Published : 28 Mar 2025 03:43 PM
Last Updated : 28 Mar 2025 03:43 PM
விழுப்புரம்: செஞ்சியில் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். சுமார் 150 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் பழமையான இந்த வார சந்தையில் ஆடு,மாடுகள், அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
குறிப்பாக செஞ்சி பகுதியில் வளர்க்கப்படும் வெள்ளாடுகள் மேய்ச்சலுக்காக மலைப்பகுதிகளில் உள்ள இயற்கை இலைகளை மேய்ந்து வளர்வதால் இந்த வெள்ளாடுகளை வாங்குவதற்கு தேனி, கம்பம், சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட தமிழகம், முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கிச் செல்வார்கள் என்பதால் செஞ்சி வாரச்சந்தை மிகவும் பிரசித்தி பெற்ற சந்தையாக உள்ளது.
இந்நிலையில், வரும் 31-ம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் செஞ்சியில் ஆட்டு சந்தை இன்று காலையில் கலை கட்டியது. இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணி முதலே விவசாயிகள், தங்களது வளர்ப்பு ஆடுகளையும், வியாபாரிகள், வெளி மாவட்டத்திலிருந்து வாங்கி விற்கும் ஆடுகளையும் விற்பதற்காக கொண்டு வந்தனர், ஏராளமான வியாபாரிகள் அதை வாங்கிச் செல்வதற்காக வாகனங்களில் செஞ்சி வார சந்தைக்கு வந்திருந்தனர்.
மேலும், விற்பனைக்காக சுமார் 10 ஆயிரம் ஆடுகள் வரை விவசாயிகளும், ஆடு வளர்ப்பவர்களும் கொண்டு வந்திருந்தனர். குறிப்பாக வரும் 31-ம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாட இருப்பதால் ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற இந்த வார ஆட்டுச் சந்தையில் வெள்ளாடுகள் ஜோடி ரூ.7 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையிலும், செம்மறியாடுகள் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. இதனால் சுமார் ரூபாய் 3 கோடி வரை ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகளும் விவசாயிகளும் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT