘கட்டுமானம்’, ‘ஆயுதங்கள்’ எங்கே வருகின்றன? கணிசமான அளவில் வேலைவாய்ப்பு உருவாகவும் சாத்தியம் இல்லை. முழுக்க முழுக்க இது தனி நபர்களுக்கு அதாவது முதலாளிகளுக்கு மட்டுமே பெரும் லாபம் ஈட்டித் தருகிற வணிகம். இதன் மீது பொதுத் துறை வங்கிகள் சகட்டு மேனிக்கு கடன் வழங்க முடிந்து இருக்கிறதே.. அது எப்படி?

'நடப்பு / செயல்பாட்டு முதலீடு' தேவைக்காக இந்தக் கடன் வழங்கப்பட்டு இருக்க வேண்டும். ‘சரக்கு கை இருப்பு’ தவறாகக் காண்பிக்கப்பட்டு, கடன் தொகை பெறப்பட்டதாக வருகிற செய்திகள் இதனை உறுதி செய்கின்றன.

நடப்பு முதலீட்டுக்கான கடன் உதவி எப்படி ரூ.824 கோடி அளவுக்கு பெருக முடிந்தது? ஒரே தவணையாக இவ்வளவு பெரிய தொகை கடனாக வழங்கப்பட்டு இருக்க முடியாது. ‘சரக்கு கை இருப்பு’ அடிப்படையில் தரப்பட்டு இருந்தால் அது எப்படி, ‘திடீர்’ என்று இத்தனை கோடி மதிப்புள்ள தங்க நகைகள் ‘காணாமல்’ போகும்?

தன்னிடம் இந்த மதிப்புக்கு சரக்கு கை இருப்பு உள்ளதாக ஒருவர் ஒரு தாளில் எழுதித் தந்தால் போதுமா? நேரில் சென்று ஆய்வு நடத்தி இருப்பை சரிபார்க்க வேண்டாமா? அதிலும் சரக்கு கை இருப்பு, தொடர் ஆய்வுக்கு உட்பட்டது. குறைந்தபட்சம், மாதம் ஒரு முறை அல்லது காலாண்டுக்கு ஒரு முறையாவது நேரடி ஆய்வு செய்யப்பட்டு இருக்க வேண்டுமே! அப்போதெல்லாம் ‘தவறு’ கண்ணுக்குப் புலப்படவே இல்லையா? எங்கேயோ மிக மோசமாகத் தவறு நடந்து இருக்கிறது.

இந்திய வங்கித் துறை, தன்னைத் தானே மறு புனரமைப்பு செய்து கொள்ள வேண்டிய தருணம் இது. பொது நிதியைக் கையாளும்போது, இரண்டு வழிமுறைகள் உள்ளன. 'எப்படி வேண்டுமானாலும் செலவழிக்கலாம் என்பதற்கு, இது எனக்கு சொந்தமான பணம் அல்ல; ‘ஒவ்வொரு ரூபாய்க்கும் நான் பொறுப்பு ஆகிறேன்..’ என்று எண்ணி ஒருவர் செயல்படலாம்.

இதற்கு மாறாக, ‘யார் வீட்டுப் பணமோதானே.. எனக்கு என்ன போயிற்று?’ என்கிற அலட்சிய மனநிலையிலும் ஒருவர் செயல்படலாம். இரண்டில் எந்த வழியை ஓர் உயர் அதிகாரி தேர்ந்தெடுக்கிறார் என்பதை வைத்தே, பொதுப் பணம், பாதுகாப்பாக இருக்கிறது அல்லது பறி போகிறது.

வங்கிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டபோதே, மிகக் கடுமையான கண்காணிப்பு அமைப்புகளும் ஏற்பட்டு இருக்க வேண்டும்.

பொருளாதாரக் குற்றங்களுக்கு எதிரான சட்ட நடைமுறைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும். இவற்றின் மீதான தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். குறிப்பாக, தவறு கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை தருவதை விடவும், தவறு நிகழ சாத்தியமே இல்லாத அளவுக்கு, தடுப்பு நடவடிக்கைகள் அமைய வேண்டும்.

சாமானியர்களின் முதலாவதும் கடைசியுமான புகலிடம் - பொதுத் துறை வங்கிகள்தாம். இவற்றின் செயல்பாடுகள் முடங்கிப்போகிற அளவுக்கு முறைகேடுகள் நடைபெற முடியுமானால் ‘டிஜிட்டல்’ பொருளாதாரம் பொது மக்களுக்கு ‘பொருள் அற்றதாக’ மாறிவிடும். உடனடித் தேவை - வங்கிகள் மீதான நம்பகத் தன்மையை மீட்டெடுத்தல். இந்தியப் பொருளாதாரத்தின் சுவாசம் இதிலேதான் அடங்கி இருக்கிறது. சுவாசப் பாதை - சுத்தமாகுமா..?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x