Published : 09 Apr 2025 04:49 PM
Last Updated : 09 Apr 2025 04:49 PM

நகைக்கடன் வழங்கலில் விரைவில் புதிய விதிமுறைகள் - ஆர்பிஐ அடுத்த அதிரடி திட்டம்

குறியீட்டுப் படம்

மும்பை: தங்க நகைக் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கான புதிய விதிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

தங்க நகைகளின் மீது கடன் வாங்குபவர்கள் தங்கள் கடன்களைப் புதுப்பித்தல், நீட்டித்தல், கூடுதல் பணம் பெறுதல் ஆகியவற்றில் புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்க நகைகளைக் கொண்டு கடன் வாங்குவது அதிகரித்துள்ள நிலையில், இந்த துறையில் ரிசர்வ் வங்கி தனது பிடியை இறுக்கும் என கூறப்படுகிறது.

மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, “இது தொடர்பான வரைவு வழிகாட்டுதல்கள் பொதுமக்களின் கருத்துகளுக்காக வெளியிடப்படுகின்றன,” என்று கூறியுள்ளார்.

வங்கிகள் மட்டுமல்லாது, தனியார் நிதி நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்கள் தங்க நகைக் கடன்களை வழங்கி வருகின்றன. வங்கிகள் மீது ரிசர்வ் வங்கிக்கு இருக்கும் கட்டுப்பாடு, இவற்றின் மீது கிடையாது. வரவிருக்கும் விதிமுறைகள் அனைத்து ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களிலும் கடன் வழங்கும் நடைமுறைகளை ஒன்றிணைப்பதாக இருக்கும்.

மேலும், அவற்றின் ஆபத்துக்களைத் தாங்கும் திறன்கள் கணக்கில் கொள்ளப்படும். தற்போது, ​​வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத கடன் வழங்குநர்களிடையே விதிகள் பரவலாக வேறுபடுகின்றன. புதிய கட்டமைப்பானது விவேகமான மற்றும் நடத்தை தொடர்பான அம்சங்களை பூர்த்தி செய்யும். முறையற்ற தங்க மதிப்பீடு, கேள்விக்குரிய ஏல நடைமுறைகள், சீரற்ற கடன் - மதிப்பு விகிதங்கள், தங்க சேமிப்பு மற்றும் எடையிடல் போன்ற பணிகளைக் கையாள ஃபின்டெக் முகவர்களைப் பயன்படுத்துவது போன்றவற்றில் விதிகள் கடுமையாக்கப்படும் என தெரிகிறது.

மேலும், கடுமையான காப்பீட்டு விதிமுறைகளை கட்டாயமாக்குவதன் மூலம் பாதிப்புகளை சரிசெய்வதே இதன் நோக்கம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடன் வாங்குபவர்களின் பின்னணி சோதனைகள், தங்க உரிமை சரிபார்ப்பு, மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்கள் மீதான கட்டுப்பாடுகள் ஆகியவை இதில் அடங்கும். தங்க கடன்களின் வளர்ச்சி மிகப் பெரிய அளவில் வளரந்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொள்ள உள்ளது. வங்கிகளின் தங்கக் கடன்கள் 2025 ஜனவரியில் ஆண்டுக்கு ஆண்டு 76% வளர்ந்துள்ளன. செப்டம்பர் 2024 முதல் மாதாந்திர வளர்ச்சி விகிதங்கள் 50%-ஐ தாண்டியுள்ளன.

இதனிடையே, ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பை அடுத்து, முக்கிய தங்க நகை கடன் வழங்குநர்களான முத்தூட் ஃபைனான்ஸ், ஐஐஎஃப்எல் ஃபைனான்ஸ் ஆகியவற்றின் பங்குகள் 9% வரை சரிந்துள்ளன.

முன்னதாக, வங்கிகளில் தங்க நகைக்கடன் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி ஏற்கெனவே வெளியிட்ட அறிவிப்பு, மக்களின் கடும் அதிருப்திக்கு உள்ளாகியிருப்பது கவனிக்கத்தக்கது. அதன் விவரம் > நகைக்கடன் விதிமுறை: மக்களுக்குச் சுமை ஆகலாமா?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x