Published : 24 Aug 2018 12:07 PM
Last Updated : 24 Aug 2018 12:07 PM
திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள அணையில் ஒரு பகுதி உடைந்ததால் காவிரி டெல்டா மாவட்டங்களில் நிகழாண்டில் சம்பா நெல் சாகுபடிக்கு முழு அளவில் தண்ணீர் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
காவிரி ஆற்றில் வரும் தண்ணீரைக் கொண்டு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரி பாசனப் பகுதியில் 4.93 லட்சம் ஏக்கர், வெண்ணாறு பாசனப் பகுதியில் 4.96 லட்சம் ஏக்கர்,கல்லணைக் கால்வாய் பாசனப் பகுதியில் 2.27 லட்சம் ஏக்கர் என மொத்தம் 12.16 லட்சம் ஏக்கர் விளைநிலம் பாசனம் பெறுகிறது. இவற்றில் சம்பா பருவத்தில் மட்டும் ஏறத்தாழ 9 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி நடைபெறும்.
இந்த ஆண்டு மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டியதால், டெல்டா மாவட்டங்களில் முழு அளவுக்கு சம்பா மற்றும் தாளடி நெல்சாகுபடி நடைபெறும் என்ற நம்பிக்கையுடன் விவசாயிகள் இருக்கின்றனர்.
இந்நிலையில் மேட்டூர் அணை நீரும், அமராவதி, பவானி ஆறுகளின் உபரி நீரும் அகண்ட காவிரியில் இணைந்து வந்து திருச்சி மாவட்டம் முக்கொம்பில் காவிரி மற்றும் கொள்ளிடம் என 2 ஆறுகளாக பிரிகின்றன. இந்த இடத்தில் 182 ஆண்டுகளுக்கு முன்னர் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையில் 9 மதகுகள் நேற்று முன்தினம் இரவுமுற்றிலுமாக இடிந்து சேதமடைந்தன. இதனால் அகண்ட காவிரியில் வரும் தண்ணீரை கொள்ளிடம் ஆற்றில் தேக்கி அதை காவிரியில் திருப்பி விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆறுகள் மற்றும் பாசன வாய்க்கால்கள் மற்றும் கல்லணையில் இருந்து பிரியும் காவிரி, வெண்ணாறு மற்றும் கல்லணைக் கால்வாய்கள் வழியாக காவிரி பாசனப் பகுதிகளுக்கு முழு அளவுக்கு தண்ணீரை கொண்டு சேர்க்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ஆறுபாதி கல்யாணம் கூறியது: முக்கொம்
பில் கொள்ளிடம் அணை உடைந்தது துரதிருஷ்டவசமானது. வெண்ணெய் திரண்டு வரும்போது பானை உடைந்த கதையாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. வரும் பிப்ரவரி மாதம் வரையில் டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்துக்கு தண்ணீர் தேவை என்ற நிலையில், உடைந்த கொள்ளிடம் அணையை விரைந்து சீரமைத்து விட்டு, மேட்டூர் அணையில் நீர்நிறுத்தப்படும் காலத்தில் உரிய முறையில் திட்டமிட்டு, நிரந்தரத் தீர்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், தற்காலிக சீரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள ராணுவத்தின் உதவியை தமிழக அரசு நாடி, போர்க்கால அடிப்படையில் இந்த பணிகளை முடிக்க வேண்டும். இல்லையெனில் மேட்டூர் அணையில் இருந்து விடுவிக்கப்படும் நீரில் பெரும்பகுதி கொள்ளிடம் ஆற்றிலேயே வீணாகும் வாய்ப்பு உருவாகும். இதனால் காவிரி பாசனப் பகுதிகளுக்கு முழு அளவில் தண்ணீர் கிடைப்பதில் பெரும் பின்னடைவு ஏற்படும்.
6 ஆண்டுகளாக வறட்சியால் முழுஅளவில் சாகுபடி நடைபெறாதநிலையில், இந்த ஆண்டு நீர் இருந்தும் சாகுபடியை மேற்கொள்ள இயலாத சூழல் உருவாவதை தடுப்பதில் அரசு முனைப்பு காட்ட வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT