Published : 07 Dec 2018 02:17 PM
Last Updated : 07 Dec 2018 02:17 PM

சென்னைக்கு மெட்ரோ ரயில்கள் தயாரிக்கும் ஆல்ஸ்டோம் நிறுவனம் புதிய சாதனை

ஆந்திராவின் ஸ்ரீசிட்டியில் இயங்கிவரும் ஆல்ஸ்டோம் நிறுவனம், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்திற்கு தனது கடைசி 22 -வது மெட்ரோ ரயிலை வியாழக்கிழமை ஏற்றுமதி செய்தது.

சென்னையிலிருந்து 74 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஆந்திராவின் ஸ்ரீசிட்டியில் ஆல்ஸ்டோம் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் பிரான்ஸ் நாட்டை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் சென்னை, லக்னோ, கொச்சி, மும்பை ஆகிய இந்திய நகரங்களுக்கு மெட்ரோ ரயிலை தயாரிக்கிறது.

கடைசியாக சென்னையில் இயக்கப்பட்ட சென்னை சென்ட்ரல் – நேரு பூங்கா, சின்னமலை – டிஎம்எஸ் இடையேயான மெட்ரோ ரயில்களையும் இந்நிறுவனமே தயாரித்தது. அதுமட்டுமல்லாமல், சென்னையில் அடுத்து 10 மெட்ரோ ரயில்களை தயாரிக்கும் ஆர்டர்களையும் இந்நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்திற்கு தயாரிக்கப்பட்ட 22 மெட்ரோ ரயில்கள், ஸ்ரீசிட்டியில் அமைந்துள்ள ஆல்டோஸ் நிறுவனத்தின் முதல் வெளிநாடு ஏற்றுமதியாகும். இதில், 22 ஆவது மெட்ரோ ரயில் தான் வியாழக்கிழமை ஏற்றுமதி செய்யப்பட்டது.

அந்த ரயிலின் சோதனை ஓட்டத்தை ஆல்ஸ்டோம் நிறுவனத்தின் ஆசிய-பசிபிக் துணை தலைவர் லிங் ஃபாங், இந்தியா மற்றும் தெற்காசியாவுக்கான நிர்வாக இயக்குநர் அலெய்ன் ஸ்போர், ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகளுக்கான நிர்வாக இயக்குநர் மார்க் காக்ஸன் ஆகிய மூவரும் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.

ஆல்ஸ்டோம் நிறுவனத்தின் இந்த சாதனை குறித்து லிங் ஃபாங் கூறுகையில், "ஆசிய பசிபிக் பகுதியில், சிட்னி மெட்ரோவுக்கான கடைசி மெட்ரோ ரயிலை வெற்றிகரமாக முடித்ததில் பெருமை கொள்கிறோம். குறிப்பாக, ஸ்ரீசிட்டியில் உள்ள ஆல்ஸ்டோம் நிறுவனம் தனது முதல் வெளிநாடு ஏற்றுமதியை எதிர்பார்ப்புகளை  பூர்த்தி செய்யும் விதத்தில் குறிப்பிட்ட காலத்திலேயே முடித்துள்ளது இன்னும் பெருமைக்குரியது. தயாரிப்பு மற்றும் இன்ஜினியரிங் ஆகியவற்றில் இந்தியா மீதான நம்பிக்கையை இது உறுதிப்படுத்தியுள்ளது" என தெரிவித்தார்.

ஆல்ஸ்டோம் நிறுவனம் 2022 ஆம் ஆண்டு வரை கனடாவின் மாண்ட்ரியல், சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கான மெட்ரோ ரயில்கள் தயாரிப்பு பணிகளில் பிஸியாக உள்ளது.

இதில், மும்பை மெட்ரோ ரயில் திட்டத்துக்காக மட்டும் 2,500 கோடி மதிப்பீட்டில் தயாரிப்பு பணிகள் 2019 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட உள்ளன. கொச்சி மெட்ரோவுக்கு கடைசி மெட்ரோ ரயில் தயாரிக்கப்பட்டு வருகிறது. மும்பை மற்றும் மாண்ட்ரியல் மெட்ரோ ரயில்கள் மொத்தமாக 500 கோச்-களை உள்ளடக்கியதாகும்.

இதுகுறித்து இந்தியா மற்றும் தெற்காசியாவுக்கான நிர்வாக இயக்குநர் அலெய்ன் ஸ்போர் கூறுகையில், "மாண்ட்ரியல் மற்றும் மும்பை மெட்ரோவுக்கான பணிகள் 2019 -ம் ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தொடங்கும். அதில், முதல் மெட்ரோ ரயிலுக்கான பணிகள் 2020 ஆம் ஆண்டு நிறைவடையும்" என கூறினார்.

"தற்போது மாதத்திற்கு 16-18 மெட்ரோ ரயில் கோச்-கள் இங்கு தயாரிக்கப்படுகிறது. இதனை மாதத்திற்கு 22 ஆக அதிகரிக்கும் திட்டத்தில் இருக்கிறோம்" என அலெய்ன் ஸ்போர் கூறுகிறார்.

ஸ்ரீசிட்டியில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மூலமே மெட்ரோ ரயில் தயாரிக்கப்படுகிறது. அலுமினியம் மூலம் தயாரிப்பதற்கான சாத்தியக் கூறுகளை அந்நிறுவனம் சோதனையிட்டு வருகிறது. பொதுவாக 8 கோச்-களை கொண்ட மெட்ரோ ரயிலை ஸ்ரீசிட்டி தயாரிக்கிறது என்றாலும், ஒவ்வொரு 'ஆர்டர்'-ஐ பொறுத்தும் அதன் அளவு மாறுபடும் என்கின்றனர்.

இங்கு தயாரிக்கப்படும் மெட்ரோ ரயில்களுக்கு கோயம்புத்தூரிலுள்ள இந்நிறுவனத்திலிருந்து உதிரி பாகங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஸ்ரீசிட்டியில் உள்ள ஆல்ஸ்டோம் நிறுவனத்தில் 500-க்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர்.

தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x