Published : 21 Dec 2018 09:00 AM
Last Updated : 21 Dec 2018 09:00 AM

1000 ஏக்கரில் சிலிக்கான் நகரம்; ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

திருப்பதி அருகே 1000 ஏக்கரில் புதிதாக சிலிக்கான் நகரம் உருவாக்கப்படும்.  இப்பகுதி நெல்லூர், திருப்பதி, சென்னையை இணைக்கும் நாட்டின் புதிய தொழில் நகரமாக அமைக்கப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.  திருப்பதி அருகே ரூ. 2,200 கோடி முதலீட்டில் உருவாக உள்ள டிசிஎல் தொழில் நிறுவனத்திற்கும் அடிக்கல் நாட்டி அவர் மேலும் பேசியதாவது:

ஆந்திரா மாநிலத்தையும், குறிப்பாக திருப்பதி நகரை மையப்படுத்தியும் பல்வேறு பன்நாட்டு தொழிற்சாலைகள் அமைந்து வருகின்றன. இதன் மூலம் ஆந்திராவில் வேலை வாய்ப்பு பெருகி வருகிறது. தற்போது ரூ. 2,200 கோடி முதலீட்டில் டிசிஎல் எலக்ட்ரானிக் நிறுவனம் இங்கு தனது புதிய தொழிற்சாலையை தொடங்க உள்ளது.

இங்கு அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் சந்தைக்கு விற்பனைக்கு வர உள்ளது. இதன் மூலம் 8 ஆயிரம் பேருக்கு இதில் வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆண்டிற்கு 60 லட்சம் தொலைக்காட்சி பெட்டிகள் இங்குதயாராக உள்ளன. முன்பு ஹைதராபாத் அருகே உள்ள சைபராபாத் பகுதியை நான் எப்படி ஒருதொழிற்சாலை நகரமாக உருவாக்கினேனோ அதேபோன்று தற்போது திருப்பதி அடுத்துள்ள ரேணிகுண்டா விமான நிலையம் அருகே சுமார் 1000 ஏக்கரில் புதியசிலிக்கான் நகரம் உருவாக்க திட்டமிட்டுள்ளேன்.

இதன் மூலம், நெல்லூர்-திருப்பதி-சென்னை ஆகிய நகரங்கள் இந்த தொழிற்சாலைகள் மூலம்இணையும். உலகிலேயே 3வதுமிகப்பெரிய தொலைக்காட்சி பெட்டி தயாரிப்பு நிறுவனமானடிசிஎல் டிவி இங்கு தயாரிக்கப்படுவது நமக்கெல்லாம் பெருமை தரக்கூடிய விஷயமாகும். நான் கட்டிட பணிகளை 9 மாதங்களுக்குள் முடிக்க வேண்டுமென டிசிஎல் நிறுவனத்தாரிடம் வேண்டுகோள் விடுத்தேன்.

ஆனால் அவர்கள்  8 மாதத்திற்குள் உற்பத்தி தொடங்கி விடும் என உறுதி அளித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.  ஆந்திராவில் முதலீடு செய்ய முன் வரும் நிறுவனங்களுக்கு அனைத்து வசதிகளையும் விரைவில் செய்து கொடுத்து வருகிறோம். இதனால்தான் ‘ஈஸ் ஆஃப் டூயிங் பிஸினஸ்’ திட்டத்தில், நாட்டிலேயே ஆந்திரா முதலிடத்தில் உள்ளது. தற்போது ஆந்திராவில் உள்ள புதிய  59 எலக்ட்ரானிக் தொழில் நிறுவனங்கள் மூலம் 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகி உள்ளது.

வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைக்கான பயிற்சியும் அளித்து வேலையும் வழங்குவது ஆந்திராவில் மட்டும்தான். நாட்டிலேயே பாதுகாப்பான நகரம் பட்டியலில் திருப்பதி 2-வது இடத்தில்உள்ளது. மக்கள் நிம்மதியுடன்வாழ தகுதியான நகரப்பட்டியலில்திருப்பதி 4ம் இடம் பிடித்துள்ளது. சுற்று சூழல் மாசில்லா நகரமாக திருப்பதி நாட்டிலேயே 6ம் இடம் பிடித்துள்ளது.

மேலும், திருப்பதியில் 7பல்கலை கழகங்கள் உள்ளன.

பல்வேறு சிறந்த மருத்துவமனைகளும் இங்குள்ளது. இதனால் திருப்பதி ஒரு சிறந்த கல்வி நகரமாகவும், மருத்துவ வசதிகள் நிறைந்த நகரமாகவும் பெயர் பெற்றுள்ளது என்றார் சந்திரபாபு நாயுடு. இதில் டிசிஎல் நிறுவன சேர்மேன் லீ தாங் ஷெங், அமைச்சர்கள் லோகேஷ், அமர்நாத் ரெட்டி,மாவட்ட ஆட்சியர் பிரத்யும்னா மற்றும் எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x