Last Updated : 27 Nov, 2018 01:52 PM

 

Published : 27 Nov 2018 01:52 PM
Last Updated : 27 Nov 2018 01:52 PM

அலிபாபா நிறுவனர் அரசியல் பிரவேசம்: சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார் ஜாக் மா

சீனாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரும், ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபாவின் நிறுவனருமான ஜாக் மா அந்ந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துள்ளார். முதலாளித்துவ கருத்தில் ஆர்வம் கொண்ட அவர் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபா, சீன மக்களின் வாழ்க்கை முறையையே மாற்றியது. சீனாவில் இ-காமர்ஸ் மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சந்தையை முழுவதுமாகத் தனதாக்கிக்கொண்டதன் மூலம் அலிபாபா 420 பில்லியன் டாலர் மதிப்புடைய நிறுவனமாக உயர்ந்தது.

ஜாக் மாவும் இதன் மூலம் 40 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் சீனாவின் முதல் பெரிய பணக்காரராக உயர்ந்தார். தற்போது அலிபாபா தனது சேவையை உலகின் பல் வேறு நாடுகளிலும் பல்வேறு தொழில்களிலும் விரிவுபடுத்தி வருகிறது.

முன்னாள் ஆங்கில ஆசிரியரான ஜாக் மா, ஒருகாலத்தில் ஆங்கிலம் பேச வராத காரணத்தினால் வேலை கிடைக்காமல் திண்டாடியவர். 1999-ம் ஆண்டில் தன்னுடைய மாணவர்களை வைத்து தொடங்கியதுதான் அலிபாபா நிறுவனம்.

இந்நிலையில், 54 வயதாகும் ஜாக் மா அலிபாபா நிறுவனத்தில் இருந்து, 2019-ம் ஆண்டு ஓய்வு பெறப்போவதாக அண்மையில் அறிவித்தார். அலிபாபா நிறுவனத்தின் தற்போதைய தலைமை செயல் அதிகாரியான, 46 வயதாகும் டேனியல் ஷாங்கிடம் தலைமை பொறுப்பை ஒப்படைக்க உள்ளதாகவும், அதேசமயம் இயக்குநர்களில் ஒருவராக தொடர இருப்பதாகவும் தெரிவித்தார்.

இனி கல்வித்துறையை மேம்படுத்தும் தன்னார்வப் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளப் போவதாகவும் கூறினார்.

இந்தநிலையில் ஜாக் மா சீன கம்யூனிஸ்ட் கட்சியில் அதிகாரபூர்வ உறுப்பினராக இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை சீன கம்யூனிஸ்ட கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகை செய்தியாக வெளியிட்டுள்ளது. ‘தி பிப்பீள்ஸ் டெய்லி’ என்ற அந்த பத்திரிகை, அவர் எப்போது கட்சியில் இணைந்தார் என்ற விவரங்களை தெரிவிக்கவில்லை. தகவல் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறை சார்ந்தவர்களை தங்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அந்த பத்திரிகை கூறியுள்ளது.

சீனாவைச் சேர்ந்த  வேறு சில பிரபலங்களும் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துள்ளதாக அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஐரோப்பா மற்றும் ஆசியாவைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்களுக்கும் ஜாக் மா ஆலோசகராக இருந்து வந்ததாக கூறப்பட்டது.

குறிப்பாக அமெரிக்காவைச் சேர்ந்த அரசியல் தலைவர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், அதில் அதீத ஆர்வம் காட்டியதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் அவர் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தது பல தரப்பினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. எனினும் இதுகுறித்து அலிபாபா நிறுவனம் எந்த கருத்தையும் வெளியிடவில்லை.

இதுகுறித்து ராய்ட்டர்ஸ் நிறுவனத்துக்கு அலிபாபா செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ள தகவலில், அலிபாபாவை பொறுத்தவரை எப்போதும் மிகச்சிறந்த தொழில் நிறுவனமாகவும், விதிமுறைகளை மதித்து போட்டியை எதிர்கொண்டு வெற்றியை ஈட்டும் நிறுவனமாகவும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x