Published : 19 Nov 2018 11:51 AM
Last Updated : 19 Nov 2018 11:51 AM
ஜாக் மா வெற்றிக்குப் பல காரணங்கள்– தொலைநோக்குப் பார்வை, துணிச்சல், நண்பர்கள், வித்தியாசமான யுக்திகள்……..ஒன்றே ஒன்றை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டுமா? நண்பர்கள்! நட்பு என்பது ஒருவழிப் பாதையல்ல, இரு கைகளின் குலுக்கல். எதைச் செய்தாலும், அதில் நமக்கு என்ன ஆதாயம் கிடைக்கும் என்று மனக்கணக்குப் போடுவது மனித இயல்பு. ஜாக் மா இந்த வட்டத்துக்குள் சிக்கவில்லை. அவருக்கு ஆத்மார்த்த தோழர்கள் அமைந்தது இதனால்தான். அவர் சிறு வயதிலிருந்தே இதைப் பார்க்கலாம்.
ஒன்பதே வயது. வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் தங்கும் கோல்டன் மவுன்ட்டன் ஹோட்டலுக்கு வருகிறான். அவர்களிடம் கேட்கிறான், “நான் உங்கள் கைடாக வெஸ்ட் லேக் சுற்றிக் காட்டட்டுமா? ஃப்ரீ.”
ஆமாம், அவனுக்குத் தேவை பணமல்ல, ஆங்கிலப் பேச்சறிவு. இது தாராளமாகவே கிடைக்கிறது. அனைவருக்கும் அவனைப் பிடிக்கிறது. காரணம்? அவன் நேர்மை. மற்ற கைடுகள்போல் அவன் ரீல் விடவில்லை. ஏதாவது கேள்விக்குப் பதில் தெரியாவிட்டால். “சாரி. ஐ டோண்ட் நோ.”
இந்தச் சந்திப்புகளால் எத்தனை மாற்றங்கள்? “மா யுன்” என்பது பெற்றோர் வைத்த பெயர். உலகம் முழுக்க உச்சரிக்கச் சுலபமான ஜாக் மா என்னும் பெயர் வைத்தது, ஜோன்ஸ் என்னும் இங்கிலாந்துச் சுற்றுலாப்பயணிதான்.
பெயரை மாற்றியவர் இவர். வாழ்க்கையையே மாற்றியவர் ஆஸ்திரேலியாவின் கென் மார்லி. அவரிடம் மட்டுமல்ல, அவர் மனைவி ஜூடி, இரு மகன்கள் டேவிட், ஸ்டீஃபன், மகள் சூஸன் ஆகிய எல்லோர் இதயங்களிலும் அவன் இடம் பிடிக்கிறான். தங்கள் குடும்பத்தோடு வந்து ஒரு மாதம் தங்குமாறு கென் மார்லி அழைப்பு விடுக்கிறார்.
டிக்கெட் உட்பட அத்தனை செலவுகளும் அவர். வந்தவனைத் தங்கள் குடும்பத்தில் ஒருவனாக அன்பு காட்டுகிறார்கள். போகும் இடங்களுக்கெல்லாம் கூட்டிக்கொண்டு போய் நண்பர்களுக்கு அறிமுகம் செய்துவைக்கிறார்கள். அதிகம் தெரியாத நாடு, முற்றிலும் மாறுபட்ட கலாச்சாரம், ஏழ்மை - இந்தப் பின்புலங்கள் கொண்ட சிறுவனிடம் பாசம் காட்ட எத்தனை பரந்த மனம் வேண்டும்?
கென் மார்லி குடும்பத்தோடு சீனா வருகிறார். ஜாக் மா, காத்தி என்னும் பெண்ணைக் காதலிப்பதை அவன் வீட்டில் சொல்லிச் சம்மதம் வாங்கி, அவன் திருமணத்துக்குக் கிரியா ஊக்கியாகிறார். அவருக்குக் குடும்பத்தின் ஏழ்மை புரிகிறது. கல்லூரிப் படிப்புக்கான முழுச் செலவையும் தருகிறார். அலிபாபாவின் ஐ. பி ஓ. வரும்போது கென் மார்லி பங்குகள் வாங்கியிருந்தால், மகா கோடீஸ்வரர் ஆகியிருப்பார். வாங்கவில்லை. ஏனென்றால், இடதுசாரியான அவர் முதலாளித்துவ முயற்சியில் பங்கெடுக்கவும், பலன் பெறவும் விரும்பவில்லை. எத்தனை பெரிய மனிதர்!
ஜாக் மா செய்யும் கைம்மாறு - 1992 – இல் பிறக்கும் தன் முதல் மகனுக்கு* மா யுவான்கென் (Ma Yuankun) என்று பெயர் வைக்கிறார். “மா” அவர் பெயரிலிருந்து; “யுவான்” சீனப் பெயர்; “கென்.” 2017 – இல் ஆஸ்திரேலியாவிலிருக்கும் நியூகாசில் பல்கலைக் கழகத்துக்கு (Newcastle University) 20 மில்லியன் டாலர்கள் தருகிறார். மா - மார்லி ஸ்காலர்ஷிப் என்னும் பெயரில் ஏழை மாணவர்களுக்கு உதவிக்கரம். கென் மார்லிக்கு ஜாக் மாவின் நன்றி சல்யூட்.
*(ஜாக் மாவுக்கு மூன்று குழந்தைகள். மற்றவர்கள் பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை.)
கல்லூரிப் படிப்பை முடித்த ஜாக் மா ஹாங்ஸெள எலெக்ட்ரானிக் இன்ஜினீயரிங் இன்ஸ்டிடியூட்டில் ஆங்கில ஆசிரியராகிறார். மாதம் 20 டாலர்கள் சம்பளம். இந்த வருமானம் போதாததால், மாலைநேரங்களில் Young Mens’ Christian Association (YMCA) அமைப்பில் ஆங்கிலம், பன்னாட்டு வாணிபம் கற்பிக்கிறார். ஆசிரியர் – மாணவர்கள் என்பதைத் தாண்டிய உறவு.
நண்பர்களாகப் பழகுகிறார்கள். அவர்களோடு வம்படிக்கிறார், டீ குடிக்கிறார். அவர்கள் வீடுகளுக்குப் போய்ச் சீட்டு விளையாடுகிறார். இது மட்டுமா? வகுப்பில் ஒரு மாணவனுக்கும், மாணவிக்குமிடையே காதல் அரும்பியபோது. அவர்கள் பெற்றோரிடம் பேசிக் கல்யாணம் நடக்க உதவுகிறார்.
இதனால், மாணவர்கள் ஜாக் மா கேட்காமலே, ஓடிவந்து உதவுகிறார்கள். ஆசிரியர் வேலையை விடுகிறார். சிறிய முதலீட்டில் ஹாங்ஸெள ஹைபோ மொழிபெயர்ப்பு ஏஜென்சி என்னும் கம்பெனி தொடங்குகிறார். பழைய மாணவர்கள் நகரின் முக்கிய வீதிகளில் கம்பெனியின் விளம்பரப் பதாகைகள் ஏந்தி வலம் வருகிறார்கள். தங்கள் நண்பர்கள், உறவினர்களிடம் ஆர்டர்கள் சேகரிக்கிறார்கள். எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமலே. குறிப்பாக ஒரு முன்னாள் மாணவி, என்றும் நண்பி, எண்பது வயது ஜி பாட்டி, சைக்கிள் ஓட்டிக்கொண்டு கம்பெனி, கம்பெனியாக போய் ஆர்டர் வாங்கிவருகிறார். நட்புக்காக!
1994. ஹாங்ஸெள எலெக்ட்ரானிக் இன்ஜினீயரிங் இன்ஸ்டிடியூட்டின் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் துறையில் பில் அஹோ அமெரிக்கப் பேராசிரியர். ஜாக் மாவின் நண்பர். இன்டர்நெட் என்னும் புதிய தொழில்நுட்பம் பற்றிச் சொல்கிறார். தன் எதிர்காலம் இன்டர்நெட்டில் இருக்கவேண்டும் என்னும் கனவு விதை ஜாக் மா மனதில் விழுகிறது.
அடுத்த வாய்ப்புக் கதவு திறக்கிறது. மொழிபெயர்ப்பு வேலைக்காக ஜாக் மா அமெரிக்கா போகிறார். அங்கே இன்டர்நெட் பிசினஸ் நடத்தும் பில் அஹோவின் மருமகன் ஸ்டூவர்ட் டிரஸ்ட்டி தரும் தொழில்நுட்ப பலத்தில், ஜாக் மா, 1995 – ஆம் ஆண்டு, ஸஸாங் ஹைபோ இன்டர்நெட் டெக்னாலஜி கம்பெனி தொடங்குகிறார்.
நண்பர்கள் அத்தனைபேரும் அன்றாடங்காய்ச்சிகள். ஆனாலும், அவர் மேல் வைத்த நம்பிக்கையால், தங்களால் முடிந்த பண உதவி செய்கிறார்கள். பழைய மாணவர்கள் கணிசமான ஆர்டர்கள் வாங்கித்தருகிறார்கள். ஆனாலும், செலவுகளைச் சமாளிக்க முடியவில்லை. கடலலை மேல் காகித ஓடமாய்த் தள்ளாட்டம். West Lake Network என்னும் நிறுவனத்தோடு கூட்டுச் சேருகிறார். கூட்டாளிகள் ஏமாற்றுகிறார்கள். தான் தொடங்கிய கம்பெனியிலிருந்தே ராஜினாமா செய்து வெளியேறுகிறார்.
வேலைக்குப் போகவேண்டிய கட்டாயம், சீன அரசின் வெளிநாட்டு வர்த்தக அமைச்சகத்தின் இ- காமர்ஸ் பிரிவான இன்ஃபோஷேர் என்னும் நிறுவனத்தில் தலைமை நிர்வாகியாகச் சேருகிறார்.
எட்டு நண்பர்களும் தங்கள் வேலையை விடுகிறார்கள். இன்ஃபோஷேரில் சேர்கிறார்கள். சீன அரசு இந்த கம்பெனியில் அதிக ஆர்வம் காட்டவில்லை. எனவே, 1999 – இல், வேலையை விட்டுச் சொந்த ஆன்லைன் கம்பெனி (அலிபாபா) தொடங்க முடிவெடுக்கிறார்.
வாழ்வில் இது திருப்புமுனைத் தருணம். சாதாரண மனிதன் தன்னைப்பற்றி மட்டுமே கவலைப்படும் நேரம். ஜாக் மா வித்தியாசம் காட்டுகிறார். அவர்களை நட்டாற்றில் விட்டுப்போக விரும்பவில்லை. அவர்களுக்கு மூன்று பாதைகள் காட்டுகிறார் – அதிகச் சம்பளத்தில் சீன யாஹூவில் அவரே சிபாரிசு செய்து வேலை வாங்கித் தருவார்; இரண்டாம் வழி, ஸினா, ஷூ, நெட் ஈஸ் போன்ற சீன ஆன்லைன் கம்பெனிகளில் நல்ல சம்பளத்தோடு சேரலாம்; மூன்றாம் வழி, தான் தொடங்கும் புது பிசினஸில் கூட்டாளியாக. மற்ற கம்பெனிகள் 2,000 யான்கள் ஊதியம் தருவார்கள். இங்கே வெறும் 800 யான்களே.
பேசி முடித்த பத்தாம் நிமிடம். எட்டுப்பேரின் ஒருமித்த குரல், “நாங்கள் உங்களோடு வருகிறோம்.” வேலையை விட்டார்கள். வந்தார்கள். வருங்காலத்தைத் அவரிடம் ஒப்படைக்கும் நம்பிக்கை!
பணத்தைவிட நட்புக்கும், உறவுக்கும் மதிப்புத் தருபவர் ஜாக் மா. நினைத்துப் பாருங்கள். புதிய பிசினஸ் தொடங்க நமக்கு இப்படி ஒரு நல்ல ஐடியா கிடைத்தால் அதன் பலனை நாமும் நம் குடும்பமும் மட்டுமே அறுவடை செய்ய நினைப்போம். தேவையான முதலீடு கையில் இல்லாவிட்டால் மட்டுமே, ஓரிருவரை உடன் சேர்த்துக்கொள்வோம். இதில் பல பிரச்சினைகள்.
ஏனென்றால், மூன்று கூட்டாளிகள் இருந்தாலே, முப்பது வித்தியாசக் கருத்துகள் வரும். இவை விரிசலாகும், பிசினஸுக்கே உலை வைக்கும். ஜாக் மா என்ன செய்கிறார்? 16 நெருங்கிய நண்பர்களிடம் தன் பிசினஸை விளக்குகிறார். இதுவரை, பிசினஸில் தோல்விகளை மட்டுமே சந்தித்திருப்பவர் அவர். ஆனால், மனவி காத்தியும், இன்னும் 17 பேரும் கை கோர்க்கிறார்கள். வாழ்நாள் சேமிப்பு முழுக்கப் போடுகிறார்கள். இருதரப்பிலும், நட்பைத் தாண்டிய ஏதோ ஒரு பிணைப்பு!
ஆரம்ப நாட்கள். அலிபாபாவில் முதலீட்டுக் கையிருப்பு கரைந்துகொண்டே வருகிறது. ஹாங்காங்கில் நிதி ஆலோசகராக இருக்கும் கூட்டா என்னும் இந்திய நண்பர் சாஃப்ட்பேங்க் அதிபர், துணிகர முதலீட்டாளர் மாஸா –வோடு சந்திப்புக்கு ஏற்பாடு செய்கிறார். மாஸாவுக்கும் ஜாக் மாவுக்கும் முதல் பார்வையிலேயே பிடிக்கிறது. ஆற்றில் போட்டால்கூட அளந்துபோடும் மாஸா, ஜாக் மா கேட்காமலேயே 20 மில்லியன் டாலர்கள் தருகிறார்.
இதேபோல் இன்னொரு ஆச்சரியம் 2005 –ஆம் ஆண்டிலும். யாஹூ அதிபர் ஜெர்ரி யாங் அலிபாபாவில் 1 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்கிறார். இதற்குக் காரணம், அலிபாபாவின் வியாபார வளர்ச்சி மட்டுமல்ல, ஜெர்ரி யாங்குக்கு ஜாக் மாவோடு இருந்த தனிப்பட்ட தோழமை. இந்த 1 பில்லியனை 13 வருடங்களில் 73 பில்லியன்களாக உயர்த்தியிருப்பது ஜாக் மா இந்த நம்பிக்கைக்குக் காட்டியிருக்கும் மரியாதை.
இன்று ஜாக் மா உலகக் கோடீஸ்வரர்களில் 20 – ஆம் இடத்தில் இருப்பவர். ஆனால், மாதம் 20 டாலர்கள் சம்பளம் வாங்கிய 1994 – இன் ஆங்கில ஆசிரியராகவே மனதளவில் இன்னும் இருக்கிறார். ஒவ்வொரு சனி ஞாயிறும், நண்பர்களையும், பழைய மாணவர்களையும் வீட்டுக்கு அழைக்கிறார். 40 – க்கும் அதிகமானோர். சீட்டாட்டம், செஸ், அரட்டை என வீடே அதிர்கிறது. மனிதர் மாறவேயில்லை!
(குகை இன்னும் திறக்கும்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT