Published : 02 Apr 2025 07:02 PM
Last Updated : 02 Apr 2025 07:02 PM

சென்னை 2-ம் கட்ட திட்டத்தில் இயக்கம், பராமரிப்பு பணி: டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ஏற்பு கடிதம்

2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான ஏற்பு கடிதத்தை டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கியது

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான ஏற்பு கடிதம் ரூ.5,870 கோடி மதிப்பில் டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கியுள்ளது.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மாதவரம் பால் பண்ணை - சிறுசேரி சிப்காட் வரை 3-வது வழித்தடம், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் வரை 4-வது வழித்தடம், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை 5-வது வழித்தடம் ஆகிய 3 வழித்தடங்கள் மற்றும் மாதவரம், பூந்தமல்லி, செம்மஞ்சேரியில் உள்ள பராமரிப்பு பணிமனைகள் உட்பட 118.9 கி.மீ. நீளத்துக்கு இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான ஏற்பு கடிதம் டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ரூ. 5,870 கோடி மதிப்பில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கியுள்ளது.

இதற்கான ஏற்பு கடிதத்தை, டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் விகாஸ் குமாரிடம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் புதன்கிழமை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிதி இயக்குநர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் அமித் குமார் ஜெயின் (இயக்கம் மற்றும் சேவைகள்), சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், “இந்த ஒப்பந்தத்தில் இரண்டாம் கட்டத்தில் உள்ள 3 வழித்தடங்கள், மூன்று பராமரிப்பு பணிமனைகள் மற்றும் பயணிகளுக்கு சேவைகளை வழங்குதல் உட்பட இயக்கம் மற்றும் பராமரிப்பு தொடர்பான அனைத்து பணிகளும் அடங்கும். இதற்கான ஒப்பந்த காலம், இரண்டாம் கட்டத்தில் பயணிகளின் சேவை தொடங்கும் தேதியிலிருந்து 12 ஆண்டுகள் வரை செயல்பாட்டில் இருக்கும்,” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x