Published : 29 Sep 2014 09:14 AM
Last Updated : 29 Sep 2014 09:14 AM
சில்லரை பணவீக்கம் அதிகமாக இருப்பதால் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்காது என்றே வங்கித்துறை வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இரு மாதங்களுக்கு ஒரு முறை வெளியாகும் ரிசர்வ் வங்கியின் கடன் மற்றும் நிதிக்கொள்கை செப் 30-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
நுகர்வோர் பணவீக்கம் (சிபிஐ) கடந்த சில மாதங்களாக சரிந்து வந்தாலும், இன்னும் எதிர்பார்க்கப்பட்ட நிலைமைக்கு வரவில்லை. இதனால் இந்த முறை வட்டி குறைப்பு இருக்காது என்றே வங்கித்துறையினர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். எஸ்பிஐ தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா கூறும்போது, தற்போதைய நிலைமையில் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிவித்தார்.
இதே கருத்தையே பேங்க் ஆப் பரோடா செயல் இயக்குநர் ராஜன் தவானும் தெரிவித்தார். பணவீக்கம் காரணமாக ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்காது என்றார். தர மதிப்பீட்டு நிறுவனமான கேர் ரேட்டிங், பணவீக்கம் அதிகரிக்கும் சூழ்நிலையில் இருப்பதால் செப்டம்பர் 30-ம் தேதி வட்டிவிகிதத்தை குறைக்கும் வாய்ப்புகள் மிக குறைவு என்று தெரிவித்துள்ளது. வட்டி குறைப்பு இருக்காது என்பதை ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் சில நாட்களுக்கு முன்பு சூசகமாக தெரிவித்தார். வட்டி குறைப்பு என்பது இன்னும் நெடுந்தொலைவில் இருக்கிறது என்று சில நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்றிலும் அவர் தெரிவித்தார்.
வட்டி விகிதத்தை தொடர்ந்து அதிகமாக வைத்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் அதற்கான சாதகமான சூழ்நிலை இன்னும் வரவில்லை. பணவீக்கத்தை குறைக்கும் போதுதான் வட்டி குறைப்பு இருக்கும் என்று அவர் தெரிவித்தார். தொடர்ந்து சில மாதங்களுக்கு பணவீக்கம் குறைவாக இருந்தால்தான் ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்கும் என்று கனரா வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆர்.கே.துபே தெரிவித்தார். ஜனவரி மாதத்தில்தான் வட்டி விகிதத்தில் மாற்றங்கள் எதிர்பார்க்கலாம் என்றும் அவர் கூறினார்.
கடந்த 3 முறையாக ரெபோ விகிதத்தில் எந்தவிதமான மாற்றங்களையும் ரிசர்வ் வங்கி செய்யவில்லை. இப்போதைக்கு ரெபோவிகிதம் 8% என்ற நிலை யிலேயே இருக்கிறது. அதே சமயம் எஸ்.எல்.ஆர். விகிதம் 0.5% குறைக்கப்பட்டிருக்கிறது. எஸ்.எல்.ஆர். விகிதமும் இந்த முறை குறைக்க வாய்ப்பில்லை என்று கேர் ரேட்டிங் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இப்போதைக்கு எஸ்.எல்.ஆர். விகிதத்தை குறைப்பதற்கான தேவை இல்லை. கடன் வளர்ச்சி விகிதம் குறைவாக இருக்கும் நிலையில் பணப்புழக்கத்துக்கு உடனடி தேவை இல்லை என்று இந்திய வங்கிகளின் சங்கத் தலைவர் எம்.வி. தான்க்சலே தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT