Published : 27 Aug 2014 10:00 AM
Last Updated : 27 Aug 2014 10:00 AM

70,000 வங்கிக்கணக்குகள் புதிய திட்டத்தின் கீழ் தொடங்கப்படும்

அனைவருக்கும் வங்கிச்சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா என்னும் புதிய திட்டத்தை பிரதமர் மோடி கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி அறிவித்தார்.

இந்த திட்டத்தின் தொடக்க நாள் அன்று சுமார் 70,000 வங்கிக்கணக்குகள் தொடங்கப் படும் என்று நிதிச்சேவைகள் பிரிவு செயலாளர் ஜிஎஸ்.சாந்து தெரிவித்தார். அனைத்து வங்கிகளும் இந்த திட்டத்துக்கான ஆரம்பகட்ட வேலைகளை ஆரம்பித்துவிட்டன. ஆகஸ்ட் 28ம் தேதி 60,000 முதல் 70,000 வங்கி கணக்குகள் வரை தொடங்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக சாந்து தெரிவித்தார்.

பொதுத்துறை வங்கிகள் மட்டுமல்லாமல் தனியார் வங்கிகளிலும் இந்த கணக்குகள் தொடங்கப்படும் என மேலும் அவர் கூறினார்.

2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் 7.5 கோடி கணக்குகள் என்பதை இலக்காக கொண்டு இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்ததிட்டத்தில் 5,000 ரூபாய் ஓவர் டிராப்ட் (ஆதார் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு) வசதி, டெபிட் கார்டு வசதி, ஒரு லட்ச ரூபாய்க்கு விபத்து காப்பீட்டு பாலிசி உள்ளிட்ட வசதிகள் இருக்கும்.

இதற்கு முந்தைய அரசு கொண்டுவந்த திட்டத்துடன் சேர்த்து இப்போது சில வசதிகள் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன. இதற்கு முன்பு நகர்புறத்தில் இருப்பவர்களுக்கு முக்கியத் துவம் கொடுக்கப்படவில்லை. இந்த திட்டம் ஐந்து நிலைகளில் செயல்படுத்தப்படும்.

தற்போதைய நிலையில் 42 சதவீத இந்தியர்களுக்கு வங்கிக்கணக்குள் இல்லை. அவர்கள் தங்களது கடன் தேவைகளுக்காக மற்ற தனிநபர்களையோ அல்லது அதிக வட்டி வசூலிப்பவர்களையோ நாட வேண்டி இருக்கிறது. தற்போதைய நிலையில் இந்தியாவில் 1,15,082 வங்கிக் கிளைகள் இருக்கின்றன.

1,60,05 ஏடிஎம். மையங்கள் இந்தியாவில் இருக்கின்றன. வங்கிக்கிளைகளில் 38.2 சதவீத (43,962) வங்கிக்கிளைகள் கிராம புறங்களில் இருக்கின்றன. ஏ.டி.எம்.களில் 14.58 சதவீத (23,334) ஏடிஎம்கள் மட்டுமே கிராமப் புறங்களில் இருக்கின்றன. இந்த திட்டத்தின் முதல் பகுதி இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி அடுத்த வருட ஆகஸ்டில் முடிவடைகிறது.

இரண்டாம் பகுதி 2015 முதல் 2018ம் ஆண்டு வரை நடைபெறும். அப்போது மைக்ரோ இன்ஷூரன்ஸ் மற்றும் பென்ஷன் திட்டங்களும் இடம் பெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x