Published : 24 Mar 2025 05:02 AM
Last Updated : 24 Mar 2025 05:02 AM

5 சீன பொருட்கள் குவிவதை தடுக்க வரி விதிப்பு: உள்நாட்டு தொழிலை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை

அண்டை நாடான சீனாவில் இருந்து மலிவு விலையில் இறக்குமதி செய்யப்படும் 5 பொருட்களுக்கு பொருள் குவிப்பு எதிர்ப்பு வரியை இந்தியா விதித்துள்ளது. உள்நாட்டு தொழிலை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதுகுறித்து மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம், வருவாய் துறை வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வாக்குவம் பிளாஸ்க், அலுமினிய தாள், மின்னணு பாகங்களில் பயன்படுத்தப்படும் காந்தப்பொருட்கள், டிரைக்ளோரோ ஐசோசயனூரிக் அமிலம், பாலி வினைல் குளோரைடு பேஸ்ட் பிசின் ஆகிய 5 பொருட்கள் வழக்கமான விலைக்கும் குறைவாக சீனாவில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால், உள்ளூரில் அத்தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களால் சந்தையில் போட்டியிட முடியாத சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில், உள்ளூர் தொழிலை பாதுகாக்கும் வகையில் இந்த சீன பொருட்களுக்கு பொருள் குவிப்பு எதிர்ப்பு வரி விதிக்கப்படுகிறது. ஐந்து வருட காலத்துக்கு இந்த வரிவிதிப்பு அமலில் இருக்கும்.

அலுமினிய தாள் மீது பொருள் குவிப்பு எதிர்ப்பு வரியாக டன்னுக்கு 873 டாலர் வரை விதிக்கப்படுகிறது. அதேபோன்று, நீர் சுத்திகரிப்பில் பயன்படுத்தப்படும் டிரைக்ளோரோ ஐசோசயனூரிக் அமிலம் இறக்குமதிக்கு டன்னுக்கு பொருள் குவிப்பு எதிர்ப்பு வரியாக வகைப்பாட்டிற்கு ஏற்ப 276 டாலரிலிருந்து 986 டாலர் வரை விதிக்கப்படுகிறது.

மின்னணு வாகனங்கள், சார்ஜர், டெலிகாம் உபகரணங்களில் பயன்படுத்தப்படும் காந்தப்பொருட்கள் இறக்குமதிக்கான பொருள் குவிப்பு எதிர்ப்பு வரி 35 சதவீதம் வரை விதிக்கப்படுகிறது. வாக்குவம் பிளாஸ்க் மீது டன்னுக்கு 1,732 டாலர் வரி விதிப்பு அமல்படுத்தப்படுகிறது. இவ்வாறு அந்த அறிவிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x