Published : 25 Mar 2025 03:17 PM
Last Updated : 25 Mar 2025 03:17 PM
சென்னை: பொதுத் துறை நிறுவனங்களுக்கு உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்ய, மத்திய அரசின் ‘ஜெம் போர்ட்டலில்’ விண்ணப்பிக்கும் போது ஏற்படும் தொழில்நுட்ப பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என, சிறு தொழில்துறையினர் வலியுறுத்தி உள்ளனர்.
மத்திய அரசின் பொதுகொள்முதல் கொள்கையின் கீழ், பொதுத்துறை நிறுவனங்கள் தங்களின் ஆண்டு மொத்த கொள்முதலில் 25 சதவீதத்தை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் இருந்து கட்டாயம் வாங்க வேண்டும். இதில், 4 சதவீதம் எஸ்சி, எஸ்டி பிரிவு தொழில்முனைவோரிடம் இருந்தும், 3 சதவீதம் மகளிர் தலைமையில் செயல்படும் நிறுவனங்களிடம் இருந்தும் வாங்க வேண்டும்.
அதன்படி, பொதுத்துறை நிறுவனங்கள் ‘ஜெம் போர்ட்டல்’ மூலமாக பொருட்களை வாங்க டெண்டர் கோருகின்றன. இந்தப் போர்ட்டலில் பதிவு செய்ய சிரமம் ஏற்படுவதால், பொதுத்துறை நிறுவனங்களுக்கு பொருட்களை விற்க முடியாமல் சிறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு தீர்வு காண ஜெம் போர்ட்டல் அலுவலகத்தை சென்னையில் தொடங்க, மத்திய அரசுக்கு சிறுதொழில் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: “மத்திய அரசு திட்டங்களின் பயன்களை பெற இணையதளத்தில் விண்ணப்பம் செய்வது உள்ளிட்ட டிஜிட்டல் தொழில்நுட்பங்களை வரவேற்கிறோம். அதே சமயம், அதில் ஏற்படும் பிரச்சினைகளை விரைந்து களைய வேண்டும். சிறு நிறுவனங்கள் பலவற்றுக்கு ‘ஜெம் போர்ட்டலில்’ பதிவுசெய்ய தெரியவில்லை. ஆதார் எண், பான் எண் ஆகியவை சரியாக இருந்தாலும், பதிவு செய்யும் போது சில நேரம் தொழில்நுட்ப பிரச்சினையால் ஏற்கப்படுவதில்லை. இப்பிரச்சினைக்குத் தீர்வு காண யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என தெரியவில்லை.
ஒரு நிறுவனம் என்னென்ன பொருட்களை உற்பத்தி செய்கிறது என்ற விவரம் அடங்கிய அட்டவணையை உருவாக்க பலருக்கும் தெரியவில்லை. எனவே, ‘ஜெம் போர்ட்டல்’ தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அதன் அலுவலகத்தை சென்னையில் மத்திய அரசு அமைக்க வேண்டும். இதுதவிர, பதிவு செய்வது, டெண்டரில் பங்கேற்பது உள்ளிட்டவை தொடர்பாக தொழில்முனைவோருக்கு பயிற்சி அளிக்க மாவட்டங்களில் உதவி மையம் ஏற்படுத்த வேண்டும்,” என்று அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment