Published : 30 Apr 2014 11:59 AM
Last Updated : 30 Apr 2014 11:59 AM
செல்போன் தயாரிப்பில் முன்ன ணியில் உள்ள நோக்கியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக அமெரிக்க வாழ் இந்தியரான ராஜீவ் சூரி நியமிக்கப்பட்டுள்ளார்.
46 வயதாகும் சூரி, இதற்கு முன் நோக்கியா சொல்யூஷன்ஸ் மற்றும் நெட்வொர்க்ஸ் பிரிவின் தலைவராக இருந்தார். நோக்கியா நிறுவனம் 720 கோடி டாலருக்கு அமெரிக்காவின் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
இதையடுத்து நோக்கியாவின் தலைவராக இருந்த ஸ்டீபன் எலோப், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் செயல் துணைத் தலைவராக தனது முந்தைய பொறுப்புக்குத் திரும்பினார். இடைக்காலத் தலைவராக இருந்த ரிஸ்டோ சிலியாஸ்மா நோக்கியா இயக்குநர் குழுமத்தின் தலைவராக மே 1-ம் தேதி முதல் செயல்படுவார்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் நோக்கியாவை வாங்கியபிறகு தலைமைப் பொறுப்பில் மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய மாற்றம் இதுவாகும். நோக்கியா நிறுவனம் இனி புதிய பாதையில் பயணிக்க உள்ளது. இத்தகைய சூழலில் ராஜீவ் சூரி மீது இயக்குநர் குழுவுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது என்று இயக்குநர் குழுவின் தலைவரான ரிஸ்டோ சிலியாஸ்மா தெரிவித்தார்.
மைக்ரோசாஃப்ட் நிறுவ னத்தின் தலைவராக நியமிக்கப் பட்டுள்ள சத்யா நாதெள்ளாவைப் போலவே ராஜீவ் சூரியும் மங்களூர் பல்கலைக்கழக மாணவராவார். தலைமைப் பொறுப்பேற்றதன் மூலம் அமெரிக்க நிறுவனங் களில் உயர் பதவி வகிப்போர் பட்டியலில் சூரியும் இடம் பெற்றுள்ளார்.
பெப்சிகோ நிறுவனத் தலைவரான இந்திரா நூயி, ரெக்கிட் பென்கிஸர் தலைவர் ராகேஷ் கபூர், மாஸ்டர்கார்ட் நிறுவனத் தலைவர் அஜய் பாங்கா, டாயிஷ் வங்கியின் தலைவர் அன்ஷு ஜெயின் ஆகியோரைத் தொடர்ந்து இப்பட்டியலில் ராஜீவ் சூரியும் இடம்பெற்றுள்ளார்.
2009-ம் ஆண்டு முதல் நோக்கியா சொல்யூஷன்ஸ் நெட்வொர்க் பிரிவின் தலைவராக சூரி இருந்து வந்துள்ளார். எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன்ஸ் படிப்பில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றவர். தற்போது பின்லாந்தில் எஸ்பூ-வில் இருந்து செயலாற்றி வருகிறார்.
சர்வதேச அளவில் 23 ஆண்டுகள் அனுபவம் மிக்க சூரி, உத்திகள் வகுப்பது, நிறுவனங்களை இணைப்பது, கையகப்படுத்துவது, பொருள் களை சந்தைப் படுத்துவது, விற்பனை உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். மத்திய கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பணியாற்றிய அனுபவமும் இவருக்குண்டு. 1995-ம் ஆண்டு நோக்கியாவின் ஆசிய பசிபிக் பிராந்திய தலைவராக பொறுப்பேற்றார்.
2007-ல் நோக்கியா சொல்யூஷன்ஸ் நெட்வொர்க் தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜெர்மனியின் சீமென்ஸ் நிறுவனத்தின் மொபைல் பிராட்பேண்ட் கூட்டணியில் 50 சதவீத பங்குகளை வாங்கி நோக்கியா சொல் யூஷன்ஸ் நெட்வொர்க் என பெயரிட்டது. 170 கோடி டாலருக்கு இப்பிரிவு வாங்கப்பட்டது.
செல்போன் தயாரிப்பு விற்பனை தவிர, நோக்கியா நெட்வொர்க் சொல்யூஷன்ஸ் மற்றும் ஹெச்இஆர்இ எனப்படும் இடத்தை அறியும் சேவை ஆகிய மூன்று நிறுவனங்களை நடத்துகிறது. நோக்கியா ஹெச்இஆர்இ டெக்னாலஜீஸ் பிரிவின் தலைவராக மைக்கேல் ஹால்பர் உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT