Published : 13 Mar 2018 09:34 AM
Last Updated : 13 Mar 2018 09:34 AM
ஜா
க் மாவின் புதிய பங்காளிகள் நீட்டிய கரங்களுக்குள் இருந்தது நட்பல்ல, நயவஞ்சகம். அவர் பதிவு செய்திருந்த இணையதளம் www.chinapages.com. வாடிக்கையாளர்கள் மனங்களில் குழப்பம் ஏற்படுத்துவதற்காக, வெஸ்ட் லேக் தங்களுக்காக, www.chinesepages.com என்னும் இணையதளப் பெயரையும் சீனா யெல்லோ பேஜஸ் (China Yellow Pages) என்னும் கம்பெனிப் பெயரையும் பதிவு செய்திருந்தார்கள். ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்று ஜாக் மாவுக்குக் கோபம் வந்தது. ஆனால், இந்த எரிச்சலை வெளியே காட்ட முடியாத, யாரிடமும் சொல்லமுடியாத கையறு நிலை.
அவர் தொடங்கிய கம்பெனியிலிருந்தே அவரைத் துரத்தும் முயற்சிகளைத் தொடங்கினார்கள். ஜெனரல் மேனேஜர் பதவி என்று பெத்தப் பெயர்தான், தலையாட்டி பொம்மையாக நடத்தினார்கள். ஒரு மனிதனுக்குச் செய்யும் அவமானம் என்ன தெரியுமா? அவன் சொல்லும் கருத்துகளையெல்லாம் நிராகரிப்பது.``போர்டில் பெரும்பான்மை இருந்த ஒரே காரணத்தால் நான் எதைச் சொன்னாலும் உதறித் தள்ளினார்கள்.” ஒவ்வொரு நாளும் மனதில் ரணம், அடுத்த கட்டத்துக்குப் போனார்கள். நிராகரிப்பை விட மிகக் கொடிய உச்சகட்ட அவமானம் உதாசீனம், ஜாக் மா கருத்துகளைக் கேட்காமலே முடிவுகள் எடுத்தார்கள். கையெழுத்துப் போடும்படி கைகளை முறுக்கினார்கள்.
கம்பெனியின் கடிவாளம் ஜாக் மா கைகளிலிருந்து பறிக்கப்பட்டுவிட்டது. தன் நெருங்கிய நண்பர்களிடம் விரக்தியோடு அவர் சொன்னார், ``கண் பார்வை இழந்தவன், பார்வை இல்லாத புலிகளின் மேல் சவாரி செய்வது போல் என் பயணம். நான் தோற்றுவிட்டேன்.”
அதே சமயம், கம்பெனியின் நன்மைக்காக அவர் ஊடகங்கள் முன்பு வேஷம் போடவேண்டியிருந்தது, நடிக்கவேண்டியிருந்தது. பேட்டிகளில் சொன்னார்,
``வெஸ்ட் லேக் – ழழாங் ஹைபோ இணைப்பு சீனா யெல்லோ பேஜஸ் வளர்ச்சிக்குப் பெருமளவில் உதவும்.”
“கட்சி, அரசு ஆகியோரின் சரியான கொள்கைகள், பொதுமக்கள் ஆதரவு ஆகியவை இருந்தால், சீனா பக்கங்கள் மட்டுமல்ல. நம் நாட்டின் தொலைத் தொடர்பு என்னும் ரெயில் வேக வேகமாக ஓடும்.”
இரட்டை வேடத்தால் ஒவ்வொரு நாளும் மன அழுத்தச் சித்திரவதை. ஜாக் மாவால் தாக்குப் பிடிக்கமுடியவில்லை. புதிய கம்பெனியில் 22 மாதங்கள் ஓடிவிட்டன. நவம்பர் 1997. தன்னோடு ழழாங் நிறுவனத்தில் வேலை பார்த்த 40 ஊழியர்களிடம் சொன்னார், “வரும் ஞாயிற்றுக்கிழமை நாம் எல்லோரும் டாங்லூ (Tonglu) நகரத்துக்குப் போகிறோம். தவறாமல் எல்லோரும் வாருங்கள்.”
எதற்காக என்று யாருமே கேட்கவில்லை. டாங்லூ சீனாவின் பூங்கா நகரம் என்று அழைக்கப்படுகிறது. ஊரை அரவணைத்து ஓடும் ஃபூச்சுன் (Fuchun) ஆறு, அமைதியான அந்த நதியில் சவாரிக்கென மூங்கில் கட்டுமரங்கள், உயர்ந்து நிற்கும் மலைகள். ஹைக்கிங், டாஜஷான் தேசிய வனப் பூங்கா (Dajishan National Forest Park), பார்க்கும் இடமெல்லாம் இன்னிசையோடு சலசலத்து ஓடும் நீரோடைகள், ரீங்காரப் பறவைகள் – டாங்லூ சுற்றுலா சொர்க்கம். அவர்களை உற்சாகமூட்ட ஜாக் மா அடிக்கடி இதுபோன்ற உல்லாசப் பயணங்களுக்கு ஏற்பாடு செய்வார். எல்லோரும் ஒரே பஸ்ஸில். தான் முதலாளி என்பதையே மறந்து கொட்டமடிப்பார். பாடுவார், எல்லோரோடும் சேர்ந்து டான்ஸ் ஆடுவார், ஜோக் அடிப்பார். டிரிப் ஜாலியோ ஜாலி.
நவம்பர் 1997 ஞாயிறு. பஸ் புறப்பட்டது. ஜாக் மா முகத்தில் இறுக்கம். அவரை இந்த மூடில் யாருமே பார்த்ததில்லை. சிலர் பாடத் தொடங்கினார்கள். ஜாக் மா கலந்துகொள்ளாததால், ஸ்டாப். வழக்கமான பாட்டு, டான்ஸ் எதுவும் இல்லை. ஏதோ இறுதி அஞ்சலிச் சடங்குக்குப் போவதுபோல், பஸ்ஸில் சோக மூட்டம். தலைவருக்கு என்ன ஆகிவிட்டது என்று அனைவர் மனத்திலும் கவலை.
ஆடம்பர ஹோட்டல். அவர்களுக்காக ஒரு பெரிய ஹால். அங்கே அட்டகாசமான விருந்து. மனதில் கவலைச்சுமை இருக்கும்போது சாப்பாடு இறங்கவில்லை. விருந்து முடிந்தது. ஜாக் மா எழுந்து நின்றார்.
“ஒரு அறிவிப்பு.”
அறையில் நிசப்தம்.
``அருமை நண்பர்களே, நான் உங்களை விட்டுப் பிரிந்துபோகிறேன். நம் கம்பெனியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டேன்.”
இடி விழுந்த அதிர்ச்சி. கேட்டதை நம்பமுடியவில்லை. சில நிமிடங்கள். நினைவுக்கு வந்தார்கள்.
``ஏன் ஜாக் மா, ஏன், ஏன்?’
அனைவரிடமும் ஒரே கேள்வி. ஆனால், அவர்கள் எல்லோருக்கும் விடையும் தெரியும்.
``என்ன செய்யப்போகிறீர்கள்?”
ஜாக் மா விளக்கத் தொடங்கினார். பேச்சே வரவில்லை. வார்த்தை தழுதழுத்தது. தன்னை நம்பி வந்தவர்களைக் கைவிட்டுப் போகிறோமே என்னும் குற்ற உணர்வு.
“கொஞ்ச நாட்களுக்கு பிசினஸே வேண்டாம். வேலைக்குப் போகப் போகிறேன்.”
ஹே யெபிங் அறிவித்தார்,``ஜாக் மா இல்லாத கம்பெனியில் நான் இருக்கமாட்டேன். நானும் ராஜினாமா செய்யப்போகிறேன்.” ”
``நானும், நானும்…”
அறை முழுக்க அரற்றல்கள்.
தனக்காகத் தங்கள் எதிர்காலத்தைப் பணயம் வைக்கத் தயாராக இருக்கும் ஊழியர்களைப் பார்க்கும்போது ஜா மாவுக்குப் பெருமையாக இருந்தது. “இவர்களைச் சகாக்களாக அடைந்த நான் பாக்கியசாலி.”
அதே சமயம் ஆலோசித்தார் – தன் கை இப்போது வெறும் கை. அவர் எதிர்காலமே கேள்விக்குறி. தன்னை நம்பி இவர்கள் வாழ்க்கையைப் பணயம் வைப்பது முட்டாள்தனம்.
சொன்னார்,``இது நாம் தொடங்கி, வளர்த்த கம்பெனி. நாம் எல்லோரும் விட்டுப் போய்விட்டால் இதன் கதி என்னவாகும்? தயவுசெய்து உங்கள் வேலையில் தொடருங்கள்.”
கனத்த நெஞ்சோடும், கண்ணீரோடும் அனைவரும் புறப்பட்டார்கள். அலுவலகம் வந்தது. இறங்கினார்கள். ஜாக் மா அலுவலகக் கட்டத்தைப் பார்த்தார். பொங்கிவந்த கண்ணீர் பார்வையை மறைத்தது. அவர் ஒவ்வொரு செங்கலாகக் கட்டிய மாளிகையிலிருந்து அவரைத் துரத்திவிட்டார்கள். தங்கத் தொட்டிலில் தாலாட்டிச் சீராட்டி அவர் வளர்த்த குழந்தையைப் பலவந்தமாகப் பிடுங்கிக்கொண்டு அவரை நடுத்தெருவில் நிறுத்திவிட்டார்கள்.
மறு நாள். சில சக ஊழியர்கள் வீட்டுக்கு வந்து அவரைச் சந்தித்தார்கள். அவர்கள் கேள்வி,``நாம் புதிய போட்டிக் கம்பெனி தொடங்கலாமா?”
ஜாக் மா பதில்.``சீனா யெல்லோ பேஜஸ் எனக்கு மகன் மாதிரி. அந்தக் குழந்தைக்குக் கெடுதல் தரும் எதையும் நான் செய்யமாட்டேன்.”
அதே சமயம், சுவீகாரம் கொடுத்துவிட்ட தன் ``மகனுடன்” உரிமை கொண்டாடவும் அவர் விரும்பவில்லை. அவரிடம் கம்பெனியின் 21 சதவிகிதப் பங்குகள் இருந்தன. தன் சகாக்களுக்கு இவற்றைப் பகிர்ந்து கொடுத்தார்.
ஜாக் மா மனம் நொறுங்கிப் போயிருந்தார். ஆனால், அவர் கும்மிருட்டிலும் வெளிச்சத்தைக் கண்டுபிடிப்பவர். இந்த அக்னிப் பரீட்சையிலும் மூன்று முக்கிய மேனேஜ்மென்ட் பாடங்கள் கற்றுக்கொண்டார்;
உங்களைவிடப் பெருமளவு பலம் கொண்ட போட்டியாளர்களை எதிர்கொள்ளும்போது பயப்படாதீர்கள். யானைக்கும், எறும்புகளுக்கும் சண்டை நடந்தால் எறும்புகள் அங்கும் இங்குமாகப் பல திசைகளில் ஓடும். அனைத்தையும் மிதித்துக் கொல்ல நினைக்கும் யானை தன் காலை உடைத்துக்கொள்ளும், சமாளிக்கத் தெரிந்தால், சிறிய பிசினஸ்கள் பிரம்மாண்டப் போட்டியாளர்களை ஜெயிக்க முடியும்,
கம்பெனியில் நாங்கள் மூன்று பேர் மட்டுமே முதலாளிகள். அதிலும், பெரும்பான்மையான சதவீதப் பங்குகள் என் கையில். இதனால்தான், என்னை நம்பி முதலீடு செய்தவர்கள் பாதிக்கப்பட்டார்கள். இனி தொடங்கும் பிசினஸ்களில் இந்தத் தவறைச் செய்யமாட்டேன்.
முதலீட்டைப் பரவலாக விநியோகம் செய்து ஏராளமான முதலாளிகள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுவேன். போட்டிக் கம்பெனிகள் நம்மைக் கைப்பற்றாமலிருக்க இதுதான் நல்ல வழி.
தன் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்தார். அவர் பிசினஸ் அற்புதமான திட்டம். ஆனால், அன்றைய சீனாவில் காலத்தை முந்திய பிசினஸ். நாட்டின் கட்டமைப்பு இன்டர்நெட்டுக்குத் தயாராக இல்லை. இது தற்காலிகம்தான். ஆனால், இன்டர்நெட் தொழில்நுட்பம் காலத்தின் கட்டாயம். விரைவில் சீனாவில் அந்தப் புயல் அடிக்கும். அதுவரை தாக்குப்பிடிக்க அவரிடம் பணபலம் இல்லை. வீட்டில் மனைவி காத்தி, ஐந்து வயது மகன் மா யுயான்குன் (Yuankun). இவர்களைக் காப்பாற்ற வேண்டும். முடிந்த அளவு அப்பா, அம்மாவுக்கு உதவ வேண்டும், இந்தச் செலவுகளைச் சமாளிக்க மாதச் சம்பளம் தரும் வேலைக்குப் போகவேண்டும். காலம் மாறும். அப்போது மறுபடியும் பிசினஸ். இந்த விலகல் சூடுகண்ட பூனையாக அல்ல, பதுங்கும் புலியாக.
திறமைசாலிகள் வாய்ப்புக் கதவுகள் திறப்பதற்காகக் காத்திருக்க வேண்டியதில்லை. அவை தாமாகவே சிகப்புக் கம்பளம் விரிக்கும். தேடி வந்தது மனதுக்குப் பிடித்த வேலை.
(குகை இன்னும் திறக்கும்)
slvmoorthy@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT