Published : 31 Jul 2018 09:18 AM
Last Updated : 31 Jul 2018 09:18 AM
லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக, ஈரோடு மஞ்சள் சந்தைக்கு வரத்து வெகுவாக குறைந்திருந்த நிலையில், அடுத்தடுத்த நாட்களில் மஞ்சள் வரத்து அதிகரிக்கும் என வணிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பெருந்துறை மற்றும் ஈரோடு ஒழுங்கு முறை விற்பனைக்கூடம், ஈரோடு மற்றும் கோபி கூட்டுறவு சங்கங்களின் சார்பில் வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளிக் கிழமை வரை மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது. ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருச்சி, பெரம்பலூர், தேனி, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் இச்சந்தை மூலமாக தங்களது மஞ்சளை விற்பனை செய்து வருகின்றனர். தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகள் இச்சந்தைக்கு நேரடியாக வந்து மஞ்சளைக் கொள்முதல் செய்கின்றனர்.
கடந்த வாரம் நாடு முழுவதும் லாரி உரிமை யாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், கொள்முதல் செய்யப்பட்ட மஞ்சளை வியா பாரிகள் வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், மஞ்சள் கிடங்குகள் முடங்கின. மஞ்சள் விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு, வியாபாரிகள் உடனடியாக பணம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் 27-ம் தேதி இரவு லாரிகள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்ததால், மஞ்சள் சந்தை வழக்கம்போல் செயல்படத் தொடங்கியுள்ளது.
லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக மஞ்சள் விலையில் சிறிய அளவு மாற்றம் ஏற்பட்டது. லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கிய ஜூலை 20-ம் தேதியன்று விரலி மஞ்சள் குவிண்டாலுக்கு அதிகபட்சமாக ரூ.8200-க்கும், கிழங்கு மஞ்சள் குவிண்டால் ரூ.7569 வரையிலும் விற்பனையானது.
லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்கி ஒரு வாரம் ஆன நிலையில், 27-ம் தேதியன்று விரலி மஞ்சள் விலை குவிண்டாலுக்கு அதிகபட்சமாக ரூ.8688 வரை விற்பனையானது. கிழங்கு மஞ்சள் விலை குவிண்டாலுக்கு அதிகபட்சமாக ரூ.7499-க்கு விற்பனையானது. இந்த காலகட்டத்தில் விரலி மஞ்சளின் விலை குவிண்டாலுக்கு சராசரியாக ரூ.450 உயர்ந்த நிலையில், கிழங்கு மஞ்சள் விலையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில் நேற்றைய மஞ்சள் சந்தையில் விரலி மஞ்சள் அதிகபட்சமாக குவிண்டாலுக்கு ரூ.8396-க்கும், கிழங்கு மஞ்சள் ரூ.7519-க்கும் விற்பனையானது.
கடந்த 20-ம் தேதி பெருந்துறை மற்றும் ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மற்றும் ஈரோடு கூட்டுறவு சங்கத்திற்கு 3706 மூட்டை மஞ்சள் விற்பனைக்கு வந்தன. இவற்றில் 2677 மூட்டை மஞ்சள் விற்பனையானது. லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் ஆன நிலையில் ஜூலை 27-ம் தேதியன்று 1953 மூட்டை மஞ்சள் வரத்து இருந்தது. இதில், 1162 மூட்டை மஞ்சள் மட்டுமே விற்பனையானது. நேற்றைய (30-ம் தேதி) சந்தையில் 1297மூட்டை மஞ்சள் வரத்து இருந்த நிலையில், 807 மூட்டை மஞ்சள் மட்டுமே விற்பனையானது.
இதுகுறித்து மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சின்னசாமி கூறும்போது, லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக சந்தையில் கொள்முதல் செய்யப்பட்ட மஞ்சளை வெளியிடங்களுக்கு அனுப்ப முடியவில்லை. இதனால் ரூ.10 கோடி மதிப்பிலான மஞ்சள் தேக்கமடைந்தது. வெள்ளிக்கிழமை (27-ம் தேதி) இரவு லாரிகள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தவுடன் கிடங்கில் இருந்த மஞ்சள் வெளியிடங்களுக்கு அனுப்பும் பணியைத் தொடங்கி விட்டோம்.
லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்ந்து இருந்தால், 30-ம் தேதி (நேற்று) முதல் ஏலத்தை புறக்கணிக்கலாம் என முடிவு செய்து இருந்தோம். வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்ததால் சந்தை வழக்கம் போல் செயல்படத் தொடங்கியுள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT