Published : 15 Oct 2018 11:00 AM
Last Updated : 15 Oct 2018 11:00 AM
சீன யாஹூவை அலிபாபாவுடன் இணைப்பது பற்றி ஜெர்ரி யாங் சீன ஊழியர்களுடன் பேசவேயில்லை. பரம ரகசியமாக வைத்திருந்தார். அவர்களால் ஏதாவது பிரச்சினை வருமோ என்னும் பயம். பொது அறிவிப்பு செய்தபோதுதான் அவர்களுக்குத் தெரிந்தது. தங்கள் கம்பெனி பற்றியே தெரியாமல் இருட்டில் வைக்கப்பட்ட அதிர்ச்சி. அவர்கள் ரத்த அழுத்தம் எகிறியது. கொதித்த ரத்தத்தைக் குளிரவைக்க ஜாக் மா யாஹூ சீனாவின் தலைமை அலுவலகம் போனார்.
“சில சட்டக் கட்டுப்பாடுகளால் அலிபாபா – யாஹூ இணைப்பு பற்றி நான் உங்களுக்கு முன்னரேதான் தெரிவிக்க முடியவில்லை. இதற்கு என் ஆழ்ந்த வருத்தங்கள். உங்கள் செயல்பாடு பற்றித் தெரிந்துகொள்ள எனக்கு ஒரு வருடம் தாருங்கள். நாம் எல்லோரும் சேர்ந்து சுமுகமாகப் பணியாற்றுவோம்.”
2005 – இல், சீன இன்டர்நெட் பயன்படுத்துவோரில் பைடு தான் முதல் இடம். 37 சதவிகிதம் பேர் பயன்படுத்தினார்கள்; 32 சதவிகிதத்தோடு இரண்டாம் இடத்தில் யாஹூ; மூன்றாம் இடத்தில் 19 சதவிகிதத்தோடு கூகுள். மீதி 12 சதவிகிதத்தைப் பங்கு போட்டவர்கள் பலர். தன் முக்கிய எதிரி பைடு என்று ஜாக் மா கணக்குப் போட்டார். இந்தப் போருக்கு அவர் கையில் எடுத்த ஆயுதம் மார்க்கெட்டிங். யாஹூ சீனாவை மக்கள் மனங்களில் பதியவைத்துவிட்டால், வெற்றிக்கனி யாஹூ கைகளில் என்று நினைத்தார்.
அலிபாபாவின் விளம்பரப் புயல் அடிக்கத் தொடங்கியது. சீனாவின் மூன்று டாப் சினிமா இயக்குநர்களோடு பேசினார். ஆளுக்கு ஒரு விளம்பரப் படம் தயாரிக்கச் சொன்னார். ஒவ்வொருவருக்கும் ஊதியம் ஒரு மில்லியன் டாலர்கள்.
யாஹூ சீன இசைப்போட்டிகளை ஸ்பான்சர் செய்தது. முன்னணி பாப் பாடகர்கள் பங்கேற்றார்கள். பணம் தண்ணீராய் ஓடியது. ஈ பேயோடு நடந்த போரில் அவர்கள் விளம்பரங்களில் காசைக் கரியாக்குவதாக விமரிசித்த அதே ஜாக் மாவா இப்படிச் செலவிடுகிறார் என்று அவரோடு நெருக்கமானவர்களுக்கே அதிர்ச்சி.
ஆறு மாதங்கள் ஓடின. யாஹுவைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தேய்ந்துகொண்டே வந்தது. காலை ஊன்றிக் கொண்டிருந்தவர்கள் கூகுள். முக்கிய காரணம், அவர்களுடைய நவீனத் தொழில் நுட்பம், தேடுபொறியின் வேகம். போர்ட்டர் எரிஸ்மேன், ஜான் பாட்டெலி (John Battelle) எழுதிய ஸெர்ச் (Search) என்னும் புத்தகம் படித்தார். கூகுளின் வெற்றி ரகசியங்களை விளக்கும் புத்தகம். ஜாக் மாவிடம் வந்தார், சொன்னார், “ஜாக், இந்தப் புத்தகம் அருமையாக இருக்கிறது. யாஹுவை நிர்வகிக்க இது உதவும்.”
ஜாக் மா பதில், “இதேபோல் ஈ பே வந்தபோதும், ஒருவர் என்னிடம் ஈ பே பற்றிய புத்தகம் தந்தார். நான் படிக்கவில்லை. படித்தால், நம்மை அறியாமலே அவர்களைக் காப்பி அடித்துவிடுவோம். ஆகவே, கூகுளின் யுக்தி பற்றி நான் தெரிந்துகொள்ள விரும்பவில்லை.”
போர்ட்டருக்கு அதிர்ச்சி. எதைப் பார்த்தாலும், கேட்டாலும், ஆழமாகத் துருவித் துருவிப் பார்க்கும் ஜாக் மாவா பேசுகிறார்?
யாஹூ உயர் அதிகாரிகள் கூட்டம். சரியும் வாடிக்கையாளர் எண்ணிக்கையை எப்படி உயர்த்தலாம் என்று விவாதங்கள். தொழில்நுட்பத்தை மேம்படுத்தவேண்டும், அதில் கணிசமான முதலீடு செய்ய வேண்டும் என்று சாஃப்ட்வேர் வல்லுநர்கள் வாதிட்டார்கள். அவர்கள் எடுத்துவைத்த காரணங்கள் - கூகுள் தேடுதல் வேகத்தில் முந்திக்கொண்டிருக்கிறது. சீன ஸெர்ச் நிறுவனமான பைடு, கூகுளின் தொழில்நுட்பத்தை முன்மாதிரியாக வைத்துத் தொடர்ந்து முன்னேற்றங்கள் செய்து வருகிறார்கள். வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பது வேகம், வேகம். இதை நாம் தரவேண்டும்.
ஜாக் மா அனைத்தையும் கேட்டார். தன் கருத்தைச் சொன்னார்.
“வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகமாக்க, அவர்களுக்குச் சுகானுபவம் தரவேண்டும். நம் தேடுபொறி பயனர் தோழமை கொண்டது (User-friendly) என்னும் பிம்பத்தை அவர்கள் மனங்களில் உருவாக்க வேண்டும். இதற்கு வழி, தொழில்நுட்ப முன்னேற்றமல்ல, மார்க்கெட்டிங்.”
திறந்த மனத்தோடு ஜாக் மா தங்கள் கருத்துகளைக் கேட்கவில்லை என்பதை சாஃப்ட்வேர் வல்லுநர்கள் உணர்ந்தார்கள். இது நிஜம்தான். மனிதர்களுக்கு வாழ்க்கையில் தோல்விகள் மட்டுமல்ல, வெற்றிகளும் சுமைதான். அலிபாபா ஒரு ஆன்
லைன் மார்க்கெட்டிங் கம்பெனி. இங்கே கஸ்டமர்களை ஈர்க்க பிம்ப உருவாக்கல் முக்கியம். இதற்கான வழி மார்க்கெட்டிங். அலிபாபாவில் இந்த யுக்தி மாபெரும் வளர்ச்சியைத் தந்தது. யாஹூவின் தேடுதல் வித்தியாசமானது, தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டது, இதில் மார்க்கெட்டிங்குக்கு இரண்டாம் இடம்தான் என்பதை உணர்ந்துகொள்ள ஜாக் மாவின் அலிபாபா வெற்றி தடுத்தது. கடிவாளம் பூட்டிய மார்க்கெட்டிங் குதிரையாகிவிட்டார். இதனால்தான், சாஃப்ட்வேர் வல்லுநர்களின் நியாயமான கோரிக்கையை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. யாஹு ஊழியர்கள் ஜாக் மா தலைமையில் நம்பிக்கை இழந்தார்கள்.
யாஹூவின் முன்னாள் கூட்டாளியான 3721 நெட்வொர்க் சாஃப்ட்வேர் கம்பெனி முதலாளி ஜோஹாங்யி, யாஹூவிலிருந்து வெளியேறி, ஹ்யூ.காம் (Qihoo.com) என்னும் கம்பெனி தொடங்கியிருந்தார். இவருக்கு யாஹூவைப் பழிவாங்கும் வெறி. ஏராளமான ஊழியர்களைத் தன் வசம் இழுத்துக்கொண்டார்.
கஸ்டமர்கள் எண்ணிக்கை அதிகமாகத் தொடங்கியது. இப்போது வைத்தார் ஒரு வேட்டு. ஹ்யூ.காம் பயன்படுத்துபவர்கள் யாஹூவுக்குள் நுழையமுடியாதபடி சாஃப்ட்வேர் தடையை அறிமுகம் செய்தார். ஹ்யூகாம் வளர, வளர, யாஹூ தேய்ந்துகொண்டிருந்தது.
ஏனோ, ஹ்யூ.காம் போட்டியைத் தன்மானப் பிரச்சினையாக ஜாக் மா எடுத்துக்கொண்டார். ஏ.கே. 47 என்னும் செல்லப் பெயர் கொண்ட ஜோ ஹாங்யி ஒரு சண்டைக் கோழி. வம்புச் சண்டையை இழுப்பவர். வரும் சண்டையை விடுவாரா? இருவருக்குமிடையே வாக்குவாதங்கள் தொடங்கின. இவர் அறிக்கைவிட, அவர் மறுப்புத் தர….தகராறு நீதிமன்றத்துக்குப் போனது. ஜாக் மாவின் கவனம் சிதறியது. ஹ்யூகாமும், பைடுவும், கூகுளும் இதில் வெயில் காய்ந்தார்கள். நஷ்டம் யாஹூவுக்கு மட்டும்தான்.
ஜாக் மாவின் கால்கள் யாஹூ படுகுழியில் புதைந்துகொண்டிருந்தபோது, அவர் தலை விண்ணில். அலிபாபாவும், டாபாவும் ஆன்லைன் விற்பனையில் ராக்கெட் வேக வளர்ச்சி. 2007 – இல் சீனப் பொருளாதாரத்தில் வரலாறு காணாத 14 சதவிகித உயர்வு. 2008 – ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பீஜிங் நகரில் 29 – வது ஒலிம்பிக்ஸ்.
நாடே இதற்கான மும்முர ஏற்பாடுகளில். பல லட்சக்கணக்கான பயணிகளின் வருகை வியாபார வாய்ப்புகளை எகிறச் செய்யும் என்கிற எதிர்பார்ப்பு. சீனா முழுக்க உற்சாகம். கம்பெனிப் பங்குகளைச் சந்தையில் கொண்டுவர இதைவிடச் சிறந்த நேரம் கிடைக்காது. டாபா படுவேகமாக வளர்ந்துகொண்டிருந்த போதிலும், லாபம் வரவில்லை. ஆகவே, அலிபாபாவுக்கு மட்டும் ஐ.பி.ஓ. என ஜாக் மா முடிவெடுத்தார். தேர்ந்தெடுத்த பங்குச் சந்தை, ஹாங்காங்.
நவம்பர் 5, 2007. அலிபாபாவின் 86 கோடிப் பங்குகள், கம்பெனியின் 17 சதவிகிதம், விற்பனைக்கு வந்தன. ஆரம்ப விலை ஒரு பங்குக்கு 13. 50 ஹாங்காங் டாலர்கள். தள்ளுமுள்ளு வரவேற்பு. 257 மடங்கு அதிக விண்ணப்பங்கள் (Over-subscription). முதலீடு 1.9 பில்லியன் டாலர்கள் குவிந்தது. முதல் நாள் சந்தை முடிவில், விலை சுமார் மூன்று மடங்கு உயர்ந்து 39.50 ஹாங்காங் டாலர்களைத் தொட்டது.
2004 – இல் கூகுளின் ஐ.பி.ஓ – வுக்குப் பிறகு அதிக வெற்றி கண்டது அலிபாபாவின் ஐ.பி.ஓ. தான். நிருபர்கள் ஜாக் மாவை மொய்த்தார்கள். அவர் மனநிலை எப்படி இருக்கிறது என்று கேட்டார்கள். அவர் பதில், ‘‘அலிபாபா எடுத்துவைக்கும் முக்கிய முதல் அடி இது; சீன இன்டர்நெட் பிசினஸுக்கு அசுரத் தாவல். ஐ.பி.ஓ. என்பது பெட்ரோல் பங்கில் காரை நிறுத்திப் பெட்ரோல் நிரப்புவது போல. இது முக்கிய மைல்கல். ஆனால் இறுதி இலக்கல்ல. நாங்கள் வெகுதூரம் பயணித்திருக்கிறோம். இன்னும் போகவேண்டிய தூரம் எவ்வளவோ இருக்கிறது?”
ஐ.பி.ஓ. மாபெரும் வெற்றி கண்டதில் ஜாக் மாவின் சந்தோஷத்துக்கு இன்னொரு காரணம் உண்டு. அலிபாபாவின் பங்குகளில் 10 சதவிகிதம் ஊழியர்களுக்காக ஒதுக்கியிருந்தார்கள். ‘‘கடந்த எட்டு வருடங்களாக உயிரைக் கொடுத்து உழைத்த அவர்களில் பெரும்பாலானோர் இப்போது கோடீஸ்வரர்கள். ஜாக் மா அவர்கள் கூட்டத்தில் சொன்னார்,”நீங்கள் குடும்பத்தோடு செலவிடும் நேரத்திலெல்லாம், சொந்த வாழ்க்கையைத் தியாகம் செய்து கம்பெனிக்காக உழைத்திருக்கிறீர்கள்.
குடும்பத்துக்குக் கைம்மாறு செய்ய வேண்டிய நேரமிது. நீங்கள் வீடு வாங்கவேண்டும், கார் வாங்கவேண்டும், திருமணம் செய்துகொள்ள வேண்டும், குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும். அலிபாபாவின் பங்குகளில் ஒரு பகுதியை விற்று இந்த ஆசைகளை நிறைவேற்றுங்கள்.”
தங்கள் நலனில் தலைவருக்கு இத்தனை அக்கறையா? ஊழியர்கள் நெஞ்சில் ஜாக் மா இன்னும் உயர்ந்தார். ஐ.பி.ஓ. முடிந்தவுடன், ஜாக் மா தன் நண்பர் ஒருவரிடம் கேட்டார்,‘‘இங்கிருந்து நாம் எங்கே போகப் போகிறோம்?”
பதிலும் அவருக்குத்தான் தெரியும். அவர் மனம் முணுமுணுத்த பதில், நேருஜிக்குப் பிடித்த, அவர் மேசையில் இருந்த, ராபர்ட் ஃப்ராஸ்ட் (Robert Frost) என்னும் அமெரிக்கக் கவிஞரின் வரிகளாக இருந்திருக்குமோ?
The woods are lovely, dark and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.
(காடுகள் அழகானவை, இருண்டவை, அடர்த்தியானவை. ஆனால், நான் நிறைவேற்றவேண்டிய வாக்குறுதிகள் பாக்கி இருக்கின்றன. தூங்கும் முன்னால், நான் போகவேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.)
(குகை இன்னும் திறக்கும்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT