Published : 16 Aug 2014 12:00 AM
Last Updated : 16 Aug 2014 12:00 AM

தொழில் ரகசியம்: ஐந்திருந்தால் அஞ்சேல்!

`Thriving on Chaos’. `த்தோடா, இங்கிலிஷ்ல பேசறாரு பீட்டரு’ என்கிறீர்களா. பீட்டர்தான். நான் இல்லை. இதைச் சொன்னவர். பெயர் ‘டாம் பீட்டர்ஸ்’!

`த்ரைவிங் ஆன் கேயாஸ்’ என்கிற புத்தகத்தின் ஆசிரியர். வேகமாக மாறி வரும் பிசினஸ் உலகம் கேயாஸ் (குழப்பங்கள்) நிறைந்தது என்கிறார். பிசினஸ் என்பது குழப்பங்கள் கொண்ட, கசமுசா நிறைந்த, புரிந்துகொள்ள முடியாத ஒரு புதைகுழியான அல்லோல கல்லோலம் என்கிறார்.

புதிய பொருள்வகைகள் பிறந்த வண்ணம் இருக்கின்றன. நாளொரு பிராண்ட் பொழுதொரு சப்-ப்ராண்ட் முளைத்தபடி உள்ளன. கலகலவென்று லோக்கல் போட்டி பத்தாது என்று லகலகவென்று மல்டினேஷனல் மல்யுத்தம் வேறு. மாறிவரும் வாடிக்கையாளர்கள், பெருகி வரும் தேவைகள் ஒரு பக்கம். புதிய டெக்னாலஜியால் வழக்கொழிந்து போகும் பிராண்டுகள் மறுபக்கம். அதோடு ஆடித் தள்ளுபடி, ஆன்லைன் ஆஃபர் என்ற கழுத்தறுப்பு. இது போறாதென்று இத்தனை கமிஷன் கொடு என்று முரண்டு பிடிக்கும் டிஸ்ட்ரிப்யூட்டர்கள் இம்சை.

சரி விளம்பரம் கொடுத்து சமாளிக்கலாம் என்றால் ஆயிரத்தெட்டு டீவி சேனல்கள், பத்திரிகைகள், எஃப்எம் ரேடியோக்கள். மலைக்கவைக்கும் விளம்பரச் செலவுகள். இந்த கூச்சலும், குழப்பங்களும், கூத்துகளும் நிறைந்த வியாபார உலகம் கேயாஸ்தானே.

இதில் எப்படி பிசினஸ் செய்து கொழிப் பது? காட்டுக் கத்தலுக்கிடையில் எப்படி கடை விரித்துக் கரையேறுவது?

கேயாஸை மறந்து பிசினஸ் செய்வது மடத்தனம். பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டுவிடாது. அதே போல் கேயாஸை அடக்கி தொழில் செய்ய முயல்வதும் முட்டாள்தனம். நம் சக்திக்குட்படாத கேயாஸை சாதிக்க நினைப்பது மடமை. கழுத்தறுக்கும் கேயாஸ் எப்படி என்று பார்த்து அதற்கேற்ப தொழில் செய்ய முயல்வதும் மூடத்தனம். அப்படி செய்தால் உத்திகள் ரீயாக்டிவாகத் தான் இருக்கும். கேயாஸ் சொல்பேச்சு கேட்டு தான் ஆடவேண்டி வரும்.

பிசினஸில் சிறக்க சிறந்த வழி கேயாஸ் மீது வளர்வது. கேயாஸ் மீதே கொழிப்பது. அது முதல் அடி எடுப்பதற்குள் உத்தியை ப்ரொஆக்டிவாக ரெடியாய் வைத்திருப்பது. அது தான் ‘த்ரைவிங் ஆன் கேயாஸ்’ என்கிறார் பீட்டர்ஸ்.

இதற்குத் தேவை நிர்வாகப் புரட்சி, பிசினஸ் ரெவல்யூஷன், மார்க்கெட்டிங் போராட்டம். தொழிலின் ஒவ்வொரு அம்சத்தையும் கேள்வி கேளுங்கள். பிசினஸின் எல்லா அம்சங்களிலும் புதுமையை புகுத்துங்கள். கேயாஸ் மீது உங்கள் பிசினஸ்.

கொழித்து வளர ப்ரொஆக்டிவாக நிர்வாகம் நடத்துங்கள். கீழேயுள்ள பஞ்ச பூதங்களை கொஞ்சினால் கேயாஸிடம் அஞ்சத் தேவையில்லை!

1. வாடிக்கையாளரை மானசீகமாக காதலியுங்கள்

அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்வதை பூஜை புனஸ்காரம்போல் பயபக்தியுடன் செய்யவேண்டியது கேயாஸ் உலகின் கட்டாயம். ஏசி ஆபிஸில் காலாட்டியவாறே கம்ப்யூட்டரை கட்டிக்கொண்டு அழாமல் வாடிக்கையாளர்களை தேடிப் போய் பேசுங்கள். அவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேளுங்கள். தரமான பொருளைத் தராமல், தாறுமாறான சர்வீஸை தந்தால் வாடிக்கையாளர் சாமியாடி, சாட்டையடி கொடுப்பார். தெய்வ குத்தமாகிவிடும்.

ஒரு சின்ன டெஸ்ட்: டவுன்பஸ்ஸில் கடைசியாக எப்பொழுது பயணம் செய்தீர்கள். ரொம்ப நாள் ஆகிவிட்டதா? சாதாரண மக்களின் வீடேறிதான் பேசவில்லை, அட்லீஸ்ட் அவர்களோடு பயணிக்கக்கூட மனமில்லையா? அவர்களை எப்படி உணர்ந்து கொள்வதாக உத்தேசம்? அவர்களை எப்படி புரிந்துகொள்வதாக ப்ளான்?

2. புதுமைகளை மனமுவந்து புகுத்துங்கள்

பிசினஸ் முழுவதும் புதுமைகள் புகுத்துவதை ஒரு ஜுர வேகத்துடன் செய்யுங்கள். நேற்று பெய்த மழையில் முளைக்கும் காளான்கள் உங்களை காணாமால் ஆக்கும் கேயாஸ் உலகமிது. யூனிலீவரின் ‘ஏக்ஸ்’ டியோடரண்ட் நம்பர் ஒன் ஸ்தானத்தில் மமதையுடன் மல்லாக்க படுத்திருக்க, நேற்று முளைத்த ‘ஃபாக்’ டியோடரண்ட் ‘மற்றது போலில்லாமல் எங்களை ஆயிரம் முறை பயன்படுத்தலாம்’ என்று கூறி ஏக்ஸை பாக்ஸ் செய்துவிட்டதை நினைவில் வையுங்கள்.

மற்ற பொருள்வகைகளிலிருந்து காப்பியடித்தாவது புதுமைகளை புகுத்துங்கள். மார்க்கெட்டிங்கிற்கு தனி டீம் அமையுங்கள். முடிந்தால் மார்க்கெட்டிங் ஆலோசகரை அமர்த்திக்கொள்ளுங்கள். ’நானே ஒரு மார்க்கெட்டிங் எக்ஸ்பர்ட்’ தான் என்று நீங்களே சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

உங்களிடம் ஒரு கேள்வி: பெருமைப்படத்தக்க வகையில் கடந்த மூன்று மாதங்களில் நீங்கள் செய்த புதுமை என்ன? எதுவும் இல்லையென்றால் புதுமை விரும்பி என்று இன்னொரு முறை சொல்லிக்கொள்ளாதீர்கள்.

3. வேலையாட்களை பார்ட்னர்களாக பாவியுங்கள்

கேயாஸ் உலகில் உங்களுக்கு பக்கபலமாக இருக்கப்போவது உங்கள் பணியாளர்கள்தான். அவர்களை பார்ட்னர்களாக பாவியுங்கள். செஸ் போர்டில் ராஜா, ராணி, குதிரை, பிஷப் இருந்தாலும் முன் நின்று போரிடுவது சிப்பாய்களே. அவர்களுக்கு ஊக்கமளியுங்கள். உற்சாகப்படுத்துங்கள். ஊக்கத் தொகை கொடுங்கள்.

1989ல் இந்திய டீமோடு பாகிஸ்தான் செல்கிறான் ஒரு பதினாறு வயது சிறுவன். முதல் டெஸ்ட்டின் முந்தின இரவு டீம் காப்டன் கிருஷ்ணமாச்சாரி காந்த் அவனை தனியே அழைத்து, ‘ஆடப்போவது பாகிஸ்தானிடம் என்று பயப்படாதே. உன் திறமை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என்ன ஆனாலும் நான்கு டெஸ்டிலும் நீ ஆடுவாய். உன்னை ட்ராப் செய்யமாட்டேன். அதனால் தைரியமாக ஆடு’ என்றார். உத்வேகம் அளிக்கப்பட்டு ஆடிய அந்த சிறுவன்தான் பிற்காலத்தில் உலகையே தன் பேட்டின் காலடியில் கிடத்திய சச்சின் டெண்டுல்கர். உங்கள் டீமை அதுபோல் எப்படி உற்சாகப்படுத்தப் போகிறீர்கள்?

4. மாற்றத்தை ஏற்படுத்தும் லீடராக மாறுங்கள்

கவிஞர் கண்ணதாசன் சொன்னார், ‘தன்னை தானும் அறிந்துகொண்டு ஊருக்கு சொல்பவன் தலைவன்’. உங்களை புரிந்துகொண்டு உங்கள் கம்பெனிக்கும் விஷனை உருவாக் குங்கள். இலக்கை நிர்ணயித்து அதை நோக்கிச் செல்ல உங்கள் டீமிற்கு அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுங்கள். கம்பெனி முழுவதும் பர பரப்பை உண்டாக்குங்கள். போதும் என்கிற மனதை புதைத்தெறியுங்கள். லீடராய் லட்சணமாய் உங்கள் டீமிற்கு நீங்களே ஒரு எடுத்துக்காட்டாக இருங்கள்.

1983 உலகக் கோப்பையில் ஐந்து விக்கெட் இழந்து 17 ரன்களே எடுத்து நிர்கதியாய் இந்திய அணி நிற்க உள்ளே நுழைந்த கேப்டன் கபில் தேவ் தனி ஆளாக 175 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றியடைச் செய்து ‘பார்த் தீர்களா, நினைத்

தால் முடியாததில்லை’ என்று அவர் களை உற்சாகப்படுத்தி கோப்பையை கைப்பற்றினார். உங்கள் டீமிற்கு நீங்கள் எப்படி எடுத்துக்காட்டாக இருப்பதாக உத்தேசம்?

5. கம்பெனியை வலுவுள்ளதாக மாற்றுங்கள்

வெறும் கையில் முழம் போட்டால் கை சிராய்த்து ரத்தம்தான் வரும். கம்பெனிக்குத் தேவையான சப்போர்ட் சிஸ்டங்களை உருவாக்குங்கள். 5% வளரணும், 6% போதும் என்று நினைத்தால் கேயாஸின் கோர பிடியில் சிக்கி சின்னாபின்னமாக வேண்டியதுதான். அபரிமிதமான வளர்ச்சிக்கு அங்குலம் கூட குறைக்காதீர்கள். அதற்கு என்ன தேவையோ அதற்கு ஒரு படி மேலேயே செய்யுங்கள்.

குண்டு சட்டியில் குதிரை ஓட்டாதீர்கள். பரந்து விரிந்த உலகம் முழுவதும் உங்கள் மார்க்கெட். சிறகை விரியுங்கள். சேல்ஸ்மென்னை கூட்டுங்கள். சூப்பர்வைசர்களை நியமியுங்கள். வருடத்திற்கு ஒரு முறையாவது அவர்கள் திறனுக்கு புதிய ரத்தம் என்னும் பயிற்சியைப் பாய்ச்சுங்கள்.

இந்த பஞ்ச பூதங்களையும் கொஞ்சம் கூட பஞ்சமில்லாமல் கொஞ்சினால் சக்ஸஸ் மட்டுமே மிஞ்சும். ஒன்று புரிந்துகொள்ளுங்கள். கேயாஸிடம் சிக்கி தூள் தூளாய் போவதும் கேயாஸ் மீதே ஏறி தூள் கிளப்புவதும் உங்கள் கையில்தான் இருக்கிறது.

satheeshkrishnamurthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x