Published : 10 Dec 2018 06:38 PM
Last Updated : 10 Dec 2018 06:38 PM

ஆன்லைன் ராஜா 55: ஜாக் மாவும் வெற்றிமொழிகளும்...

ஜாக்  மாவின் அனுபவங்கள், தொழில் முனைவர்களுக்கு மட்டுமல்ல, வாழ்க்கையில் சாதிக்க விரும்பும் அனைவருக்கும் அற்புதப் பாடம். அவருடைய சொல்லாடல்கள், இந்த  அனுபவங்களின் சாரத்தை வீரிய வார்த்தைகளில் வடித்தெடுத்து, உத்வேகம் தரும் உற்சாக டானிக். அவற்றுள், தேர்ந்தெடுத்த 40 வைட்டமின் மாத்திரைகளில் 20 இதோ:

1. பிசினஸ் என்பது, ஒருவர் இறந்து அடுத்தவர் ஜெயிக்கும் போர்க்களமல்ல. நீங்கள் இறந்தாலும், நான் ஜெயிக்காமல் போகலாம்.

2. எனக்குப் போட்டியாளர்களைப் பிடிக்கும். உங்களை மேம்படுத்திக்கொள்ள உதவுபவர்கள் அவர்களே.

3. என் பிசினஸ் வாழ்க்கையில் நான் கண்பார்வை இல்லாத புலியின் மேல் சவாரி செய்த கண்பார்வை இல்லாதவன். குதிரைகளில் சவாரி செய்த பல வல்லுநர்கள் கீழே விழுந்தார்கள். அதே நேரத்தில் எங்கள் பயணம் தொடர்ந்தது. ஏனென்றால், நாங்கள் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்பட்டோம். எதிர்காலத்தை நம்பினோம். எங்களைக் காலத்துக்கு ஏற்றபடி மாற்றிக்கொண்டோம்.

4. அலிபாபாவின் அடிப்படைக் கொள்கைகளோடும், நம்பிக்கைகளோடும் மனதளவில் ஒத்துப்போகிறவர்களை மட்டுமே நாங்கள் பணியில் அமர்த்துகிறோம். இதனால், சாதாரணத் திறமைசாலிகளும், அசாதாரணச் சாதனைகள் செய்கிறார்கள்.

5. அலிபாபாவில் கஸ்டமர்களுக்கு முதல் இடம், ஊழியர்களுக்கு இரண்டாம் இடம், பங்குதாரர்களுக்கு மூன்றாம் இடம்.   

6. சேல்ஸ்மேன்கள் எவ்வளவு விற்பனை செய்யவேண்டும் என்று திட்டமிடக்கூடாது. வாடிக்கையாளர்களுக்குத் தன் பொருட்கள் எந்த அளவு உதவும் என்று பார்க்கவேண்டும். அப்போது, தானாகவே, அவர்களுக்குத் தன்னம்பிக்கையும், விற்பனைத் திறமையும் வரும்.

7. பிசினஸிலும், வாழ்க்கையிலும், ஒரு போதும் யாரையும் ஏமாற்றாதீர்கள். என்னை நான்கு கம்பெனிகள் ஏமாற்றினார்கள். அவர்கள் அத்தனை பேரும் மூடிவிட்டார்கள். எந்தக் கம்பெனியும் மக்களை ஏமாற்றி முன்னேற முடியாது.

8. வீடு கட்டுவதற்கான காலத்தில், அடித்தளம் அமைக்க 30 சதவிகித நேரம் எடுக்கிறது. நிலையான வருமானம் தரும் கம்பெனியை உருவாக்கக் குறைந்த பட்சம் ஐந்து வருடங்கள் தேவை.    

9. முழுநிறைவு கொண்ட தொழில் நேர்த்தியை நான் மதிக்கிறேன். ஆனால், இதற்காக, முடிவுகள் எடுக்கக் காலம் தாழ்த்துவது பிசினஸுக்கு உலைவைக்கும்.

10. அலிபாபாவின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம், எங்கள் ஊழியர்களில் 47 சதவிகிதம் பெண்கள்.  21 – ஆம் நூற்றாண்டில் ஜெயிக்க வேண்டுமானால், உங்களைவிடத் திறமைசாலிகளைப் பணிக்கு அமர்த்தவேண்டும். பெண்கள் இயற் கையிலேயே, தங்களைவிட, பிறரைப் பற்றிச் சிந்திப்பவர்கள். ஆகவே, இதைச் சுலபமாகச் செய்கிறார்கள்.

11. அரசாங்கத்தோடு ஒருபோதும் வியாபாரம் செய்யாதீர்கள். அரசாங்கத்தைக் காதலிக்கலாம். ஆனால், திருமணம் செய்துகொள்ளக் கூடாது.

12. தவறுகள் நடக்கும்போது, அவற்றுக்குப் பொறுப்பு ஏற்கவேண்டியவர் சி.இ.ஓ. தன்   கீழ் வேலை பார்ப்பவர்கள் மேல் அவர் பழியைத் தள்ளிவிடக்கூடாது.

13. நான் அபாரத் திறமைசாலியல்ல. என் உருவத் தோற்றம், திறமை, படிப்பு ஆகிய எல்லாமே சுமாரானவை. ஆனால், மனிதர்களைப் புரிந்து கொள்வதில் திறமைசாலி. பலவீனங்களை அடக்கி, பலங்களைப் பெருக்கிக்கொண்டேன். 

14. எனக்குக் கம்ப்யூட்டர் பற்றி எதுவுமே தெரியாது. ஆகவே, இளைய தலைமுறைக்குச் சொல்கிறேன், ‘‘ஜாக் மாவே ஜெயிக்க முடியுமானால், கடுமையாக உழைத்தால், உங்களில் 90 சதவிகிதம் பேர் நிச்சயம் ஜெயிக்க முடியும்.”

15. தோல்விகள் வரும்போது, அவற்றுக்கான காரணங்களைஆராயாமல் வெறுமே அழுதுகொண்டிருந்தால், எப்போதும் அழுதுகொண்டேதான் இருப்பீர்கள்.

16. நாளை உங்கள் பிசினஸ் வளர வேண்டுமானால், இன்று நீங்கள் தவறுகள் செய்யவேண்டும். ஆனால், ஒரே தவறை இரண்டாம் முறை செய்யாதீர்கள்.

17. வருங்காலத்தில் ஒரு நாள், பேரக் குழந்தைகளிடம் என் சாதனைகள் பற்றி டமாரம் அடித்துக்கொண்டால், “இது என்ன பெரிய விஷயமா? இன்டர்நெட் அலை அடித்தது. நீங்கள் உயரே போனீர்கள்” என்று நிசாரமாகச் சொல்வார்கள். உங்கள் தவறுகளையும், தோல்விகளையும் எடுத்துச் சொன்னால், உங்களைப் பாராட்டுவார்கள். ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும், சோக அனுபவங்கள் நிறைய உண்டு. 

18. பணமோ, தொழில்நுட்பமோ உலகை மாற்றுவதில்லை. கனவுகள் தாம் மாற்றும்.

19. அலிபாபாவை “1000 தவறுகள்” என்று நான் வர்ணிப்பேன். ஆனால், எங்கள் தவறுகளைத் தொடர்ந்து திருத்திக்கொண்டே வந்தோம்.

20. பணம் இல்லாமல் எந்த பிசினஸையும் தொடங்க முடியாது என்று பல தொழில் முனைவர்கள் சொல்கிறார்கள். இது தவறு. 1995 – இல் வெறும் கையோடுதான்  முதல் பிசினஸ் ஆரம்பித்தேன். நிஜமான தொழில் முனைவர்கள் முற்சியின் ஆரம்பப் புள்ளி அவர்களின் கனவுகள். பணம் கடைசிதான்.

இன்னும் இருபது வெற்றிமொழிகள் – அடுத்த வாரம். 

(குகை இன்னும் திறக்கும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x