Published : 12 Nov 2018 10:19 AM
Last Updated : 12 Nov 2018 10:19 AM

ஆன்லைன் ராஜா 52: முடிவே இல்லை! வானமே எல்லை!!

1999 ஹாங்ஸெள நகரத்தில் ஒரு சிறிய அடுக்குமாடிக் குடியிருப்பு. 18 பேர் கால் நீட்டி உட்காரக்கூட இடமில்லை. சிலர் கம்ப்யூட்டர்கள் முன்னால்.  இன்னும் சிலர் இரவு முழுக்க விழித்த சிவந்த கண்களோடு தரையில் அரைகுறைத் தூக்கத்தில். ஆங்காங்கே கொட்டிக் கிடக்கும் நூடுல்ஸ் பாக்கெட்கள், கறுப்புத் தேநீர் குடித்த பேப்பர் கப்கள். 18 பேரும் நடுத்தர வர்க்கத்தின் அடித்தட்டில் இருப்பவர்கள். அந்த அறை வெறும் பூமியல்ல, அவர்கள் கனவுகளைச் சுமக்கும் கருவறை. வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் கொட்டி அவர்கள் உருவாக்கியிருக்கும் அலிபாபா கம்பெனி. அவர்கள் முதலீடான 60,000 டாலர்கள் மட்டுமே கம்பெனியின் சந்தை மதிப்பு. வியர்வை சிந்தி உழைத்துச் சேர்த்த  பணம் கடலில் கரைத்த உப்பாகுமா அல்லது, விடியும் பொழுதுகள் விளைச்சலைத் தருமா என்று 17 பேருக்கு நெஞ்சில் தடக், தடக். இந்த இருட்டில் ஒரே ஒளிக்கீற்று -  நண்பர், வழிகாட்டி, தலைவர் ஜாக் மா மீது வைத்திருக்கும் நம்பிக்கை.

2018. 

சந்தை மதிப்பு 368 பில்லியன் டாலர்கள் (சுமார் 28,361,350,000,000 ரூபாய்.) இந்தியாவில் சந்தை மதிப்பில் நம்பர் 1 முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் - 7,37,576 கோடி ரூபாய். அதாவது,  ரிலையன்ஸைவிட அலிபாபா நான்கு மடங்கு பிரம்மாண்டம். ஆரம்ப முதலீடான 60,000 டாலர்கள், 47 கோடி மடங்குபெருகிவிட்டது. ஆரம்பக் கூட்டாளிகள்எல்லோருமே மகா மகா கோடீஸ்வரர்கள்.  ஆண்டு விற்பனை 37 பில்லியன்டாலர்கள். நிகர லாபம் 8 பில்லியன் டாலர்கள். ஹாங்ஸெள நகரில் பிரம்மாண்டத் தலைமையகம்; அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பிரான்ஸ்,ஜெர்மனி, ஹாங்காங், இந்தியா (மும்பை), இத்தாலி, ஜப்பான். நெதர்லாந்து, தைவான், என உலகின் ஏராளமான நாடுகளில் கிளை அலுவலகங்கள். 200–க்கும் அதிகமான நாடுகளில் வியாபாரம். 67,000 – க்கும் அதிகமான ஊழியர்கள்.    

உலகின் மிகப் பெரிய சில்லறை வியாபாரி, உலக இன்டர்நெட் கம்பெனிகள் வரிசையில் அமேசான், ஆல்பஃபெட் (Alphabet - கூகுளின் துணை நிறுவனம்), சீனாவின் JD.com, ஃபேஸ்புக் ஆகி

யோருக்கு அடுத்தபடியாக ஐந்தாவது இடம். அலிபாபா என்னும் சீனச் சக்கரர்த்தியின் வெண்கொற்றக் குடையின் கீழ் வரும் ஒவ்வொரு கம்பெனியும் சூப்பர்ஸ்டார், உலக நாயகன், அல்டிமேட்

ஸ்டார், இளைய தளபதி, மக்கள் செல்வன். இவர்களோடு ஒரு சுருக் சந்திப்பு.

அலிபாபா.காம்

உலகின் மிகப் பெரிய B2B வியாபாரி. அலிபாபா.காம், 1688.காம், அலிஎக்ஸ்பிரஸ்.காம்  என்னும் மூன்று தளங்களில் இயங்குகிறது; அலிபாபா.காம்முழுக்க முழுக்க வெளிநாட்டு வணிகத்துக்கானது. 190 நாடுகளின் ஏற்றுமதி,இறக்குமதியாளர்கள் விற்றல், வாங்கல் செய்கிறார்கள். இந்த இணையதளத்தில் தினசரி வருகை 13 கோடி. ஆச்சரியம். இவர்களுள் 54 லட்சம் வருகைகளோடு, இந்தியா நான்காம் இடம் பிடிக்கிறது. முதல் மூவர் -  அமெரிக்கா, சீனா, துருக்கி.  

வருபவர், வருகைகள் – என்ன வித்தியாசம்? ஒருவர் இணைய தளத்துக்குள் முதன்முறை வரும்போது, வருபவர் எண்ணிக்கையில் ஒன்று கூடும்.

Log Out செய்துவிட்டு அவர் மறுமுறை வரும்போது, ‘‘வருபவர்” எண்ணிக்கை மாறாது. ஆனால், “வருகைகள்” எண்ணிக்கையில் ஒன்று கூடும்.   

1688.காம்  அலிபாபாவின் சீனப்பதிப்பு. உள்நாட்டு மொத்த வியாபாரத்துக்காக 1999 – ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 1688 என்னும் எண்ணைச் சீனமொழியில் உச்சரித்தால்,``நெடுநாள் அதிர்ஷ்டம்” என்று அர்த்தம். சீன மக்களுக்கு அதிர்ஷ்டம், சகுனம் ஆகியவற்றில் நம்பிக்கை அதிகம். ஆகவேதான், இந்தப் பெயர். 1688 – இல் வியாபாரிகள் அத்தனை பேரும் சீனக் கம்பெனிகள் மட்டுமே. தினசரி வருகை 8 கோடி.

இந்த இரு இணையதளங்களிலும் பெரிய வியாபாரிகள் மட்டுமே பங்கேற்றார்கள். சிறிய சீன நிறுவனங்களுக்கும் ஏற்றுமதிக்கான வாய்ப்புக் கதவுகளைத் திறக்க ஜாக் மா விரும்பினார். 2010 – ஆம் ஆண்டில் அலிஎக்ஸ்பிரஸ்.காம் தொடங்கினார். சீனத் தயாரிப்பாளர்கள் மட்டுமே இதில் விற்க முடியும். வெளிநாட்டவர் மட்டுமே வாங்க முடியும். இதன்தினசரி வருகை 54 கோடி. அகிலஉலக மொத்த வியாபாரத்துக்கு அலிபாபா; சீன வியாபாரிகளின் ஏற்றுமதிக்கு 1688; சீனச் சிறுதொழில்களின்ஏற்றுமதிக்கு அலிஎக்ஸ்பிரஸ்.  எத்தனைதெளிவான மார்க்கெட்டிங் திட்டம்?

டாபா.காம்

அலிபாபாவின் உள்நாட்டு வணிகத்தளம். 2003 – இல் தொடங்கப்பட்டது. சீன மக்களுக்குப் பொருட்களின் விவரங்களைப் படங்கள் மூலம் பார்ப்பது பிடிக்கும்.  டாபா.காம், அலிபாபா.காம் ஆகிய இரு தளங்களுக்கும் விசிட் அடியுங்கள். உங்களுக்கே வித்தியாசம் தெரியும். டாபாவில் ஏராளமான படங்கள் வரும். ஜாக் மா ஒவ்வொரு சின்ன விஷயத்திலும் காட்டும் கரிசனம்,வடிவமைப்பின் நுணுக்கம் புரியும். இதனால்தான், டாபா.காம் சீனாவின் C2C (கஸ்டமர் டு கஸ்டமர்) வியாபாரத்தில் 95 சதவிகிதத்தைப் பிடித்து முதல்இடத்தில் இருக்கிறது. தினசரி வருகைகள் 80 கோடி.

டாபாமால்.காம்   

பிராண்டட் பொருட்களுக்காக 2008 – இல் தொடங்கப்பட்டது. சுருக்கமாக டி மால் (T Mall) என்று அழைக்கப்படுகிறது. தினசரி வருகைகள் 45 கோடி. அடிடாஸ்,ரீபாக், ரேபன், நோக்கியா, பிலிப்ஸ், சாம்சங் போன்ற உலகமகா பிராண்ட்கள் சீன மார்க்கெட்டில் அரங்கேறியது டாபாமாலில்தான். இன்று 74 நாடுகளின் 1,50,000 – க்கும் அதிகமானபிராண்ட்களைக் கஸ்டமர்களுக்குக்கொண்டுவருகிறது.

சீனாவில், வருடத்தின் நவம்பர் 11 மிக முக்கியமான நாள். இந்தத் தேதியை எப்படி எழுதுவோம்? 1111. அதாவது நான்கு 1 – கள். 1993 முதல் , “ஜோடியில்லாத ஒற்றையர் தினம்” (Singles Day) என்று கொண்டாடப்பட்டு வருகிறது. அன்று நாடு முழுக்க விடுமுறை, திருவிழாக் கோலம். ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும்  நாளாம், நாளாம் திருநாளாம், நம்பிக்கும் நங்கைக்கும் மணநாளாம்  என்று மாங்கல்யம் தந்துனானே.  2009 – ஆம் ஆண்டு முதல் நவம்பர் 11 – ஐ உலக ஷாப்பிங் திருவிழாவாகக்  கொண்டாட அலிபாபா தொடங்கியது. 24 மணி நேரம் எல்லாப் பொருட்களுக்கும் அபாரத் தள்ளுபடிகள். பலர் இதற்காகவே காத்திருந்து பொருட்கள் வாங்குவார்கள்.

நவம்பர் 11, 2017. அலிபாபாவின் ஒரே நாள் விற்பனை வரலாறு காணாத 25.3 பில்லியன் டாலர்கள் தொட்டது.  ஆமாம், இருபத்தி நான்கே மணி நேரத்தில் 1,63,185 கோடி ரூபாய் வியாபாரம்!  (இது அலிபாபாவின் வருமானமல்ல, விற்பனையான பொருட்களின் மதிப்பு).    

ஆன்ட் ஃபினான்ஷியல் சர்வீசஸ் (Ant Financial Services) ஐந்து இணையதளங்களின் விற்பனைக்கும் உதவும் பேமென்ட் சேவை.  டாபாவின் சின்னமான எறும்பு (Ant) பெயரில் இருக்கிறது. இதில் அலிப்பே (Alipay) மிக முக்கியமானது. சீனாவில் தெருவோர வியாபாரிகள் கூட டிஜிட்டல் பேமென்ட் ஏற்றுக்கொள்கிறார்கள். பயன்படுத்தும் வியாபாரிகள், கஸ்டமர்கள் மொத்த எண்ணிக்கை 100 கோடி. இதில் சுமார் 40 கோடிப் பேரின் பேமென்ட் முறை, அலிப்பே.   

அலிமாமா.காம் (Alimama. com) வியாபாரிகளுக்குத் தங்கள் இணையதளங்களிலும், அதைத் தாண்டியும், மார்க்கெட்டிங் ஆலோசனைகளும், உதவிகளும் வழங்குகிறது.

கேனியாவ் நெட்வொர்க் (Cainiao Network)  உள்நாட்டு ஆர்டர்கள் 24 மணி நேரத்துக்குள்ளும், வெளிநாட்டு ஆர்டர்கள் 72 மணி நேரத்துக்குள்ளும் கஸ்டமர்களைச் சென்றடையவேண்டும் என்பது அலிபாபா குழுமத்தின் இலக்கு. இதை ஒருங்கிணைப்பது கேனியாவ்.    

அலிபாபாக்ளவுட்.காம் (Alibabacloud.com) அலியுன் (Aliyun) என்றும் அழைக்கப்படுகிறது. ‘‘யுன்” என்னும் சீன வார்த்தைக்கு Cloud என்று அர்த்தம். இன்றைய உலகில் பிசினஸ் வளர்ச்சிக்குக் கம்ப்யூட்டர், வேகமான இணையத் தொடர்புகள், தரவு சேமிப்பு (Data Storage) வசதிகள் அத்தியாவசியம். இந்தக் கட்டமைப்புகளுக்குச் சிறு தொழில்களால் செலவிட முடியாது. அலிபாபா பயன்பாட்டுக் கட்டண முறையில் வழங்குகிறது. 2009 – ஆம் ஆண்டில் இந்தச் சேவை தொடங்கினார்கள். உலகின் 18 நாடுகளில் தரவு மையங்கள் இருக்கின்றன. இவற்றுள் ஒன்று மும்பையில். அலிபாபாவுக்கு அலியுன் மாபெரும்உந்துசக்தியாக இருக்கும் என்று தொழில்நுட்ப மேதைகள் கணிக்கிறார்கள். 

இவை தவிர, சிங்கப்பூரில் ஆன்லைன் பிசினஸ் செய்யும் லஸாடா (Lazada)குழுமம், சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்னும் ஆங்கில நாளிதழ், டிஜிட்டல் மீடியா என்ட்டர்டெயின்மென்ட் சர்வீசஸ் (ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சிகளுக்கு), அலிஹெல்த் (உடல்நலம் தொடர்பான சேவைகள்), அலிமியூசிக், அலிபாபா பிக்சர்ஸ் என்னும் பல்வேறு துறைகளில் அலிபாபா குழுமம் கால் ஊன்றியிருக்கிறது.

இதனால், ஐ.பி. ஓ. வந்த செப்டம்பர் 19, 2014 முதலான கடந்த நான்கு நிதியாண்டுகளின் ராக்கெட் வேக வளர்ச்சி இதோ;

இந்தியாவில்    அலிபாபா சுமார் 28,000 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறார்கள். இவற்றுள் சில; 

ஸ்நாப்டீல்  – ரூ.1,050 கோடி

ஸோமாடோ – ரூ.1,400 கோடி

பேடிஎம் – ரூ.4,025 கோடி

பேடிஎம் மால் – ரூ.1,400 கோடி

டிக்கெட் நியூ சென்னை – ரூ.120 கோடி

எக்ஸ்பிரஸ் பீஸ்  – ரூ.240 கோடி

உலகில் அதிக இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் சீனாவில்தான் – 80 கோடி.  இந்த எண்ணிக்கை வளர்ந்துகொண்டே வருகிறது. இதனால், அலிபாபா ஆன்லைன் சக்கரவர்த்தியாகும் காலம் கூப்பிடு தூரம்தான்.  சக்கைப்போடு போடுங்க ஜாக் மா, உங்க காட்டிலே மழை பெய்யுது!    

(குகை இன்னும் திறக்கும்) 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x