Published : 08 Feb 2019 05:05 PM
Last Updated : 08 Feb 2019 05:05 PM
தமிழக அரசின் நிகர கடன் சுமார் 4 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை 10 மணிக்கு பேரவையில் துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், வரும் நிதியாண்டுக்கான (2019- 2020) தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டில் வரும் நிதியாண்டில் தமிழக அரசின் மொத்த வருவாய்: ரூ. 197721.17 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் தமிழக அரசின் மொத்த செலவு: ரூ. 212035.93 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் நிதியாண்டில் பற்றாக்குறை: ரூ. 14314.76 கோடி என கூறப்பட்டுள்ளது.
எனினும் தொடர்ந்து தமிழக அரசு வாங்கி வரும் கடன் அளவு அதிகரித்து வருகிறது. கடனை பொறுத்தவரை ரூ. 3 லட்சத்து 97 ஆயிரத்து 495 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி வாங்கிய கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டித் தொகை மட்டும் ரூ. 33226.27 கோடியாக உள்ளது.
இதுகுறித்து நிதி ஆலோசகர் சோம.வள்ளியப்பன் கூறியதாவது:
‘‘வழக்கமான ஒரு சம்பிரதாய பட்ஜெட்டாக மட்டுமே உள்ளது. விவசாயம், வேலைவாய்ப்பு என ஏதாவது திட்டங்களை அறிவித்து இருக்கலாம். ஏற்கெனவே செலவு செய்து வரும் சில திட்டங்களுக்கு சற்று கூடுதல் நிதி ஒதுக்கி அத்துடன் இந்த பட்ஜெட் முடித்துக் கொண்டு விட்டது.
மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 25 சதவீதம் வரை கடன் பெறலாம். என்ற வரையறை உள்ள நிலையில் அதற்கும் குறைவாகவே கடன் பெறப்படுவதாக கூறப்படுகிறது. அது உண்மை தான். ஆனால் வாங்கும் கடன் தொகையை எதற்கு செலவு செய்கிறோம் என்பது தான் கேள்வி. அதுபோலவே வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதற்கான திட்டமும் தேவை.
இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் வருகிறது என்பதால் அதை முன்னிட்டு சில திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதுபோன்ற எந்த முயற்சியும் இந்த பட்ஜெட்டில் இல்லை’’ எனக் கூறினார்.
2019 - 2020 நிதியாண்டில் ரூ.43,000 கோடி கடன் வாங்க தமிழக அரசு உத்தேசித்துள்ளது. மாநிலத்தின் ஜிடிபி மதிப்பில் 25 சதவீதம் வரை கடன் வாங்கலாம் என்றாலும் இது சுமார் 23 சதவீதமாகும்.
நிதிப் பற்றாக்குறை அதிகம் உள்ள மாநிலங்களில் அதிக கடன் வாங்கும் மாநிலமாகவும் தமிழ்நாடு உள்ளது. தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறையை பொறுத்தவரையில் தற்போது ரூ. 44 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.
வரும் ஆண்டில் நிதிப் பற்றாக்குறையை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தாலும் அதற்கான திட்டங்கள் என்ன என்பது விளக்கப்படவில்லை. செலவினங்களும் குறைக்கப்படவில்லை.
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு மாநில ஜிஎஸ்டி மூலம் கணிசமான வரி ஈட்டப்பட்டு வருகின்றபோதிலும், ஒருங்கிணந்த ஜிஎஸ்டியில் மாநிலத்தின் பங்கு கிடைக்கவில்லை என தமிழக அரசு கூறுகிறது. இதுமட்டுமின்றி ஜிஎஸ்டியால் ஏற்படும் வரி இழப்புக்கு சிறப்பு மானிய நிதி கேட்கப்படும் என்று தமிழக அரசு கூறி வருகிறது.
ஆனால் இவற்றை எப்போது மத்திய அரசு தந்து முடிக்கும் என்பது தெரியவில்லை. நிதிப் பற்றாக்குறையை ஈடு செய்யும் வகையில் மத்திய அரசிடம் கூடுதல் நிதியை பெற திட்டமிட்டுள்ளதாக தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஏற்கெனவே மத்திய அரசின் பல திட்டங்களின் நிதியை மாநில அரசு முழுமையாக பெறாத நிலை தான் தற்போது உள்ளது. குறிப்பாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால் அதற்கான முழுமையான நிதியை பெற முடியவில்லை. எனவே கூடுதல் நிதியை பெறுவதிலும் எந்த அளவுக்கு வாய்ப்புகள் இருக்கும் என்பது கேள்விக்குறியே.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT