Published : 12 Apr 2025 02:12 PM
Last Updated : 12 Apr 2025 02:12 PM

வீடுகள், வணிக நிறுவனங்களின் கூரை மீது செல்போன் டவர் அமைக்கலாமா?

திருநெல்வேலியில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணிபுரிபவருக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டது. பல மருத்துவர்களிடம் காண்பித்தும் முன்னேற்றம் இல்லை. இறுதியாக பேராசிரியைக்கு (அனீமியா) கடும் ரத்தசோகை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

பேராசிரியையிடம் அவரது பணியிடத்தில் கதிர்வீச்சு தன்மையுள்ள பொருட்கள் எதுவும் இருக்கிறதா என்று மருத்துவர் கேட்டுள்ளார். ஆனால், அப்படி எதுவும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். கதிர்வீச்சு தன்மை கொண்ட பொருட்களை வீட்டில் பயன்படுத்துகிறீர்களா என்று கேட்டபோது, அவரது வீட்டு படுக்கை அறைக்கு நேர் மேலாக மாடியில் 3 ஆண்டுகளுக்கு முன்பு செல்போன் டவர் அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதைக்கேட்ட மருத்துவருக்கு, பேராசிரியையின் உடல் நிலை பாதிப்புக்கான காரணம் புரிந்தது. ‘உடனடியாக செல்போன் டவரை அகற்றுங்கள். அதுதான் இந்நோய்க்கு ஒரே தீர்வு’ என மருத்துவர் தெரிவித்துள்ளார். ஆனால், குறிப்பிட்ட நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தப்படி இன்னும் சில ஆண்டுகள் இருப்பதால், செல்போன் டவரை அகற்றுவது சாத்தியமில்லாத நிலை.

இதனால், பேராசிரியை, தனது கணவருடன் சொந்த வீட்டை காலி செய்துவிட்டு, வாடகை வீட்டில் குடியேறியுள்ளார். அதன் பிறகு அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு பழைய நிலைக்கு வந்துள்ளார். செல்போன் டவரால் சிட்டுக் குருவிகளுக்கு ஆபத்தா, இல்லையா? என்ற சர்ச்சை தொடரும் நிலையில், பேராசிரியைக்கு ஏற்பட்ட பாதிப்பு கவனம் பெற்றுள்ளது.

இது தொடர்பாக, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற்று நோய் சிகிச்சை பிரிவில் பணிபுரியும் ஒரு பெண் மருத்துவரிடம் கேட்ட போது, ‘செல்போன்களை அதிக நேரம் மிக நெருக்ககமாக பயன்படுத்தும் போது மின்காந்த அலைகள் மற்றும் கதிரியக்கத்தால் பாதிப்பு ஏற்படுவதை மறுப்பதற்கில்லை. இதனால் தான், தூங்கும் போது தலைக்கு அருகில் செல்போனை வைக்கக் கூடாது என்று அறிவுறுத்துகின்றனர்.

பேஸ்மேக்கர் பொருத்தியவர்கள் தங்களது சட்டை பாக்கெட்டில் செல்போன்களை அதிக நேரம் வைப்பதை தவிர்க்க வேண்டும். மொபைல் போன் தொழில்நுட்பம், 'பேஸ்மேக்கருக்கு' பாதிப்பு ஏற்படுத்தலாம் என்பதே இதற்கு காரணம். கட்டிடங்களில் அமைக்கப்படும் செல்போன் கோபுரங்களால் அதன் கீழ் வசிக்கும் எத்தனை பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற புள்ளி விவரம் எதுவும் இதுவரை சேகரிக்கப்படவில்லை. ஒரு சிலருக்கு ஏற்பட்டு்ள்ள பாதிப்பை வைத்து மட்டும் இது சம்பந்தமாக முடிவுக்கு வர முடியாது.

செல்போன் கதிர்வீச்சானது, உடல் செல் திசுக்களை சூடாக்கும் என்று, அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. செல்போன் கோபுரங்களிலிருந்து வெளிப்படும் மின்காந்த அலைகளும், கதிரியக்கங்களும் மிகவும் அபாயகரமானவை. கர்ப்பிணிப் பெண்கள், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பெண்கள் ஆகியோர் இதனால் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம். ரத்தப் புற்றுநோய், தோல் புற்றுநோய், மலட்டுத்தன்மை, தலைவலி, ஞாபக மறதி, நரம்பியல் தொடர்பான பாதிப்புகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்றவை ஏற்படக்கூடும்.

அலைபேசி கோபுரங்களிலிருந்து 50 மீட்டர் முதல் 300 மீட்டர் தொலைவு வரை கதிரியக்கம் நிலவுவதை, மும்பை இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் (ஐஐடி) பேராசிரியர் கிருஷ்குமார், தகுந்த ஆதாரத்துடன் இந்திய தொலைத் தொடர்பு நிறுவனத்துக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக நிர்வாக இயக்குநர் (ஐஎஸ்எம்ஆர்) டாக்டர் எம்.வி.கோட்டா, செல்போன் கோபுரங்களுக்கு அருகில் வசிப்பது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

இந்திய தொலைத் தொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) விதிமுறைகளின்படி, செல்போன் கோபுரங்களை மக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து 400 மீட்டருக்கு அப்பால் மட்டுமே அமைக்க வேண்டும். ஆனால், எந்தவொரு நிறுவனமும் இந்த விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் இந்த அத்துமீறலை கண்டுகொள்வதில்லை..

செல்போன் கோபுரம் அமைக்க தொலைத்தொடர்பு அமைச்சகம், மாநில அரசு, மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து போன்ற அமைப்புகளிடம் முறையான அனுமதி பெற வேண்டும். தமிழ்நாட்டில் குடியிருப்பு பகுதிகள், கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், அலுவலகங்கள் போன்ற பகுதிகளில் விதிகளுக்கு புறம்பாக செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளதே பாதிப்பு ஏற்பட காரணமாக அமைந்துள்ளது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x