Published : 24 Jul 2018 07:58 AM
Last Updated : 24 Jul 2018 07:58 AM

இன்று - ஜூலை 24 - வருமான வரி தினம்: இளைஞர்களை ஈர்க்கும் வருமான வரி துறை

தொடக்கத்தில் செல்வந்தர்கள் மற்றும் பிரிட்டி ஷார் மீது மட்டுமே வருமான வரி விதிக்கப்பட்டது. கடந்த நிதி ஆண்டு இறுதி நிலவரப்படி நாடு முழுவதும் நிரந்தரக் கணக்கு எண் (PAN) வைத்திருப்போர் எண்ணிக்கை 37.9 கோடி.

இதற்கு முந்தைய ஆண்டில் 35.94 கோடியாக இருந்தது. கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 2 கோடி பேர் புதிதாக பான் எண் பெற்று இருக்கிறார்கள். இவர்களில் தனி நபர்கள் மட்டும், 36.94 கோடி. (இந்து கூட்டுக் குடும்பங்களையும் சேர்த்தால் 37.19 கோடி) இதற்கு அடுத்த நிலைகளில் உள்ளவர்கள் - கூட்டு வியாபாரம் 41.09 லட்சம்; நிறுவனங்கள் 16.12 லட்சம்; அறக்கட்டளைகள் 7.67 லட்சம்.

வருமான வரி நடைமுறைக்கு வந்த 1860-ல் ரூ.30 லட்சம் வசூலானது. கடந்த நிதியாண்டின் வசூல் ரூ.10 லட்சம் கோடிக்கும் மேல். நிறுவன வரி (கார்ப்பரேட் வரி) ரூ.5,71,131 கோடி; தனிநபர் வருமான வரி ரூ.4,19,942 கோடி; பங்குகள் (செக்யூரிடீஸ்) பரிவர்த்தனை வரி ரூ.11,881 கோடி. ஆக மொத்தம் ரூ.10,02,954 கோடி.

நடப்பு நிதி ஆண்டுக்கான (2018-19) இலக்கு ரூ.11 லட்சத்து 50,000 கோடி. தென் இந்தியாவில் இலக்கு - தமிழ்நாடு (புதுச்சேரி உட்பட) ரூ.82,146 கோடி. கர்நாடகா (கோவா உட்பட) ரூ.1.23 லட்சம் கோடி. ஆந்திரா & தெலங்கானா - ரூ. 60,845 கோடி; கேரளா வெறும் ரூ.19,000 கோடி.

வருமான வரியைக் கொண்டு வருமானத்தை ஓரளவுக்கு கணக்கிடலாம்தனே? வணிகமும் தனிநபர் வருமானமும் கேரளாவில் எந்த அளவுக்குக் குறைவாக இருந்தால், ஆண்டுக்கு 19,000 கோடி மட்டுமே இலக்காக இருக்க முடியும்? அளவில் சிறிய மாநிலம். உண்மைதான். அதற்காக இத்தனை குறைவாகவா? இதற்கு நேர் எதிர் திசையில் கர்நாடகா. நிறுவன வரி, தனிநபர் வரி ஆகிய இரண்டுமே நம்மைவிட அதிகம் செலுத்துகிறார்கள். அது எப்படி?

தொழில் துறை சிறப்பாக செயல்படுகிறது. நிறுவனங்களும் தனி நபர்களும் அதிக வருமானம் ஈட்டுகிறார்கள். தமிழ்நாட்டில் குறை இல்லை. வரிக்கு உட்படாத துறைகள் மூலம் நமக்கு அதிக வருமானம் கிடைக்கிறது. அதனால், வருமான வரித் தொகை, குறைவாகத் தெரிகிறது.

பொதுவாக, தனி நபர் வரியைவிட நிறுவன வரி கூடுதலாக இருக்கும். ஆனால் உத்தரபிரதேசம் (மேற்கு), பிஹார், குஜராத், ஆந்திரா, ராஜஸ்தான், கேரளா ஆகிய மாநிலங்களில் நிறுவன வரி குறைவாகவும் தனிநபர் செலுத்தும் வரி அதிகமாகவும் இருக்கிறது. குஜராத், ஆந்திரா மாநிலங்களில் செல்வந்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதும், உ.பி., பிஹார், கேரளா ஆகிய மாநிலங்களில் தொழில் துறை பின்தங்கி இருப்பதும் காரணம் எனலாம்.

வங்கிகள், காப்பீட்டுத் துறைக்கு அடுத்ததாக, பெரும்பாலான பணிகள், கணினிமயமாக்கப்பட்ட துறைகளில், வருமான வரித் துறையும் ஒன்று. அநேகமாக இத்துறையின் எல்லாப் பிரிவுகளுமே, கணினி வழியாகவே செயல்படுகின்றன.

வரி செலுத்துவோர், தங்கள் பக்க கோரிக்கைகள், சான்றுகள், விளக்கங்கள், நியாயங்கள், சந்தேகங்கள் மற்றும் குறைகளை, ஆன்லைனில் பதிவு செய்யலாம். வருமான வரி அலுவலகத்துக்கு நேரில் வர வேண்டிய அவசியம் இல்லை. வரி செலுத்துவோரின் மனுக்கள், கணினியில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள், குறைகள் தீர்க்கப்படுகின்றனவா என்று தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

பிறிதொரு வகையிலும், வருமான வரித் துறை தனித்து விளங்குகிறது. தன்னுடைய மதிப்பீட்டு அதிகாரி (அசஸிங் ஆபிசர்) யார் என்பதை, வரி செலுத்துவோர் எளிதில் தெரிந்து கொள்ள முடியும். அவரையோ அவரது மேலதிகாரியையோ எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, நேரில் சந்தித்து முறையிட முடியும். ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும், வருமான வரி அலுவலகம் உள்ளது. அவ்வந்த மாவட்ட வரி செலுத்துவோர், அங்கேயே தங்களின் குறைகளைத் தீர்த்துக் கொள்ளலாம். சென்னை அல்லது டெல்லிக்கு செல்ல வேண்டிய தேவையே இல்லை.

காலத்தே உரிய வருமான வரி செலுத்துவதால், பல நன்மைகள் கிடைக்கின்றன. வருமான வரி, நேரடியாக அரசு கருவூலத்துக்கு சென்று சேர்கிற ‘நேரடி வரி’. அரசாங்கத்தின் திட்டங்கள் மூலமாக இந்தத் தொகை, நமது சமுதாயத்துக்கே திரும்ப வந்து சேர்கிறது. மறைமுக வரிக்கு (ஜிஎஸ்டி) ஈடாக, அல்லது அதையும் விஞ்சுகிற அளவுக்கு, மத்திய அரசுக் கருவூலத்துக்கு, மிகக் கணிசமான பங்களிப்பு நேரடி வரி மூலம் கிடைக்கிறது.

தாக்கல் செய்யப்பட்ட படிவங்களின் மீது மதிப்பீடு (அசஸ்மெண்ட்), முறையான வரிப் பிடித்தம் (டிடிஎஸ்) மீது கண்காணிப்பு, பணம் மற்றும் வணிக பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களை ஆராய்தல், வணிக நிறுவனங்களில் ஆய்வு, வரி ஏய்ப்பு சந்தேகத்தின் பேரில் சோதனை என்று பல வழிகளில், அரசுக்கு சேர வேண்டிய வரித் தொகையைக் கண்காணித்து, கண்டுபிடித்து கட்டச் செய்கிற பணியில், விழிப்புடன் செயலாற்றி வருகிறது வருமான வரித் துறை.

பட்டயக் கணக்காளர் (Chartered Accountants), ‘வருமான வரி முனைவோர்’ (Income Tax Practitioners) மற்றும் வரிப் படிவங்களை நிரப்பி, தாக்கல் செய்ய உதவுகிற ‘வரிப் படிவம் தயாரிப்போர்’ (Tax Return Preparers) என்று பல நிலைகளில், துறை சார்ந்த வேலை வாய்ப்புகளையும் உருவாக்கி வருகிறது. என்னதான் சிறப்பாக செயல்பட்டாலும், வருமான வரிப் படிவம் தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. வரித்தளத்தை விரிவுபடுத்தும் (widening the tax base) நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ‘அவுட்ரீச்’ நிகழ்ச்சிகளில், வருமான வரித் துறை கவனம் செலுத்தி வருகிறது.

அந்தந்தப் பகுதி தொழில், வணிக, தன்னார்வ அமைப்புகள், வரித் துறையுடன் இணைந்து இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்தலாம். அவரவர் தேவைக்கு ஏற்ப, தகுந்த அலுவலர்களை, வரி செலுத்துவோரின் பகுதிகளுக்கே அனுப்பி வைக்கிறது வருமான வரித் துறை, இதுவும் அன்றி, பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று, வருமான வரி குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரமும் செய்கிறது. பள்ளிகள், கல்லூரிகள் விரும்பினால் மாணவர்களை, முன் அனுமதியுடன், வருமான வரி அலுவலகத்துக்கே அழைத்து வந்து, துறையின் செயல்பாடுகள் பற்றி அறியச் செய்யவும், மத்திய நேரடி வாரியம் அறிவுறுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் வருமான வரித் துறை, தனக்கு நிர்ணயிக்கப்பட்ட வசூல் இலக்கை எட்டுவதில், தொடர்ந்து சாதனை புரிந்து வருகிறது. இது மட்டுமல்ல. அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் உள்ள நலிவடைந்த பிரிவினருக்கு, போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்துதல், ‘சுனாமி’, வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர் காலங்களில், களத்துக்கே சென்று நிவாரணப் பணிகள் மேற்கொள்ளல், தமிழ்ப் பண்பாட்டை முன்னெடுக்கிற வகையில் திருக்குறள் பலகை, தமிழர் திருநாளை முன்னிட்டு பண்டைய தமிழ்க் கலைகளைச் சிறப்பித்தல், குறிப்பிட்ட கால இடைவெளியில், விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ், சிறப்புப் பணி நியமனம் தந்து, விளையாட்டுத் துறைக்கு உதவிக் கரம் நீட்டுதல் என தனித்து நின்று, செயல் திறனில் முன்னோடியாகத் திகழ்கிறது. அதனால்தான், மத்திய அரசின் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இளைஞர்களை ஈர்க்கிற, கனவுத் துறையாக உயர்ந்து நிற்கிறது, வளர்ச்சிக்கு வழிகாட்டுகிறது - வருமான வரித் துறை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x