Published : 02 Feb 2019 03:42 PM
Last Updated : 02 Feb 2019 03:42 PM
இந்திய புதிய இ-காமர்ஸ் முதலீட்டு விதிமுறைகளின் படி ஆன்லைன் விற்பனையாளர்கள் தாங்கள் பங்கு வைத்திருக்கும் பிற விற்பனையாளர்கள் மூலம் வர்த்தகம் செய்யக்கூடாது. இந்த புதிய விதிமுறைகள் நடைமுறையானதையடுத்து அமேசான் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் தன் இந்திய இணையதளத்திலிருந்து சிலபல வர்த்தகப் பொருட்களை விற்பனையிலிருந்து எடுத்து விட்டது.
எக்கோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பொருட்களை அமேசான் விற்பனையிலிருந்து எடுத்து விட்டது. இது குறித்த விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிப்பதென்னவெனில் கடந்த வியாழன் முதலே அமேசானின் இந்திய ஆன்லைன் அலமாரியிலிருந்து சிலபல பொருட்கள் விற்பனையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
“அமேசானுக்கு வேறு வழியில்லை, விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டேயாக வேண்டும். ஆனால் வாடிக்கையாளர்கள் நிச்சயம் அதிருப்தியடைவார்கள்” என்று விவரம் அறிந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பரில் இ-காமர்ஸ் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு விதிமுறைகளை மத்திய அரசு மாற்றியமைத்தது. இது அமேசான், வால்மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. வால்மார்ட் கடந்த ஆண்டுதான் பிளிப்கார்ட்டின் பங்குகளை பெரிய அளவில் வாங்கியுள்ளது.
இந்த புதிய விதிமுறைகளின் படி ஆன்லைன் வர்த்தகர்கள், தாங்கள் பங்கு வைத்திருக்கும் வெண்டார்கள் மூலம் பொருட்களை விற்கக் கூடாது. இதனையடுத்து கிளவுட்டெய்ல் உள்ளிட்ட நிறுவனங்களின் விற்பனைப் பொருட்கள் அமேசான் அலமாரியிலிருந்து காலிசெய்யப்பட்டது. கிளவுட்டெய்ல் நிறுவனத்தில் அமேசான் மறைமுக பங்குகளை வைத்துள்ளது. ஆகவே கிளவுட்டெய்ல் விற்பனைப் பொருட்கள் இனி அமேசான் ஆன்லைன் அலமாரியில் இருக்காது.
அதே போல் ஷாப்பர்ஸ்டாப் பொருட்களும் இனி அமேசான் ஆன்லைன் அலமாரியில் காணக்கிடைக்காது. இதில் அமேசான் 5% பங்கு வைத்துள்ளது. எக்கோ ஸ்பீக்கர்கள், பிரெஸ்டோ பிராண்டட் வீட்டு உபயோகப் பொருட்கள், இது தவிர அடிப்படைப் பொருட்களான சார்ஜர்கள், பேட்டரிகள், ஆகியவையும் அமேசான் ஆன்லைன் வர்த்தக அலமாரிகளில் இனி கிடைக்காது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT