Published : 17 Dec 2018 11:59 AM
Last Updated : 17 Dec 2018 11:59 AM
(சென்ற வாரத் தொடர்ச்சி)
21. மிருகக் காட்சி சாலையில் வித விதமான மிருகங்கள் இருக்கும். இதேபோல், கம்பெனியிலும் பல்வேறு துறைத் திறமைசாலிகள் இருக்க வேண்டும்.
22. ஒரு தொழில் முனைவராக ஆரம்ப நாட்களிலேயே நான் ஏராளமான தவறுகள் செய்திருக்கிறேன், அனுபவங்கள் பெற்றிருக்கிறேன். இவை எனக்குப் பெரிதும் உதவின. பிசினஸ் தொடங்கும்போது எவ்வளவு பணம் பண்ணலாம் என்று மட்டுமே கணக்குப் போடாதீர்கள். வலிகள் நிறைந்த நாட்களைச் சந்திக்கத் தயாராக இருங்கள்.
23. புதிய முயற்சிகள் எடுக்கிறீர்களா? மன அழுத்தங்கள், விமர்சனங்கள், தனிமை ஆகியவற்றை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள். ஆரம்ப நாட்களில் எங்களுக்குக் கிடைத்த பட்டங்கள் – ஏமாற்றுக்காரர்கள், பித்துப் பிடித்தவர்கள். இன்று எங்கள் பெயர், முழுப் பைத்தியக்காரர்கள். என்கவலை, பிறர் எங்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் பற்றி இல்லை; நாங்கள் உலகை எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பற்றித்தான். கனவுகளை எப்படித் துரத்திக் கொண்டிருக்கிறோம் என்றுதான் பார்க்க வேண்டும்.
24. இளைய தலைமுறையினரை நம்புங்கள். அவர்கள் ஒவ்வொரு நாளும் புதுமைகள் செய்து கொண்டிருக்கிறார்கள். கஸ்டமர்களும் புதுப் புதுப் பொருட்களை, விலை குறைவான பொருட்களை, தரமான பொருட்களை, தனித்துவமான பொருட்களை விரும்புகிறார்கள். இவற்றைத் தந்துகொண்டேயிருந்தால், அவர்கள் வந்துகொண்டேயிருப்பார்கள்.
25. பொய் சொல்லாதீர்கள். ஒரு பொய் சொன்னால், தொடர்கதையாகிவிடும் வேதனைகள் வரும். மக்கள் நிஜத்தை விரும்புகிறார்கள். ஒரு சிலரே, எப்போதும் உண்மை பேசுகிறார்கள். உண்மை பேசுங்கள். கூட்டத்திலிருந்து தனித்து நிற்பீர்கள்.
26. சிங்கத்தின் வாலாக இருப்பதைவிட, நாயின் தலையாக இருப்பதை ஆசிய பிசினஸ்மேன்கள் விரும்புகிறார்கள். யாருக்கும் தலை வணங்காத முதலாளிகளாக இருக்க ஆசைப்படுகிறார்கள். இந்தத் “தனி ஆளுமை”க் குணத்துக்குப் பொருத்தமான பிசினஸ் இன்டர்நெட்.
27. சிறிய, மத்திமத் தொழில் அதிபர்களைச் சந்திக்கும்போது எனக்குள் உற்சாகம் பொங்குகிறது. அவர்கள் கண்களில் நான் கனவுகளை, ஜெயிக்கும் வெறியை, நம்பிக்கைகளைப் பார்க்கிறேன்.
28. சாதிக்க வேண்டுமா? இந்த மூன்று கொள்கைகளைக் கடைப்பிடியுங்கள். என்ன செய்ய ஆசைப்படுகிறீர்கள்? என்ன செய்யப்போகிறீர்கள்? எத்தனை காலம் தொடர்ந்து செய்யப்போகிறீர்கள்?
29. மூன்றாம் உலகப் போர் நிச்சயம் வரப்போகிறது. இந்த யுத்தம் நாடுகளுக்குள் அல்ல. எல்லா நாடுகளும் நோய், வறுமை, பருவநிலை மாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக நடத்தும் போர். எல்லா மனிதர்களும், எல்லா நாடுகளும் இதற்குக் கை கோர்க்கவேண்டும்.
30. சுயமுன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள். தொடர்ந்து அறிவை வளர்த்துக்கொண்டேயிருங்கள். கடவுளையும், பிறரையும் ஒருபோதும் பழிக்காதீர்கள். உங்களை மட்டுமே பழித்துக்கொள்ளுங்கள்.
31. நான் இளைஞனாக இருக்கும்போது பில் கேட்ஸை வெறுத்தேன். எல்லா வாய்ப்புக்களையும் மைக்ரோசாஃப்ட் எங்களைப் போன்றவர்களிடமிருந்து பறித்துக்கொள்வதாக நினைத்தேன். ஆனால், சீக்கிரமே தெரிந்தது, பில் கேட்ஸிடமோ, அவரைப் போன்ற பில பிரபலங்களிடமோ எந்தத் தவறும் இருக்கவில்லை. நானேதான் என் வாய்ப்புக்களை வீணாக்கிக் கொண்டிருந்தேன்... என்னைப் போல்தான் பெரும்பாலானோர் பிறரைக் குறை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அதை நிறுத்திவிட்டு, பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் காணத் தொடங்கினால், அதுதான் வாய்ப்பு.
32. நான் ஆசிரியராக என் வாழ்க்கையைத் தொடங்கினேன். தொழில் முனைவர் அனுபவங்களைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளாவிட்டால், அது வேஸ்ட். பகிரப் பகிர அதன் மதிப்பு அதிகமாகிறது.
33. ஆசிரியர்களே, நீங்கள் வருங்காலத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். மக்களின் வாழ்க்கையை மாற்றும் சக்தி கொண்டது அறிவு என்று நம்புபவர்கள். உங்கள் மாணவர்கள் உங்களைவிடச் சிறந்தவர்கள் என்று நினைப்பவர்கள். உங்களுக்குக் கிடைக்கும் பெரிய பரிசு உங்கள் மாணவர்களே!
34. பல வருடங்களுக்கு முன்னால், நான் உலகத்தை மாற்றியமைக்க ஆசைப்பட்டேன். உலகை மாற்றவேண்டுமானால், முதலில் நம்மை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று இப்போது நினைக்கிறேன்.
35. நீங்கள் முயலைத் துரத்தும் ஓநாயா? ஒரே ஒரு முயலின் மேல் மட்டும் கவனம் வையுங்கள். அந்த முயலைப் பிடிக்க உங்களிடம் எல்லா மாற்றங்களும் செய்துகொள்ளுங்கள். அந்த முயலை மாற்றவே மாற்றாதீர்கள். (இங்கே “முயல்” என்பது வாழ்க்கை இலக்கு.)
36. தொழில் முனைவர்களுக்குத் தேவை, முயலின் வேகம், ஆமையின் பொறுமை.
37. வேறு யாராவது இதே பிசினஸ் செய்துகொண்டிருந்தால், அதில் இறங்கப் பலர் பயப்படுகிறார்கள். தயங்காதீர்கள். யார் ஃபர்ஸ்ட் என்பதைவிட, யார் பெஸ்ட் என்பதுதான் முக்கியம்.
38. நான் பிறந்தது வேலை பார்ப்பதற்காக அல்ல, வாழ்க்கையை ரசித்து அனுபவிப்பதற்காக. நான் மரணத்தைச் சந்திக்க விரும்புவது அலுவலகத்தில் அல்ல, கடற்கரை மணலில்.
39. இளைஞர்களுக்கு உதவுங்கள். எளியவர்களுக்குக் கை கொடுங்கள். எளியவர்கள் வலியவர்களாவார்கள். இளைஞர்கள் மனங்களில் நீங்கள் தூவும் விதை விருட்சங்களாகும், உலகை மாற்றும்.
40. இருபது வயது வரை நல்ல மாணவர்களாக இருங்கள். தொழில் முனைவர்களாக அவசரப்படாதீர்கள். ஏராளமான தவறுகள் செய்யுங்கள். இந்த அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். இருபதிலிருந்து முப்பதுவரை, பெரிய கம்பெனிகளில் வேலைக்குப் போனால், பெரிய எந்திரத்தின் சிறிய பாகமாகத்தான் இருப்பீர்கள். ஆகவே, சிறிய கம்பெனிகளில் வேலைக்குச் சேருங்கள். ஜெயிக்கும் வெறி வரும்.
கனவுகள் காணவும், ஏகப்பட்ட வேலைகளை ஒரேநேரத்தில் செய்யவும் தெரிந்துகொள்வீர்கள். நல்ல மேலதிகாரியை முன்னோடியாகப் பின்பற்றுங்கள். அவர் வித்தியாசமாகக் கற்றுத் தருவார். முப்பதிலிருந்து நாற்பதுக்குள் தொழில் முனைவராகுங்கள். இப்போது உங்களுக்காக வேலை செய்கிறீர்கள். ஆகவே, தெளிவாகச் சிந்தியுங்கள். நாற்பதிலிருந்து ஐம்பதுவரை, தனித்திறமைகள் எவையோ, அவை அத்தனையையும் ஜொலிக்கச் செய்யும் துறையில் இறங்குங்கள். தெரியாத துறைகளில் சோதனை முயற்சிகள் வேண்டாம்.
அவற்றில் நீங்கள் ஒருவேளை ஜெயிக்கலாம், ஆனால், தோற்கும் சாத்தியக்கூறுகள் அதிகம். ஐம்பதிலிருந்து அறுபதுவரை, இளைய தலைமுறையினருக்காக உழையுங்கள். அவர்கள் உங்களைவிடச் சிறப்பாகச் செயலாற்றுவார்கள். அவர்களிடம் நம்பிக்கை வையுங்கள், அவர்களிடம் முதலீடு செய்யுங்கள், அவர்களைப் பட்டை தீட்டுங்கள்.
அறுபது வயதுக்குப் பிறகு, நேரத்தை உங்களுக்காகச் செலவிடுங்கள். கடற்கரையை, வெட்ட வெளிச் சூரிய ஒளியை அனுபவியுங்கள். ஏனென்றால், இந்த வயதில் உங்களால் எதையும் மாற்ற முடியாது.
(உங்கள் வருகைக்கு நன்றி)
(நிறைவடைந்தது)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT