Last Updated : 15 Mar, 2025 06:16 PM

 

Published : 15 Mar 2025 06:16 PM
Last Updated : 15 Mar 2025 06:16 PM

பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை: மத்திய அரசுடன் ஒப்பிட்டு தமிழக அரசுக்கு ப.சிதம்பரம் பாராட்டு

ப.சிதம்பரம் | கோப்புப்படம்

திருப்பத்தூர்: “பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறையை மத்திய அரசை விட தமிழக அரசு கட்டுப்படுத்தியதை பாராட்டுகிறேன்” என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ப.சிதம்பரம் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழக அரசின் நிதி மேலாண்மையை பாராட்டுகிறேன். முதலீடுகள் செய்வது மட்டும் முக்கியமல்ல. சாலை போன்ற திட்டங்களை நிறைவேற்றும்போது, தரத்தையும் தமிழக அரசு கண்காணிக்க வேண்டும். தமிழக அரசின் மொத்த கடன் ரூ.9.30 லட்சம் கோடி. இது மொத்த உற்பத்தியில் 3 சதவீதம். நிதி பற்றாக்குறையை 3 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்தியது பாராட்டுக்குறையது.

கடந்த 2020-21-ம் ஆண்டு அதிமுக அரசின் இறுதி பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.62,326 கோடியாக இருந்து. அது திமுக அரசின் இறுதி பட்ஜெட்டில் ரூ.41,635 கோடியாக உள்ளது. அதிமுக அரசை விட ரூ.21,000 கோடி வருவாய் பற்றாக்குறை குறைக்கப்பட்டதை பாராட்டுகிறேன். மத்திய அரசு பட்ஜெட்டில் நீதி பற்றாக்குறை 4.1 சதவீதமாக அறிவித்தனர். தமிழக அரசு பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை 3 சதவீதமாக அறிவித்துள்ளனர். மத்திய அரசுடன் ஒப்பிடும்போது நிதி பற்றாக்குறை கட்டுப்படுத்தப்பட்டதை பாராட்டுகிறேன்.

மேலும், அரசு ரூ.57,231 கோடி முதலீடு செய்வதை வரவேற்கிறேன். இது கடந்த ஆண்டை விட 22.4 சதவீதம் அதிகம். முதலீட்டுக்கு செலவழித்தால் வளர்ச்சி இருக்கும். பொருளாதார வளர்ச்சி 8 சதவீதம் இருக்கும் என ஆய்வறிக்கையில் கூறியுள்ளனர். மேலும், பல கோடி ரூபாயில் முதலீடு செய்தால் மட்டும் போதாது. அரசு கட்டிடங்கள், பாலங்கள் நெடுஞ்சாலைகள் தரமாக இருக்க வேண்டும். பல இடங்களில் தரமாக இருந்தாலும், சில இடங்களில் தரமாக இல்லை.

கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென எப்போதும் நான் வலியுறுத்துவேன். அதன்படி கல்விக்கான ஒதுக்கீடு முதலிடத்தில் உள்ளது. சென்னை அருகே உலகத் தரம் வாய்ந்த நகரம், 6-வது நீர்த்தேக்கம், அண்ணா பல்கலைகழகத்துக்கு ரூ.500 கோடி, விஞ்ஞான மையத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது. சிறு, குறு தொழில்களுக்கு வங்கி மூலம் ரூ 2.25 லட்சம் கடன் வழங்குவதாக அறிவித்துள்ளனர். ஆனால், வங்கிகள் கடன் தர இழுத்தடிப்பர். இதனால் வங்கி அதிகாரிகளை அழைத்து கடன் வழங்குவதை மாநில நிதி அமைச்சர் 3 மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும்.

மதுபான மோசடி நடந்ததாக பட்ஜெட்டில் கூறவில்லை, அண்ணாமலை தான் கூறுகிறார். காவிரி - வைகை - குண்டாறு திட்டம் நிறைவேற்ற 3 அணைகள், நீண்ட கால்வாய் கட்ட வேண்டும் என்று நான் அப்போதே கூறினேன். இதை ஆராயாமல் கடந்த அதிமுக அரசு திட்டத்தை அறிவித்தது. அவர்கள் திட்டத்தை தொடங்கி வைத்ததாக தெரியவில்லை. கல்லை மட்டும் போட்டுச் சென்றனர்.

இந்த பட்ஜெட் மொத்தத்தில் தமிழக மக்களுக்கு நலன் பயக்கும் என்பதே எனது கருத்து. கடைசி ஆண்டு பட்ஜெட் என்பதால் தமிழக அரசு அறிவித்த திட்டங்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். திட்டங்களை தரமான முறையில் நிறைவேற்ற வேண்டும். மதுவிலக்கு என்பது நடக்காத காரியம்,” என்று ப.சிதம்பரம் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x