Published : 10 Aug 2014 12:52 PM
Last Updated : 10 Aug 2014 12:52 PM
வங்கி சேவையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல காத்திருக்கும் ரெப்போ வங்கி. வீட்டுக்கடன் பிரிவில் முன்னணி நிறுவனங்களுக்கு இணையாக வளர்ந்துவரும் ரெப்கோ ஹோம் பைனான்ஸ். இந்த இரு நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் ஆர்.வரதராஜனிடம் அடுத்த கட்ட வாய்ப்பு மற்றும் வளர்ச்சி குறித்து சென்னையில் இருக்கும் அவரது தலைமை அலுவ லகத்தில் சந்தித்து பேசினோம். அந்த விரிவான பேட்டியிலிருந்து:
விவசாயம் படித்த நீங்கள் வங்கித்துறைக்கு எப்படி வந்தீர்கள்?
நான் படித்த காலத்தில் விவசாய கடன்களுக்கு அப்போது முன்னுரிமை கொடுக்கப்பட்டது. அதற்கு விவசாய பட்டதாரிகள் தேவைப்பட்டார்கள். அப்படித்தான் சிண்டிகேட் வங்கியில் சேர்ந்தேன். 1976 முதல் 2000 வரை சிண்டிகேட் வங்கியில் வேலை பார்த்தேன்.
2000ம் ஆண்டு ரெப்கோ வங்கியை விரிவுபடுத்த வங்கியா ளரகள் தேவைப்பட்டார்கள். அப்போது ரெப்கோ வங்கிக்கு வந்தேன். ஒரு வருடத்துக்கு பிறகு நிரந்தரமாக ரெப்கோ வங்கிக்கு வந்துவிட்டேன்.
மற்ற வங்கிகள் கொடுக்கும் சேவைகளை ரெப்கோ வங்கி ஏன் கொடுக்காமல் இருக்கிறது?
இது ஒரு கூட்டுறவு வங்கி. இதை ஆரம்பித்ததற்கு வரலாறு இருக்கிறது. இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு சென்றவர்கள், எந்த நாட்டு குடியுரிமையும் இல்லாமல் 1960களில் தாயகம் திரும்பினார்கள். இவர்களின் வாழ்க்கையை மேம்படுத்து வதற்காக ஆரம்பிக்கப்பட்டது இந்த கூட்டுறவு வங்கி. இவர்களின் நிதியை கொண்டு சேர்ப்பதற்காகத்தான் வங்கி ஆரம்பிக்கப்பட்டது. வங்கி என்ற பெயர் இருந்தாலும் அரசாங்கம் கொடுக்கும் உதவிகளை மட்டுமே செய்தது. தாயகம் திரும்பியவர்கள் மட்டுமே கணக்கு தொடங்க முடியும்.
1980களில் அங்கிருந்து வருப வர்கள் குறைந்துவிட்டார்கள். வங்கி துவங்கியதன் நோக்கம் முடிந்துவிட்டதா, இல்லை மற்றவர் களுக்கு பயன்படுத்தலாமா என்று முடிவெடுத்து மற்றவர்களும் கணக்கு தொடங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதன் பிறகுதான் டெபாசிட் வாங்க ஆரம்பித்தோம். கடன் கொடுத்தோம்.
உங்களுக்கு பிறகு ஆரம்பித்த பல வங்கிகள் எங்கேயோ சென்றுவிட்டதே?
இது கூட்டுறவு வங்கி. அதனால் உறுப்பினராக பதிவு செய்தால் மட்டுமே அவர்கள் இந்த வங்கி சேவையை பெற முடியும். மற்ற வங்கிகளின் வளர்ச்சி சுமார் 13 சதவீதம். ஆனால் ரெப்கோ வங்கி 30% வளர்ச்சியில் இருக்கிறது. மற்ற வங்கிகள் அந்நிய செலாவணி, என்.ஆர்.ஐ. கணக்குகளை வைத்துக்கொள்ளலாம். ஆனால் நாங்கள் வாங்க முடியாது. உறுப்பினர்களுக்குள் இயங்கி வருவதால் வளர்ச்சி உங்களுக்கு தெரியவில்லை.
கூட்டுறவு வங்கிகள் என்பதை உடைத்துவிட்டு வங்கியாக ஏன் மாறக்கூடாது?
கூட்டுறவு வங்கியாக இருப்பதால், முன்பு வங்கி உரிமத்துக்கு விண்ணப்பிக்க முடியாது. இப்போதுதான் சிறிய வங்கிகள் ஆரம்பிக்கலாம், கூட்டுறவு வங்கிகளும் வரலாம் என்று ரிசர்வ் வங்கியின் வரைவு தெரிவித்திருக்கிறது. அதனால் கூடிய விரைவில் நாங்களும் விண்ணப்பிப்போம். அப்போது வளர்ச்சி இன்னும் அதிகமாக இருக்கும்.
கூடுதல் சேவை இல்லாமல் வாடிக்கையாளர் எப்படி வருகிறார்கள்?
டெபாசிட் மற்றும் கடன் கொடுக்கும் வேலையை மட்டுமே செய்கிறோம். இருந்தாலும் வாடிக்கையாளர்கள் எங்களை நோக்கி வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். மற்றவர்களை விட டெபாசிட்டுக்கான வட்டி எப்போதுமே அதிகமாக தருகி றோம். இப்போதைக்கு 9.8% வட்டி கொடுக்கிறோம்.
கடன் கொடுக்கும்போது கொஞ்சம் அதிக வட்டிக்குத்தான் கொடுக்கிறோம். பொதுவாக பிஸினஸ் கடன்கள்தான் கொடுக் கிறோம். அத்தனையும் அடமானக் கடன். இதில் 40% தங்க கடன். மற்றவை சொத்துகளை வைத்துக் கொடுக்கிறோம்.
மற்ற வங்கிகள் அவர்களிடம் இல்லாத ஏகப்பட்ட டாக்கு மெண்ட்கள் கேட்பார்கள். ஆனால் நாங்கள் அவர்களின் சொத்து மற்றும் அவரின் திருப்பிச் செலுத்தும் திறனை மட்டுமே பார்க்கிறோம். அதனால் மற்ற வங்கிகளில் கிடைப்பதை விட 0.5 சதவீத அதிக வட்டி அவர்களுக்கு ஒரு பிரச்சினையே கிடையாது. அவர்களுக்கு நேரம் முக்கியம், அதைவிட தனிநபர்களிடம் வாங்கும் போது இதைவிட அதிகம் கொடுக்க வேண்டி இருக்குமே.
வட்டி அதிகாமாக இருந்தாலும் வாடிக்கையாளர்கள் சரியாக திருப்பி செலுத்தி விடுகிறார்கள். மொத்த வாராக்கடன் 2 சதவீதம் என்ற அளவிலும் நிகர வாராக்கடன் 0 என்ற அளவிலும் இருக்கிறது.
கூட்டுறவு வங்கி சிறிய அளவில் செயல்பட்டு வரும்போது ரெப்கோ ஹோம் பைனான்ஸ் இவ்வளவு பெரிய வளர்ச்சியை எட்டியது எப்படி?
ஏற்கெனவே வீட்டுக்கடன் கொடுத்துவந்தாலும் பெரிய வளர்ச்சியை அடைய முடிய வில்லை. வீட்டுக்கடன் வாங்க நினைப்பவர்கள் 15 முதல் 20 ஆண்டுகளுக்குதான் வாங்க நினைப்பார்கள். ஆனால் கூட்டுறவு வங்கிகள் 7 முதல் 10 வருடங்களுக்கு மட்டுமே கொடுக்க முடியும். இதற்கு நிதி கிடைப்பதிலும் பிரச்சினை இருந்தது. அதனால் தனியாக ஒரு ஹோம் பைனான்ஸ் நிறுவனம் ஆரம்பிக்க முடிவு செய்தோம். ஒரு கட்டத்துக்குப் பிறகு நிதி தேவைப்பட்ட பிறகு பிரைவேட் ஈக்விட்டி முதலீடு கிடைத்து, வளர்ச்சி சாத்தியமானது.
மற்ற நிறுவனங்களை விட உங்களது நிறுவனத்தின் வட்டி அதிகமாக இருக்கிறதே?
எங்களது ஆரம்ப வட்டி 10.85 சதவீதமாக இருக்கிறது. சமயங்களில் வாடிக்கையாளர் களின் ரிஸ்க்கை பொறுத்து வட்டி அதிகரிக்கக் கூடும்.
வட்டி அதிகமாக இருந்தாலும் உங்களிடம் ஏன் வாடிக்கையாளர்கள் வர வேண்டும்?
அப்படிபார்த்தால் ஏன் இத்தனை நிறுவனங்கள் தேவை. காரணம் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஒவ்வொரு வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். வட்டி மட்டுமே முடிவு செய்யும் விஷயமல்ல. ஏற்கெனவே சொன்னதுபோல அனைவருக்கும் எளிதாக வீட்டுக்கடன் கிடைப்பதில்லை.
மாதச் சம்பளம் இல்லாத, சிறிய வியாபாரிகள்தான் உங்களது சந்தையா?
இந்த இடம் காலியாக இருக்கிறது. இவர்களுக்கு கடன் கொடுப்பது ரிஸ்க் என்ற மற்றவர்கள் நினைக்கிறார்கள். அதுமுடியும், லாபகரமாக செயல்பட முடியும் என்று நாங்கள் சொல்கிறோம். கிரிசில் ஆய்வுபடி கிராமப்புறத்தில் இருப்பவர்களுக்கு 10 சதவீதம்தான் முறையான வீட்டுக்கடன் கிடைக்கிறது. தனிநபர்களிடம் இதை விட அதிக வட்டிக்கு கடன் வாங்கி அவர்களின் மொத்த உழைப்பும் வீணாகிறது. அதனால் எங்களை போன்ற நிறைய நிறுவனங்கள் நாட்டுக்கு தேவை. அவர்கள் 0.50 சதவீத அதிக வட்டியை பற்றி கவலைப்படுவதில்லை. வாடிக்கையாளர்களுக்கு தேவை நீண்ட காலத்துக்கான கடன்.
karthikeyan.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT