Published : 26 Apr 2014 10:00 AM
Last Updated : 26 Apr 2014 10:00 AM

வங்கிச் சேவையில் இன்னமும் பல பணிகள் மீதமுள்ளன: ஓய்வுபெறும் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் கே.சி. சக்ரவர்த்தி கருத்து

அனைவருக்கும் வங்கிச் சேவை அளிப்பதில் இன்னமும் நிறைய பணிகள் மீதமுள்ளன என்று வெள்ளிக்கிழமை பணியிலிருந்து ஓய்வு பெறும் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் கே.சி. சக்ரவர்த்தி தெரிவித்தார்.

வர்த்தக வங்கியில் தனது பணியைத் தொடங்கி ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் பதவி வரை உயர்ந்தவர் சக்ரவர்த்தி. தனது மனதில் பட்ட கருத்துகளை விருப்பு, வெறுப்பின்றி வெளிப்படையாக பேசும் பழக்கம் உடையவர். இந்த ஆண்டு ஜூன் 30வரை இவரது நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் இருந்தபோதிலும் தான் ஓய்வு பெறப்போவதாக கடந்த மாதமே அறிவித்தார். சொந்த காரணங்களால்தான் ஓய்வு பெறும் முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.

அனைவருக்கும் வங்கிச் சேவை சென்றடைய வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக செயல்பட்டவர். அடமான சொத்துகளை மீட்பதற்கு முன்கூட்டியே பணம் செலுத்தினால் வங்கிகள் விதிக்கும் அபராத தொகையை ரத்து செய்தவர். அத்துடன் சமூகத்தில் நலிவடைந்த மக்கள் வாழும் பகுதிகளில் வங்கிக் கிளைகளைத் தொடங்குமாறு பொதுத்துறை வங்கிகளுக்கு உத்தரவிட்டவர். வங்கிக் கிளைகளே இல்லாத பகுதிகளில் வங்கிக் கிளைகள் தொடங்க முன் முயற்சி எடுத்தவர் என்ற பல பெருமைகளுக்குரியவர்.

``வங்கித்துறையில் இதுவரை நான் செய்த பணிகள் எனக்கு மன நிறைவைத் தருகின்றன. அதனாலேயே நான் நினைத்த அனைத்து விஷயங்களையும் நிறைவேற்றி விட்டேன்,’’ என்று கூற முடியாது. என்று சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். வங்கிச் சேவையில் கீழ்நிலையில் இன்னமும் பல நிறைவேற்ற வேண்டிய பணிகள் பாக்கியுள்ளன. இந்த விஷயத்தில் வங்கிகள் செல்லவேண்டிய தூரம் மிக அதிகம். நமது சமூகத்தில் வங்கிச் சேவை கிடைக்காத மக்கள் இன்னமும் பலர் உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

வங்கித் துறையில் பல்வேறு முன் முயற்சிகளை எடுக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்தபோதிலும் வங்கிகள் நிறைவேற்ற வேண்டிய பணிகள் ஏராளம். குறிப்பாக அனைவருக்குமான வங்கிச் சேவை கிடைக்கச் செய்தபிறகு அதில் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் அதிகரிக்கவே`````````````````யில்லை. அதேபோல இவர்களுக்கு வங்கிகள் மூலமாக கிடைக்கும் கடன் கிடைக்கவில்லை. இதனாலேயே கடன் வழங்கும் அளவும் உயரவில்லை. இது உயர்ந்தால்தான் வர்த்தக ரீதியில் வங்கிச் சேவை லாபகரமானதாக அமையும் என்றார் சக்ரவர்த்தி.

2009-ம் ஆண்டு ரிசர்வ் வங்கியில் சேர்ந்த சக்ரவர்த்தி, கரன்சி நிர்வாகம், நிதி ஸ்திரத்தன்மை, வாடிக்கையாளர் சேவை, கிராமப்புற கடன் வசதி, மனிதவள நிர்வாகம், சேமிப்பு மூலமான காப்பீடு, தகவல் அறியும் உரிமை உள்ளிட்ட பிரிவுகளைக் கவனித்துவந்தார். நிதி ஸ்திரத்தன்மை வாரியத்தில் ரிசர்வ் வங்கியின் பிரதிநிதியாக இவர் செயல்பட்டுவந்தார். இந்த வாரியம் சர்வதேச அமைப்பாகும்.

சேமிப்புக் கணக்கு பரிவர்த்தனையை எளிமையாக்க 3.5 லட்சம் தொடு கணினி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 20 கோடி சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டன. இதுவே மிகப் பெரிய சாதனை என்று சக்ரவர்த்தி குறிப்பிட்டார்.

நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவதற்கு போதுமான முயற்சிகளை எடுத்தபோதிலும் அதற்குரிய பலன் கிடைக்கவில்லை. இருப்பினும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு முந்தைய ஆர்பிஐ கவர்னர் டி. சுப்பாராவ் மற்றும் இப்போதைய கவர்னர் ரகுராம் ராஜன் ஆகியோர் அளித்த முழு ஒத்துழைப்பே காரணம் என்றார்.

கடந்த 5 ஆண்டுகளில் ஒரு வங்கிகூட திவாலாகவில்லை. ஆனால் யுனைடெட் வங்கியின் வாராக் கடன் அதிகரிப்பு குறித்து விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மற்றபடி அந்த வங்கியின் செயல்பாடு குறித்து பயப்படத் தேவையில்லை என்றார் சக்ரவர்த்தி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x