Published : 01 Oct 2018 11:11 AM
Last Updated : 01 Oct 2018 11:11 AM
மார்ச் 2005. ஜெர்ரி யாங்கிடமிருந்து அழைப்பு - அமெரிக்கக் கலிபோர்னிய மாகாணம் பெபிள் பீச் (Pebble Beach) என்னும் இடத்தில் Digital China Forum நடக்கிறது. இது முக்கியமான இன்டர்நெட் மாநாடு. வாருங்கள். நாம் சந்திப்போம்.
ஜாக் மா நட்பை மதிப்பவர். தான் முகவரி இல்லாமல் இருந்தபோதே, தன்னிடம் அன்பு காட்டிய ஜெர்ரி யாங்குக்கு அவர் மனதில் தனி இடம் உண்டு. உடனே சம்மதித்தார். இருவர் சந்திப்பு. மனம்விட்டுப் பேசினார்கள். தங்கள் பிசினஸ் பிரச்சினைகளையும், சவால்களையும் பகிர்ந்துகொண்டார்கள்.
நெருக்கம் இறுக்கமானது. ஏழு வருடத்துக்கு முந்தைய சந்திப்பும், இருவரும் சீனர்கள் என்பதும் மட்டுமல்ல இதற்குக் காரணம். இருவருக்கும் மாஸா நெருங்கிய நண்பர். யாஹூ ஜப்பானிலும், அலிபாபாவிலும் துணிகர முதலீடு செய்திருந்தார். யாஹூ பற்றி ஜாக் மாவிடமும், அலிபாபா பற்றி ஜெர்ரி யாங்கிடமும் உயர்வாகப் பேசுவார். இதனால், அவர்களுக்குள் பரஸ்பர மரியாதை.
இத்தோடு, ஈ பே மேல் ஜாக் மா கண்ட வெற்றி அவர் தலையில் ஒரு ஒளி வட்டம் வைத்திருந்தது. ஆனால், இந்தச் சந்திப்பை இரு நண்பர்களின் உரையாடலாக மட்டுமே ஜெர்ரி யாங் வைத்துக்கொண்டார். இரு கம்பெனிகளும் சீனாவில் கை கோர்ப்பது பற்றி மூச்சே விடவில்லை. ஜாக் மாவை ஆழம் பார்க்கவும் அவர் இந்தச் சந்திப்பைக் கேட்டிருக்கலாம்.
ஜாக் மாவும் தன் எண்ணங்களை வெளிப்படுத்தவில்லை. ஆனால், இந்தச் சந்திப்பு அவர் மனதில் பல அலைகளை எழுப்பியது. அலிபாபா, டாபா ஆகிய இரு கம்பெனிகளும் ஈடு
பட்டிருப்பது ஆன்லைன் வர்த்தகத்தில். இதற்குத் “தேடுதல்” அத்தியாவசியம். அவர் பிற கம்பெனிகளின் தேடுபொறியைப் பயன்படுத்திக்கொண்டிருந்தார். யாஹூவோடு சேர்ந்தால் சொந்தத் தேடுபொறி. வருங்கால வளர்ச்சிக்குத் தூணாக இருக்கும். 2004 -இல் அலிபாபா அலி பே (AliPay) என்னும் டிஜிட்டல் பேமென்ட் சேவை தொடங்கியிருந்தார்கள்.
அலிபாபா, டாபா, அலி பே ஆகியவற்றை நீரூற்றி வளர்க்க ஏராளமான பணம் தேவை. அதே சமயம், அமெரிக்காவிலும், சீனாவிலும் யாஹூ சந்திக்கும் பிரச்சினைகளால், அவர்கள் தன்னிடம் வந்தேயாகவேண்டிய கட்டாயம். தேடிவரும் வாய்ப்பை நழுவவிடக்கூடாது. அதே சமயம், அதிக ஈடுபாடும் காட்டக்கூடாது. காய்களைக் கவனமாக நகர்த்தவேண்டும். ஜெர்ரி யாங் திறமையான ராஜதந்திரி. அதே சமயம் நேர்மையானவர். ஆகவே, இது சரியான போட்டி.
இரண்டு வாரங்கள் ஓடின. அமெரிக்காவின் ஃபார்ச்சூன் பத்திரிகை 1995 முதல், ஒவ்வொரு ஆண்டும் Fortune Global Forum என்னும் மாநாடு நடத்துகிறார்கள். உலக பிசினஸ் தலை
வர்களும், பொருளாதார மேதைகளும் சந்திக்கும் இடம். 2005 – ஆம் ஆண்டில் சீனத் தலைநகர் பீஜிங் நகரத்தில் நடந்தது. ஜெர்ரி யாங் வந்தார். ஜாக் மாவைச் சந்தித்தார். இந்த முறை, சீனாவில் இரு நிறுவனங்களும் எப்படி இணைந்து செயலாற்றலாம் என்னும் பேச்சு வார்த்தைகள் தொடங்கின.
அடுத்த சந்திப்பு சான் பிரான்சிஸ்கோ நகரத்தில். அவர்களின் பேச்சு வார்த்தை மாலையில் தொடங்கியது. நள்ளிரவு வரை தொடர்ந்தது. பின்னாட்களில் ஜாக் மா சொன்னார், ”ஜெர்ரி யாங் பேசப் பேச, நான் உணர்ச்சிவசப்பட்டேன். யாஹூவோடு கூட்டுச் சேருமாறு சொன்னார். நான் சம்மதிக்காவிட்டால், உலகளவில் யாஹூவே தகர்ந்துவிடும் என்பது எனக்குப் புரிந்தது. யாஹூவைத் தெய்வமாக மதிக்கும் என்னால் இதைக் கற்பனை செய்து பார்க்கக்கூட முடியவில்லை. என்னால் இயன்றதைச் செய்ய முடிவெடுத்தேன்.”
ஆமாம், இது ஜாக் மாவின் அறிவு எடுத்த முடிவல்ல, இதயம் எடுத்த முடிவு.
இன்னும் பல பேச்சுவார்த்தைச் சுற்றுகள். ஜெர்ரி யாங் அலிபாபாவில் ஒரு பில்லியன் (நூறு கோடி) டாலர்கள் முதலீடு செய்ய முடிவெடுத்தார். அவர் எடுத்தது பெரிய ரிஸ்க். ஏனென்றால், அப்போது அலிபாபா, டாபா ஆகிய இரு நிறுவனங்களின் மொத்த ஆண்டு வருமானம் 4 பில்லியன். எவ்வளவு லாபம்? நோ லாபம். நஷ்டம். ஜெர்ரி யாங் முடிவு தவறானது என்று நிதியுலக மேதைகள் சொன்னார்கள்.
அவர் தெளிவாக இருந்தார். எடுத்தேன், கவிழ்த்தேன் என்று அவர் இந்தத் தீர்மானத்துக்கு வரவில்லை. ஆராய்ச்சிகள், அலசல்கள், ஆழமான சிந்தனை. விளக்கினார்,``இது பெரிய ரிஸ்க்தான். ஆனால், ஜாக் மாவின் தீர்க்கதரிசனத்தைப் புரிந்தவர்களுக்கு இந்த டீலின் மதிப்பு தெரியும்.”
இந்த டீலின்படி, ஜாக் மா யாஹுவுக்கு அலிபாபாவில் 40 சதவிகித உரிமை தந்தார்; சாஃப்ட் பேங்க் 30 சதவிகிதம்; ஜாக் மாவுக்கும் சகாக்களுக்கும் 30 சதவிகிதம்.
அலிபாபாவைப் பொறுத்தவரை, ஒரு பில்லியன் டாலர் தேடிவந்த புதையல். யாஹூவின் தேடுபொறி உலக அரங்கில் போட்டியிட உதவும் பிரம்மாஸ்திரம். இத்தகைய வாய்ப்புகள் வரும்போது தங்கள் அடிப்படைக் கொள்கைகள் இவற்றுக்குத் தடையாக இருந்தால், தொழில் முனைவர்கள் கொள்கைகளைக் காற்றில் பறக்கவிடத் தயங்கமாட்டார்கள். அவர்களின் நேர்மைக்கும், கொள்கைப் பிடிப்புக்கும் இது அக்னிப் பரீட்சை. ஜாக் மா தன் வித்தியாசத்தை நிரூபித்தார்.
ஜெர்ரி யாங் பணம் போடுவதற்கு இரண்டு நிபந்தனைகள் விதித்தார் – ஒன்று, இரு கம்பெனிகளின் இணைப்பாக அறிவிக்கக்கூடாது. யாஹூ அலிபாபாவை வாங்குவதாகச் சொல்லவேண்டும். இரண்டாவது, சீன பிசினஸை அலிபாபாவும், யாஹூவும் சேர்ந்து நிர்வகிக்க வேண்டும். ஜாக் மா இரு நிபந்தனைகளையும் மறுத்துவிட்டார். யாஹூ பின்வாங்குவதாக மிரட்டினார்கள். நம் பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சவில்லை. பணக்கார எலியின் வாலாக இருப்பதைவிட, பட்டினிச் சிங்கத்தின் தலையாக இருக்கும் தன்மானம் அவருக்கு முக்கியம். யாஹூ பின்வாங்கினார்கள்.
ஆகஸ்ட் 11, 2005. பீஜிங் நகரத்தின் ஆடம்பர சீனா வேர்ல்ட் ஹோட்டல். மாநாட்டு அறை. அரசியல், இன்டர்நெட் உலகப் பிரபலங்கள். ஜாக் மா மனதில் மகிழ்ச்சி, பேச்சில் நகைச்சுவை.
“இன்று சீனாவின் காதலர் தினம் (Valentine’s Day) போன்ற கொண்டாட்டம். நாங்கள் இருவரும் பொருத்தமான ஜோடி.”
பேச்சின் முடிவில் ஒரு நக்கல். ஈ பே – யின் சி. இ. ஓ – வுக்கு நன்றி சொன்னார், “தாங்க் யூ மெக் விட்மேன். உங்களால்தான் இது சாத்தியமானது.”
இந்தக் கூட்டத்தில், அலிபாபாவை யாஹூ வாங்குகிறார்களா அல்லது யாஹூவை அலிபாபாவா என்று அறிவிக்கவேயில்லை. யாஹுவின் பொதுஜன பிம்பத்தைக் கெடுக்க விரும்பாத ஜாக் மாவின் பண்பு இது. அதே சமயம், அவர் யாஹூவின் நிபந்தனைகளுக்கு இணங்காததற்குக் காரணம் வெறும் பிடிவாதமல்ல என்பது ஜெர்ரி யாங்குக்குச் சீக்கிரமே தெரிந்தது.
இந்த இணைப்புக்கு அரசு சம்மதம் தரவேண்டும். இது தொடர்பாக ஜாக் மா கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளூர்ச் செயலாளர் வாங் கோப்பிங் (Wang Guoping) என்பவரைச் சந்தித்தார். அவர் கேட்ட முதல் கேள்வி, ``மா, எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. அலிபாபா யாஹூவை வாங்கியதா அல்லது யாஹூ உங்களை வாங்கினார்களா?”
இரண்டாம் பதிலாக இருந்தால், அரசாங்கம் அனுமதி தரத் தயங்கும் என்று ஜாக் மாவுக்குத் தெரியும். யாஹூவின் நிபந்தனைக்கு அவர் சம்மதிக்காதற்கும் இந்தத் தொலைநோக்குத்தான் காரணம். அரசின் சந்தேகத்தை முளையிலேயே கிள்ளினார்.
“மிஸ்டர் வாங், அலிபாபாதான் யாஹூ சீனாவை வாங்கியிருக்கிறோம். நிர்வாகம் முழுக்க முழுக்க எங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். இன்னும் சில முக்கிய சமாச்சாரங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். ஒன்று, புதிய நிறுவனத்தின் தலைமைச் செயலகம் நம் ஹாங்ஸெள நகரத்தில்தான். இரண்டு, எங்கள் ஒப்பந்தப்படி, கம்பெனி இயக்குநர்களில் ஒருவர் சீனாவிலிருந்து தான் தேர்ந்தெடுக்கப்படுவார்.
மூன்றாவதாக, யாஹூ ஒரு பில்லியன் டாலர்கள் அலிபாபாவில், அதாவது, சீனாவில் முதலீடு செய்கிறார்கள். இதனால், நம் நகரத்தில் வேலை வாய்ப்புகள் பெருகும். சீக்கிரமே, ஹாங்ஸெள சீனாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு* ஆகும்.”
சிலிக்கான் பள்ளத்தாக்கு (Silicon Valley) என்பது அமெரிக்காவில் கலிபோர்னிய மாநிலத்தின் ஒரு பகுதியைக் குறிக்கும். இது புவியியல் பெயரல்ல. இங்கே சிலிக்கான் சில்லு (Silicon Chip) பற்றிய ஆய்வுகள் அதிகம் நிகழ்ந்ததால், 1971 முதல் இந்தப் பெயரால் அழைக்கப்படுகிறது. ஆப்பிள், கூகுள், யாஹூ போன்ற முன்னணி எலெக்ட்ரானிக் தொழில்
நுட்ப நிறுவனங்களின் பிறப்பிடம் இந்தப் பள்ளத்தாக்குதான்.
வாங் கண்களுக்கு முன்னால் நாளைய ஹாங்ஸெள விரிந்தது. ‘Good, Good’ என்று ஆமோதித்துக்கொண்டே வந்தவர் திருவாய் மலர்ந்தார்.
“மா, உங்கள் முயற்சிக்கு இந்த அரசு முழு ஆதரவு தருகிறது. உங்களுக்கும், அலிபாபாவுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.”
அரசு அங்கீகார முத்திரை குத்திவிட்டது. அப்பாடா! ஜாக் மாவுக்கு நிம்மதி.
தன் நிம்மதி சீக்கிரமே குலையப்போகிறது என்று அப்போது அவருக்குத் தெரியாது. பணம் ஒரு தேன்கூடு. செல்வம் கொட்டும் அந்த இடத்தில் தேனீக்களின் கொடுக்குகளும் கொட்டும். யாஹூ தந்த ஒரு பில்லியன் டாலர்கள் கையில். இதோ, அலிபாபாவை நோக்கிப் பாய்ந்து வருகின்றன பிரச்சினைத் தேனீக்கள்.
(குகை இன்னும் திறக்கும்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT