Published : 08 Apr 2025 10:07 AM
Last Updated : 08 Apr 2025 10:07 AM
மும்பை: கறுப்புத் திங்கள் என வருணிக்கும் அளவுக்கு இந்திய பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்ட மறுநாளில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் வெகுவாக உயர்ந்து மீட்சி ஏற்பட்டுள்ளது முதலீட்டாளர்களுக்கு சற்றே நிம்மதியைத் தந்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (ஏப்.8) காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 1,283.75 புள்ளிகள் உயர்ந்து 74,421.65 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 415.95 புள்ளிகள் உயர்ந்து 22,577.55 ஆக இருந்தது. இந்த மீட்சிப் போக்கு தொடர்ந்துள்ளது.
உலக நாடுகள் தங்கள் நாடுகளின் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாகக் கூறி, பதிலுக்கு அந்த நாடுகளின் பொருட்களுக்கு அதே விகதத்தில் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருந்தார். இதற்கான பட்டியலை கடந்த 2-ம் தேதி வெளியிட்டார். இதற்கு பதிலடியாக அமெரிக்க பொருட்களுக்கான வரி விகிதத்தை மேலும் அதிகரிப்போம் என சீனா அறிவித்தது. இந்த வரிவிதிப்பு யுத்தம் மற்றும் இதன் தாக்கத்தால் நிலவி வரும் பொருளாதார மந்தநிலை அச்சுறுத்தல் காரணமாகவே நேற்று பங்குச் சந்தையில் வரலாறு காணாத சரிவு ஏற்பட்டது.
இந்நிலையில், வரிவிதிப்பு முறையில் தளர்வு ஏற்படுத்த வலியுறுத்தி, அமெரிக்காவுடன் பல்வேறு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கியிருப்பது பங்குச் சந்தையை சரிவில் இருந்து ஓரளவு மீட்டுள்ளது. மேலும், இந்திய ரிசர்வ் வங்கி தனது பொருளாதாரக் கொள்கைகளை வெளியிடவுள்ளதும், பல்வேறு நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளியாகவுள்ளதும் இந்தியப் பங்குச் சந்தையின் மீட்சிக்கு நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்துள்ளன.
ஒரே நாளில் ரூ.14 லட்சம் கோடி இழப்பு: முன்னதாக, சர்வதேச பங்குச் சந்தைகளில் நேற்று கடும் சரிவு ஏற்பட்டது. இதனால் இந்திய பங்குச் சந்தைகளும் கடும் வீழ்ச்சி அடைந்தன. நேற்று காலையில் வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண்ணான சென்செக்ஸ் 3,000+ புள்ளிகள், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண்ணான நிஃப்டி 1,000+ புள்ளிகள் சரிந்தன. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சுமார் 5% சதவீதம் வரை சரிந்தன.
எனினும், நேற்று மதியம் 2 மணிக்கு மேல் பங்குச் சந்தைகள் சரிவிலிருந்து சற்று மீண்டன. வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 2,227 புள்ளிகள் சரிந்து 73,138-ல் நிலை பெற்றது. நிஃப்டி 743 புள்ளிகள் சரிந்து 22,162-ல் நிலை பெற்றது. இந்த சரிவு சுமார் 3 சதவீதமாக இருந்தது. இது கடந்த ஆண்டு ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு ஏற்பட்ட மிகப் பெரிய சரிவு ஆகும். இதனால் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.14 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.
எனினும், சர்வதேச பங்குச் சந்தைகளின் சரிவுடன் ஒப்பிடும்போது, இந்திய பங்குச் சந்தைகளின் சரிவு சற்று குறைவாகவே இருந்தன. தைவான் பங்குச் சந்தை 9.7% சரிந்ததால் வர்த்தகம் நிறுத்தப்பட்டது. இதுபோல ஜப்பானின் நிக்கி 225 7.8%, ஹாங்காங்கின் ஹாங் செங் 13% சரிவை சந்தித்தன. மேலும் அமெரிக்காவின் டவ் பியூச்சர்ஸ், எஸ் அன்ட் பி 500 மற்றும் நாஸ்டாக் பியூச்சர்ஸ், ஜெர்மனியின் டாக்ஸ், பிரான்ஸின் சிஏசி 40, இங்கிலாந்தின் எப்டிஎஸ்இ 100 ஆகியவையும் நேற்று வீழ்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...