Published : 23 Mar 2018 09:31 AM
Last Updated : 23 Mar 2018 09:31 AM
ம
ன்னிப்பு என்பது உலகின் எந்த மொழியிலும் உள்ள மிக முக்கியமானதொரு வார்த்தை என்று சொல்லலாம். ஆம், நமது மனம் புண்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும் வேளையில், ஒரு உண்மையான மன்னிப்பு மட்டுமே உடைந்த உறவினை மறுகட்டமைப்பு செய்யவும், நம்பிக்கையை மீட்டெடுக்கவும் முடியும் என்பதை நாம் உணர்கிறோம் அல்லவா!. மன்னிப்பின் மதிப்பு மற்றும் ஆற்றல், மன்னிப்பு கேட்பது மற்றும் பெறுவது போன்ற மன்னிப்பையும் மறத்தலையும் பற்றிய மகத்தான விஷயங்களைச் சொல்கிறார் “ஒய் வோன்ட் யு அப்பாலஜைஸ்” என்னும் இந்தப் புத்தகத்தின் ஆசிரியரும், புகழ்பெற்ற உளவியலாளருமான “ஹாரிட் லெர்னர்” அவர்கள்.
எளிய மன்னிப்பு!
சம்பந்தப்பட்ட இருவருக்கும் இடையில் பெரிதாக தவறுகள் இல்லாத பட்சத்தில், எளிமையான முறையில் ஒருவரால் கேட்கப்படும் மன்னிப்பு இவ்வகையைச் சாரும். உதாரணமாக, தாமதமாக வந்ததற்கோ அல்லது ஒரு விஷயத்தை சொல்ல மறந்ததற்கோ ஒருவரிடம் மன்னிப்பு கேட்பது. இதில் மன்னிப்பானது, ஒருவர் அவரது கடினமான சூழ்நிலையிலிருந்து எளிதாக வெளிவருவதை அங்கீகரிக்கிறது. மேலும், இருவரையும் விரைவில் இயல்பான மனநிலைக்கு கொண்டுவந்துவிடுகிறது. இதை மன்னிப்பு என்பதைவிட, ஒருவரின் சிறிய மனவருத்தத்திற்கான ஒரு மறுமொழி எனலாம் என்கிறார் ஆசிரியர்.
கடின மன்னிப்பு!
சில தருணங்களும் நிகழ்வுகளும் மன்னிப்பு கேட்பதற்கும், அதனை ஏற்றுக்கொள்வதற்கும் கொஞ்சம் கடினமானதாக இருக்கும். உதாரணமாக, மிகவும் முக்கியமான தவிர்க்கமுடியாத அலுவலக பணிக்காக நீங்கள் வெளியூர் செல்ல நேரிடுகிறது. சுமாராக மூன்று மாத காலத்திற்கு நீங்கள் அங்கேயே தங்கி பணிபுரியவேண்டிய சூழல். இவ்வாறான சூழ்நிலையில், உங்களின் நெருங்கிய நண்பருக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு, திருமணத்திற்கான தேதியும் இறுதி செய்யப்படுகிறது. இதில் உங்களை கலந்தாலோசிக்காமல் திருமண தேதியை முடிவு செய்த உங்களின் நண்பரின் மீது உங்களுக்கும், அவரது திருமணத்தில் கலந்துகொள்ள முடியாத உங்கள் மீது நண்பருக்கும் மனவருத்தம் ஏற்படுகிறது. இருவருக்கும் இதில் சம பங்கு உள்ள மன உறுத்தலால், இருவருக்குமே பரஸ்பரம் மன்னிப்பு கேட்கும் எண்ணம் தோன்றவில்லை. உங்கள் நண்பர் முதலில் மன்னிப்பு கேட்கட்டும் என்று நீங்களும், நீங்கள் முதலில் மன்னிப்பு கேட்கட்டும் என்று உங்கள் நண்பரும் இருக்கிறீர்கள். இவ்வாறான சூழல் நிச்சயம் களையப்பட வேண்டியது அவசியம் என்றாலும், அது கொஞ்சம் கடினமானதே என்கிறார் ஆசிரியர். மேலும், இதில் சம்மந்தப்பட்ட இருவருக்குமிடையில் நீண்டதொரு வெறுப்பிற்கும் பிரிவிற்கும் காரணமாக அமைந்துவிடும் வாய்ப்பும் அதிகம் என்பதையும் கவனத்தில் வைப்போம்.
பயனுள்ள மன்னிப்பு!
நல்ல எண்ணங்களையும் கருத்துகளையும் கொண்டவர்கள் பலரும், மன்னிப்பு கேட்பதற்கான விருப்பத்துடன் இருந்தாலும், அவர்களுக்கு உண்மையில் எவ்வாறு அதை செயல்படுத்துவது என்பது தெரிவதில்லை என்கிறார் ஆசிரியர். இதன்மூலம் பல மன்னிப்புகள் தோல்வியில் முடிந்துவிடுகின்றன. பயனுள்ள மற்றும் வெற்றிகரமான மன்னிப்பானது, சரியான வார்த்தைகளை பயன்படுத்துவதைவிட, தவறான அல்லது முரண்பாடான வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆக, மன்னிப்பு கோருகின்ற தருணங்களில் நாம் பயன்படுத்துகின்ற வார்த்தைகளில் அதீத கவனம் இருக்க வேண்டியது அவசியமான ஒன்று.
பயனற்ற மன்னிப்பு!
தேவையான இடங்களில் கேட்கப்படாத மன்னிப்பு எவ்வளவு தவறானதோ அதுபோலவே தேவையற்ற இடங்களில் கேட்கப்படும் மன்னிப்பும் தவறானதே. ஆம், உண்மையாக தேவையேபடாத சில சூழ்நிலைகளில் சிலர் சம்பந்தமேயில்லாமல் அடிக்கடி மன்னிப்புக் கோருவதைப் பார்த்திருப்போம். உங்களை டிஸ்டர்ப் செய்துவிட்டேனா? ஓ! ஐ எம் சாரி, உங்களது பேப்பரை எடுத்துக்கொள்ளவா? ஓ! ஐ எம் சாரி, இதுதான் உங்களுடைய புதிய மொபைலா? ஓ! ஐ எம் சாரி என படுத்திவிடுவார்கள். எதற்கு இந்த தேவையற்ற மன்னிப்புகள் என்று ஒருபோதும் அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லை. இதற்கான காரணம், அவர்களின் குறைவான சுயமரியாதையாக இருக்கலாம் என்கிறார் ஆசிரியர். எரிச்சலூட்டும் இவ்வாறான தேவையற்ற மன்னிப்புகள், இயல்பான உரையாடலுக்கு இடையூறு ஏற்படுத்துவதோடு, மற்றவர்களுடனான இடைவெளியையும் அதிகப்படுத்திவிடும் என்பதை மறந்துவிடக்கூடாது. மேலும், இது தொடரும் பட்சத்தில், ஒருவருடைய உண்மையான மன்னிப்பிற்கும் மதிப்பில்லாத நிலை உருவாகிவிடும் என்று எச்சரிக்கிறார் ஆசிரியர். இவைகள் அவசியம் தவிர்க்கப்பட்டு, மன்னிப்புகளை தேவையான விஷயங்களுக்கு மட்டும் பயன்படுத்துவதற்காக சேமித்து வைக்கவேண்டும்.
கட்டாய மன்னிப்பு!
வேண்டுகோளின் வழியாக கிடைக்கபெறும் மன்னிப்பு நல்லதே, ஆனால் ஒருபோதும் மன்னிப்பை வற்புறுத்தியோ அல்லது கட்டாயப்படுத்தியோ ஒருவரிடமிருந்து பெறக்கூடாது என்கிறார் ஆசிரியர். இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திவிடும். உளவியலாளரான “எலன் வாட்ச்டெல்” அவர்களின் கூற்றுப்படி, கட்டாயப்படுத்தி பெறப்படும் மன்னிப்பு அதீத தீமைகளை உருவாக்கக்கூடியது. வற்புறுத்தலுக்கு உள்ளாகும் நபரின் மனம், இதனை தன்னை இழிவுபடுத்தும் செயலாகவோ அல்லது தன்னை அவமானப்படுத்தும் செயலாகவோ எண்ணக்கூடும். மேலும் இவ்வாறு பெறப்படும் மன்னிப்பு, நிச்சயம் நேர்மையானதாகவோ அல்லது உண்மையானதாகவோ இருப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவே. தன்னிச்சையாக உளமார கிடைக்கப்பெறும் மன்னிப்பே உண்மையில் உகந்தது என்பதை மனதில் ஆழப்பதிய வைப்போம்.
ஏற்றுக்கொள்வோம்!
கேட்கப்படும் மன்னிப்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதே அளவிற்கு முக்கியமானது அதை ஏற்றுக்கொள்வது. நேர்மையான முறையில் கேட்கப்படும் மன்னிப்பை, அதே நேர்மையான முறையில் ஏற்றுக்கொள்ளும் மனம் வேண்டும்.
இதில் கேட்பவருக்கு மட்டுமின்றி, பெறுபவருக்கும் மன ரீதியிலான நன்மைகள் உண்டு. உண்மையில், மன்னிப்பு கேட்பவரை விட, அதை ஏற்றுக்கொள்பவர் சிறிது உயர்ந்தே நிற்கிறார். என்னைப் பொறுத்தவரையில், மன்னிப்பை ஏற்றுக்கொள்வது என்பது ஒரு மரியாதையான செயல்பாடு என்கிறார் ஆசிரியர். மேலும், இதனை நம்மை எதிர்மறை உணர்வுகளின் வலியிலிருந்து விடுவித்துக்கொள்வதற்கான வாய்ப்பாகக் கருத வேண்டும்.
நன்றி தெரிவிப்போம்!
மன்னிப்பு கேட்பதையெல்லாம் தாண்டி, மன்னிப்பு கோரிய பிறகு ஒருவர் அதற்கான பதில்மொழியை எதிர்பார்ப்பதும் நியாயம்தானே!. உண்மையில், மன்னிப்பு கேட்பவரின் மனநிலையிலேயே அதனை பெறுபவரின் மனநிலையும் இருக்கும் என்று சொல்லிவிடமுடியாது. பெரும்பாலானோருக்கு “மன்னிப்பு கேட்டதற்கு நன்றி” என்று கூறுவது சிறிது சிரமமான காரியமாகவே இருக்கிறது. சங்கடமான தருணத்தை விரைவில் முடிந்தவரை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டுமே, இவ்வாறான நன்றிகள் சாத்தியப்படும். மன்னிப்பு கோருபவருக்கு நாம் கொடுக்கும் பரிசாக எண்ணி, இவ்வித நன்றிகளை மேற்கொள்ளவேண்டும். மேலும் இதுவே நல்ல மனதுடன் தொடர்ந்து பயணிப்பதற்கான வழியை உருவாக்கும் செயலாகும்.
எவருமே மனம் பாதிப்படையும் எந்தவொரு சூழலையும் விரும்பமாட்டோம் அல்லவா!. அது மன்னிப்பு கேட்பதோ அல்லது மன்னிப்பை ஏற்றுக்கொள்வதோ அல்லது நன்றி தெரிவிப்பதோ எதுவாயினும், அதன்மூலம் கிடைக்கின்ற மன நிம்மதியையும், நன்மைகளையும் கருதிக்கொண்டு வாழப்பழக வேண்டும் என்பதே இதன்மூலம் நாம் அறிந்துக்கொள்ளவேண்டிய செய்தி.
p.krishnakumar@jsb.ac.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT